அதிமுக தலைமைத் தொடர்பான வழக்கு கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் இரண்டு தரப்புமே தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், திடீர் திருப்பமாக இதுவரை அமைதியாக இருந்து வந்த பன்னீர்செல்வம் தரப்பு நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் புகழேந்தியிடம் கேட்டபோது, "ரொம்ப நாளா அண்ணன் பன்னீரோடு நாலு பேருதானே இருக்காங்கன்னு கிண்டலாகப் பேசிக்கிட்டே இருக்காங்க. அவர்களுக்கு நாங்கள் யாரென்று காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாளை தமிழகம் முழுவதும் உள்ள 80-க்கும் மேற்பட்ட அதிமுக மாவட்டச் செயலாளர்கள் சென்னையில் நடைபெறும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
அண்ணன் பன்னீர்செல்வம் அவர்கள் இப்போது வரையில் கழக ஒருங்கிணைப்பாளர். அவர் பெயர்தான் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. கட்சியில் அனைத்து விதமான மாற்றத்தையும் செய்யும் பொறுப்பு அவரிடம் இருக்கிறது. நாளை மாபெரும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடக்கும்போது எங்கள் வலிமை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். வேண்டுமென்றால் அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளட்டும். அவருக்கு மரியாதை கொடுத்து மேடைக்குக் கூட அழைத்துச் சென்று அமர வைப்போம். அவர்களைப் போல் பாட்டிலால் அடிக்க மாட்டோம். கார் கண்ணாடியை உடைக்க மாட்டோம். வாகனத்தின் டயரை பஞ்சர் செய்து சிரமத்தைக் கொடுக்க மாட்டோம். அவருக்கு உரிய மரியாதையைக் கொடுப்போம். அவர் வேண்டுமானால் வரட்டும்.
எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் நாளைக்கு வருவார்களா என்று கேட்கிறீர்கள். அவர் அணியைச் சேர்ந்தவர்கள் தானே தொடர்ந்து அண்ணன் பன்னீர்செல்வம் முன்பு தினந்தோறும் இணைந்து வருகிறார்கள். அதனால், நாளை கூட்டத்தில் பல அதிர்ச்சி காத்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் எடப்பாடியே எங்கள் அணிக்கு வந்து இணைந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இவர்களுக்கு நாங்கள் எப்போதும் பயப்படப் போவதில்லை. எங்களிடம் இவர்கள் காட்டும் பூச்சாண்டியும் எடுபடப் போவதில்லை. நாங்கள்தான் அதிமுக என்ற தீர்ப்பு விரைவில் நீதிமன்றத்தில் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறைய இருக்கிறது" என்றார்.