Skip to main content

திட்டம்போட்டு காய் நகர்த்தும் சசிகலா! தினகரனுடன் கைக்கோர்க்கும் எடப்பாடி!

Published on 22/07/2021 | Edited on 23/07/2021
ddd

சிறையிலிருந்து சசி வெளியே வரும்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. கிட்டத்தட்ட 70 எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவை சந்திப்பார்கள் என அப்போது சசிகலா வட்டாரங்கள் சொன்னது. எல்லோரையும் நரேந்திர மோடியை காண்பித்து எடப்பாடி அமைதியாக்கிவிட்டார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு சசிகலா அமைதியாக இருக்கவில்லை. அதன் விளைவு தான், சமீபத்தில் நடந்த அ.தி.மு.க மா.செ.க்கள் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்.

 

சசிகலா வெறுமனே அ.தி.மு.க., ர.ர.க்களிடம் செல்போனில் பேசவில்லை. ஒரு பெரிய லிஸ்டே எடுத்துவைத்து வேலைசெய்துவருகிறார். அ.தி.மு.க.வின் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய மா.செ.க்கள், முன்னாள் மா.செ.க்கள், நகரம், ஒன்றியம் என அனைவரையும் சசிகலா சார்பில் அவரது நலன் விரும்பிகள் தொடர்புகொண்டு பேசிவருகிறார்கள். அவர்களது தேவைகளுக்கேற்றாற்போல் கரன்சி விநியோகமும் நடை பெறுகிறது. நடராஜனின் சகோதரர்களான பழனிவேலுவும் ராமச்சந்திரனும் இதனை கவனிப்பதுதான் அ.தி.மு.க.வில் ஹாட் டாபிக்கான பேச்சாக இருக்கிறது.

 

தேர்தல் நேரத்தில், ஓட்டிங் மெஷினில் தில்லுமுல்லு செய்தாவது நம்மை பா.ஜ.க ஜெயிக்க வைத்துவிடும் என்று எடப்பாடி சொன்னதை அ.தி.மு.க நிர்வாகிகள் நம்பினார்கள். ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரும் பண மழையில் நனைவார்கள் என்கிற எடப்பாடியின் வார்த்தைகளைக் கேட்டு சாதாரண ஒன்றிய நிர்வாகிகள்கூட சசிகலாவைப் பார்க்கச் செல்லவில்லை. சசிகலாவுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் அப்படியே ஆப்லைனுக்கு சென்றுவிட்டார்கள்.

 

தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மட்டும் பணம் ஆறாக ஓடியது. மற்ற இடங்களில் மந்திரிகள் செலவு செய்யவில்லை. தங்கள் தொகுதிகளைவிட மற்ற தொகுதிகளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. தேர்தலில் சீட் எதிர்பார்த்த தோப்பு வெங்கடாச்சலம் போன்ற பலரை எடப்பாடி நம்பவைத்துக் கழுத்தறுத்துவிட்டார்.

 

இதெல்லாம் நடந்துமுடிந்தபிறகு எடப்பாடியால் பழைய மாதிரி அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை சசிகலா சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், எதிர்காலம் என்னவாகுமென கவலைப்படும் அ.தி.மு.க.வினருக்கு நிம்மதியையும் பணத்தையும் செலவுசெய்து வியூகம் அமைத்துவரும் சசிகலாவுக்கு ஆரம்பகட்ட வெற்றிகள் கிடைத்துள்ளன.

 

சசிகலாவை எதிர்த்து மாநில அளவில் நிர்வாகிகளைக் கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடியால் முடியவில்லை. அப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றினால் ஓ.பி.எஸ். சம்மதிக்கமாட்டார் என்கிற அச்சம் எடப்பாடிக்கு இருக்கிறது. எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலம் புறநகர் மாவட்டத்துக்கு எடப்பாடிதான் மாவட்டச் செயலாளர். அவர் தலைமையில் நடந்த மாவட்ட கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் பொழுது மூன்று முக்கிய நிர்வாகிகள் வெளிநடப்பு செய்து அந்த தீர்மானத்தை எதிர்த்து பேட்டியளித்து எடப்பாடிக்கு அதிர்ச்சியை கொடுத்தார்கள்.

 

தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க.வின் 52 மாவட்டக் கழகங்களில் வெறும் பத்து மாவட்டம் மட்டுமே சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள். மற்ற மாவட்டங்கள் சிம்பிளாக நோ சொல்லிவிட்டார்கள். ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் போன்றவர்களின் மாவட்டங்களே சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுத்துவிட்டார்கள். மாஜி அமைச்சர் காமராஜ், சசிகலாவின் அண்ணன் திவாகரனால் பாதிக்கப்பட்டிருந்ததால் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள் என, சசிகலாவின் அசைவுகள் அ.தி.மு.க.வில் ஏற்படுத்தும் பாதிப்புகளை பட்டியலிடுகிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

 

முன்பு, கட்சி நிர்வாகிகளுடன் நடந்த பல ஆலோசனைக் கூட்டங்களில், "சசிகலா ஒரு பேய் நாம் மீண்டும் சசியிடமும், தினகரன், வெங்கடேஷ் போன்றவர்களிடம் அடிமையாக வேண்டுமா' என்கிற எடப்பாடி, சமீபத்தில் சென்னையில் சசிகலாவுக்கு எதிராகத் தலைமைக் கழகத்தில் கூட்டிய அ.தி.மு.க மா.செ.க்கள் கூட்டத்தில் அப்படி எதுவும் பேசவில்லை. சசிகலாவுக்கு எதிராக ஒரு நிர்வாகிகூட அந்தக் கூட்டத்தில் வாய்திறக்கவில்லை. ஆனால் எடப்பாடி கடந்த சட்ட மன்றத் தேர்தலில் மேற்கொண்ட வியூகத்தை கடுமையாக விமர்சித்தார்கள்.

