கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்னமும் குற்றவாளிகள் பிடிபடவில்லை. சம்பவம் நடந்து 6 நாட்களாகிவிட்டன. ஆனால், இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறோம் எனச் சொல்கிறது இந்த அரசாங்கம். இந்த நிலையில் வேறொரு பெண் குழந்தையின் தந்தை நமக்கு கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார். சோகம், ஆற்றாமையுடன், எரிமலையாய் வெடித்து வெளிப்பட்டிருக்கின்றன வார்த்தைகள். கோவையில் இறந்த அச்சிறுமிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதம் இதோ;
முதலில், இப்படி ஒரு கடிதம் எழுதும் என்னை மன்னித்துவிடு மகளே! எழுதும்போதே பேனா நடுங்குகிறது. மனதில் ஏதோ ஒருவித வெறுமை இழையோடுகிறது. உன்னைக் காப்பாற்ற முடியாத ஊரில்தான் நானும் வாழ்கிறேன் என்பதில் வெட்கப்படுகிறேன். ஊடகங்களில் பார்த்த உன் புகைப்படம் இன்னும் என் கண்ணைவிட்டு மறைய மறுக்கிறது. உன் தாயின் கதறல் இன்னும் என் செவிப்பறையை அறைந்து கொண்டிருக்கிறது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த நீ, 6 வயதிலேயே இத்தனை கொடூர வேதனையை அனுபவித்து மாண்டுபோனாய். உன் கதறல் இந்தக் காற்றோடு கலந்திருக்கும் தானே? இங்கே எல்லோரும் ஓட்டுக்காக ஓடியாடிக் கொண்டிருக்கும்போது, உன் ஓலம் எதுவும் யாருடைய காதிலும் விழவில்லை என்பது வேதனையாக இருக்கிறது மகளே!.
சம்பவம் நடந்து 4 நாட்களுக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சாவகாசமாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்திச் சென்றிருக்கின்றனர். அவர்கள் சொல்லும் காரணம், சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி இல்லை என்பதுதான். அதனால்தான், துப்புத் துலக்க முடியவில்லையாம். துப்பு தெரிந்தால் தகவல் கொடுங்கள் என்று நோட்டீஸூம் ஒட்டிச் சென்றிருக்கின்றனர்.
உன்னைக் கொடூரமாக கொன்றவன் என்ன வேறு கிரகத்தில் இருந்தா வந்திருப்பான்? இல்லை.. குற்றத்தைச் செய்துவிட்டு வேற்று கிரகத்திற்கா தப்பி பறந்திருப்பான்? பிரேத பரிசோதனை அறிக்கை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாய் எனச் சொல்கிறது. காவல் துறையும் கண்ணா மூச்சி ஆடி வருகிறது மகளே! கட்சியை ஆரம்பித்து முதல் தேர்தலைச் சந்திக்கும் கமல்ஹாசன் வந்து உன் பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆளும் அரசாங்கமும் மற்ற கட்சிக்காரர்களும் உன் விஷயத்தைக் கண்டு கொள்ளவில்லை. ஓட்டு வேட்டையில் இருப்பதால், உன் மரணம் ஒரு பொருட்டாக அவர்களுக்குத் தெரியவில்லை மகளே!.
கடந்த ஆண்டு காஷ்மீரில் ஆஷிபா என்ற 8 வயது சிறுமி உன்னைப் போலவே, கொடூரமாக வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொலை செய்யப்பட்டாள். அப்போது நாடே அதிர்ந்தது; கொந்தளித்தது. அதே ஆதிக்க சாதியில் நீயும் பிறந்திருந்தால் இந்நேரம் நாடே கொந்தளித்திருக்கும். தேசிய ஊடகங்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் உனக்காக விவாதம் நடந்திருக்கும்.
இப்படிப்பட்ட பூமியில் தான் நானும் உலவிக் கொண்டிருக்கிறேன். எனக்கும் உன் வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது மகளே! மனிதர்கள் உருவில் மிருகங்களும் வாழும் இக்கொடிய உலகில், அவளை நான் காப்பாற்ற வேண்டும் என்று பதைபதைப்புடன் இருக்கிறேன் மகளே!
மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்! என்னை மன்னித்துவிடு மகளே!.
கடிதம் எழுதிய அத்தந்தையைப் போலவே, பெண் குழந்தையைப் பெற்ற அனைவரும் பதற்றத்தோடு வாழவேண்டிய நிலையில் இருக்கிறது இந்நாடு!.