Skip to main content

உங்கள் ஓட்டு விலை ரூ.2000/- எடப்பாடியின் கரன்ஸி மேஜிக்!

Published on 16/03/2021 | Edited on 16/03/2021
ddd

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்று நம்புகிறது பா.ஜ.க. தலைமை. தொங்கு சட்டமன்றம் அமையலாம் என்றும் அது கருதுகிறது.

 

அண்மையில் தமிழகத்தில் இருந்து சென்ற ஒரு மருத்துவக் குழுவிடம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின்கட்கரி, இதை அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். எனவே, குதிரைபேர விளையாட்டின் மூலம் தமிழக அரசியலில் பலமாக விளையாடலாம் என்று விறுவிறுப்பாய்க் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது டெல்லி.

 

அதேநேரம் எடப்பாடி மெஜாரிட்டியோடு மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அவர் ஒரு பக்கம் சோழி உருட்டிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த பட்சம் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம், க்ளைமாக்ஸ் நேரத்தில் டிப்ஸ் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி. அதன்படி சராசரி 180 தொகுதி களுக்கு 3600 கோடி ரூபாயைச் செலவழிக்கவும் அவர் ரெடியாகிவிட்டார். அதேபோல் மேற்கொண்டு மற்ற செலவுகளைச் சமாளிக்கவும் தொகுதிக்கு மேலும் ஒரு 20 கோடி வீதம், இன்னொரு 3600 கோடியையும் அவர் ஒதுக்கியிருக்கிறாராம். இந்த வகையில் 7,200 கோடியைத் தேர்தல் களத்தில் வாரி இறைக்க முடிவுசெய்திருக்கிறது எடப்பாடித் தரப்பு.

ddd

ஜெ.’இருந்தபோது, ஒவ்வொரு அமைச்சரும், மா.செ.க்களும் மேலிடத்துக்கு கப்பம் கட்ட வேண்டிய நிலை இப்போது இல்லை. அதேபோல் தேர்தல் காலச் செலவுகளுக்காக மாதம் தோறும் பார்ட்டி ஃபண்டையும் யாரும் தரவேண்டியதில்லை. அதனால் அமைச்சர்களிடம் அதிகமாகவே பணப் புழக்கம் இருந்துவருகிறது.

 

இந்த நிலையில் தேர்தலுக்குத் தன் பங்காக 5ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி இறைக்கவும் எடப்பாடி தயாராக இருக்கிறாராம். இந்தத் தகுதியைச் சுட்டிக்காட்டித்தான், அவர் முதல்வர் வேட்பாளர் என்ற நாற்காலியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். எனவே தேர்தல் செலவுகளை எல்லாம் எளிதாக ஊதித் தள்ளிவிடலாம் என்று அ.தி.மு.க. தரப்பு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டிருக்கிறது.

 

அதேபோல் கூட்டணியில் இருக்கும் பவர் பார்ட்டியான பா.ஜ.க.வுக்கும், அது விரும்புகிற அளவுக்கு அள்ளித்தரவும் அ.தி.மு.க. தயாராகவே இருக்கிறதாம். இதற்கு முன் பா.ஜ.க. எந்த மாநிலத்தில் தேர்தலைச் சந்தித்தாலும், அவர்களது தேர்தல் செலவுகளுக்கும் தனது வள்ளல் கரத்தைத் தாராளமாகவே அ.தி.மு.க. நீட்டியிருக்கிறது. இந்தப் பணப் பரிவர்த்தனைகளை எடப்பாடியோடு சேர்ந்து கவனித்துக் கொண்டவர்கள் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, ’"சுகாதாரம்' விஜயபாஸ்கர் ஆகியோர்தான் என்கிறது டெல்லித் தரப்பு. வேட்பாளர் லிஸ்டிலும் இந்த மூவரின் பங்களிப்பு அதிகமாம்.

 

கட்சியின் ஒருங்கிணைப்பாளராகத் தான் இருந்தும் கூட, வேட்பாளர் தேர்வில் எடப்பாடி தன் ஆதரவாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற கடுப்பு ஓ.பி.எஸ்.சிடமும் இருக்கிறது. அவரது ஆதரவாளரான செம்மலைக்கே எடப்பாடி சீட் இல்லை என்று சொல்ல, இதைக்கேட்டு டென்ஷனாகிவிட்டாராம் ஓ.பி.எஸ். ""வேட்பாளர்களுக்கான பி ஃபார்மிலும் நான் கையெழுத்து இடமாட்டேன் என்பதையும் எடப்பாடியிடம் சொல்லிவிடுங்கள்''’என்று அவர் கோபமாகச் சொன்னதாகவும் தகவல். ஓ.பி.எஸ்.சை சமாதானப்படுத்த 9-ந் தேதி நள்ளிரவு வரை ஒரு பக்கம் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்தது.

ddd

இந்த நிலையில் தே.மு.தி.க. வெளியேறியதால், பா.ஜ.க.வும், த.மா.கா.வும், "அவர்களுக்கான சீட்டை எங்களுக்குக் கொடுங்கள்' என்று நச்சரிக்க ஆரம்பித்தது எடப்பாடிக்கு புதிய தலைவலியைக் கொடுக்க... அதையும் சமாளித்துள்ளார்.

 

இதற்கிடையே அ.ம.மு.க. 15 பேர் கொண்ட தனது முதல் வேட்பாளர் பட்டியலை 10-ந் தேதி வெளியிட்டது. அதில் 90 சதம் பேர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். மேலும் அவர்கள் அத்தனை பேரும் தொகுதியில் செல்வாக்கு பெற்றவர்கள் என்பதால், அது அ.தி.மு.க.வின் களத்தைக் கொஞ்சம் சிக்கலாகி விடுமோ என்ற தயக்கம் எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கிறதாம்

 

இந்தச் சூழலில் தி.மு.க.வுக்கு ஆதரவான அலை மெல்ல வீசுகிறது என்று சிலர், அவரிடம் சொல்லிக்கொண்டிருக்க, ""அதையெல்லாம் எப்படி மாற்றுவது என்று எனக்குத் தெரியும். கரன்சி மேஜிக்கால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை'' என்று தன் நண்பர்களிடம் எடப்பாடி நம்பிக்கையோடு சொல்லிவருகிறாராம்.