மதிமுகவில் இருந்து பிரிந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். கொள்கைப்பரப்புச் செயலாளராக செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலாவுக்கு ஆதரவாளராக இருந்ததுடன், அதிமுக பிளவுபட்டபோதும் சசிகலா அணியில் நீடித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மற்றும் டிடிவி பொதுக்கூட்டங்களில் இடியாய் முழங்கினார்.
ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணியில் இருந்து தினகரனை தாக்கிப் பேசினால், தக்க பதிலடி கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று தனது அமைப்புக்கு பெயர் சூட்டினார் தினகரன். மேலும், கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்தினார் டிடிவி தினகரன்.
இந்த விழாவில் நாஞ்சில் சம்பத் தென்படவில்லையே என்று பலரும் கேள்வி எழுப்பினர். அவருடைய செல்போன் எண்ணும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், டி.டி.வி. தினகரன் அணியில் இருந்து நான் விலகி விட்டேன் என நாஞ்சில் சம்பத் இன்று கன்னியாகுமரியில் அறிவித்துள்ளார்.
அவர், நான் இனிமேல் எந்த அரசியலிலும் இல்லை. ம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.அண்ணாவையும், திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம் என டி.டி.வி. தினகரன் நினைக்கிறார். இந்த அநியாயத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அரசியல் தமிழில் இனி அடைபட்டு கிடக்கமாட்டேன். அரசியலில் இனி நான் இல்லை. தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை காணலாம் என கூறியுள்ளார்.