 

அன்வர் ராஜா இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்தார். பா.ஜ.க.வுடன் கூட்டணி தவறான முடிவு என ஆரம்பித்த அவரது பேச்சைத் தொடர்ந்து பெரும்பாலான மா.செ.க்கள், பா.ம.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தது, விஜயகாந்தோடு கூட்டணி வைக்க மறுத்தது, டாக்டர் கிருஷ்ணசாமியோடு கூட்டணி வைக்காதது, சரத்குமாரை மதிக்காதது என எடப்பாடியின் சர்வ அசைவு களும் கேள்விக்குள்ளானது.

 

டாக்டர் ராமதாஸை ப்ளாக்மெயில் அரசியல் வாதியென வர்ணிக்கவும் அவர்கள் தயங்கவில்லை. அனைவரும், சி.வி.சண்முகம் பா.ஜ.க.வை விமர்சித்து அ.தி.மு.க. தோல்விக்கு பா.ஜ.க.தான் காரணம் என்றதை கோரஸாகவே வழிமொழிந்தார்கள். செஞ்சி ஏழுமலை மட்டும், சி.வி.சண்முகமெல்லாம் ஒரு ஆளா… நான் 1972-லிருந்து அரசியல் செய்துவருகிறேன். எடப்பாடி, சி.வி.சண்முகத்தையும் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனையும் வளர்த்துவிட்டார். சண்முகம் வன்னியர், நானும் வன்னியர் தான் என சண்முகத்திற்கு சவால்விட்டார்.

 

சி.வி.சண்முகம் அந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. ஆனால், சண்முகத்தை பேசவைப்பது எடப்பாடிதான் என்று நிர்வாகிகள் பேசிக்கொண்டனர். கொஞ்சநாள் ராஜேந்திரபாலாஜி, கொஞ்சநாள் செல்லூர் ராஜு, எப்போதும் ஜெயக்குமார், இப்போது சண்முகம் என டயலாக் பேசவைத்து ஓ.பி.எஸ். மகனை வஞ்சித்து விட்டார்கள். அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் கிடைக்கவேண்டிய மத்திய மந்திரி பதவியை கெடுத்துவிட்டார் எடப்பாடியென நேரடியாகவே குற்றம்சாட்ட, ஒட்டுமொத்தக் கூட்டமும் அமைதியாக வேடிக்கை பார்த்தது.

 

அமித்ஷா, மோடிக்காக ஆங்கிலத்தில் அறிக்கைவிட்ட ஓ.பி.எஸ்.ஸின் செயலை சிலர் கிண்டலாகவே பேசினார்கள். அந்த ஆங்கில அறிக்கைக்கு அடுத்தபடியாக பா.ஜ.க.வுடன் கூட்டு நிரந்தரம் என ஓ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ்ஸும் இணைந்துவிட்ட அறிக்கையில் குள்ள ரி வேலைசெய்கிறார் என சசிகலாவை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்ததை மா.செ.க்கள் ஏற்கவில்லையென்பதை பா.ஜ.க. கூட்டு தவறான முடிவு என மா.செ.க்கள் கூட்டத்தில் எழுந்த விமர்சனங்கள் தெளிவாக உணர்த்தியது.

 

சசிகலா, தன்னை நீக்கி, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டியது தவறு என போட்ட சிவில் வழக்கில் மிகவும் சீரியஸாக இருக்கிறார். தான் அரசியலைவிட்டு துறவறம் பூண்டதற்கு பா.ஜ.க.தான் காரணம் என்கிற கருத்தையும் சொல்லிவருகிறார். அதேநேரத்தில் தினகரனையும் டாக்டர் வெங்கடேஷையும் ஒதுக்கிவிட்டார். பா.ஜ.க. என்னை எதிர்க்கவில்லை என்கிற இமேஜையும் பரப்பிவருகிறார். ஓ.பி.எஸ். தனது மகனுக்குக் கிடைக்கவேண்டிய மந்திரி பதவியை எடப்பாடி கெடுத்துவிட்டார் என்கிற கோபத்தில் இருப்பதால், சசிகலா என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்.

 

இந்நிலையில் தினகரன் வீட்டுத் திருமணம் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. அந்த திருமணம் முடிந்தபிறகு தினகரன் ஆக்டிவாக அரசியலுக்கு வந்துவிடுவார். அதற்காக செந்தமிழன், சி.ஆர். சரஸ்வதி மூலம் பத்திரிகையாளர்களை சந்திக்கவைத்து அ.ம.மு.க. ஆக்டிவாக இருப்பதாக காண்பித்துவருகிறார். சசிகலா அரசியலுக்கு வந்தால் அவர்மீது பா.ஜ.க. வழக்குகள் போடுமென தினகரன் ஆதரவாளர்கள் பேசிவருகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் ஓபி.எஸ். சசிகலாவை வெளிப்படையாக ஆதரிப்பார் என்று சசிகலா வட்டாரங்கள் கூறுகின்றன. எடப்பாடிக்கு ஆதரவாக உள்ள வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் போன்றோர் மீது தி.மு.க. ஊழல் வழக்குகளை பாய்ச்சும். அப்போது எடப்பாடி முகாம் கலகலத்துப் போகும் என சசிகலா திட்டம்போட்டு காய் நகர்த்தி வருகிறார். அதே நேரத்தில் எடப்பாடி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள டி.டி.வி. தினகரனுடன் கைகோர்ப்பார். அதற்கான ஆலோசனைகள் தொடங்கிவிட்டன என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.