Skip to main content

7 அண்டாவில் தங்கம்..! பூதம் காக்கும் புதையல்.. ஆற்றங்கரை அரண்மனை ரகசியம்..!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

Tuticorin district vilathikulam vaipparu river aatrangarai palace story
                                                          அரண்மனை 

 

‘ஆற்றங்கரை’, பெயருக்கு ஏற்ப வைப்பாறு கரையோரம் இருக்கும் அழகிய கிராமம். வரப்போடு நெல் பயிர்கள் சாய்ந்து கிடக்க, அவற்றுடன் குசலம் விசாரித்துக்கொண்டிருக்கின்றன கொக்குகள். இயற்கையின் கருணைப் பார்வையால் இந்த ஆண்டு வஞ்சனையில்லாமல் பசுமை பூத்திருக்கிறது இந்த அழகிய கிராமம். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள இந்த கிராமத்தின் அரண்மனையில் ‘தங்க புதையல்’ இருப்பதாகவும், அதனை பூதம் ஒன்று காவல் காப்பதாகவும் கர்ண பரம்பரைக் கதைகள் இங்குண்டு.

 

ஊரின் முகப்பிலேயே ஆழி கருப்பசாமி சிலை வரவேற்கிறது. வழியெங்கும் பொங்கி குலுங்கிய இயற்கை அழகினூடே உள்ளது அந்த அரண்மனை. பழங்காலத்திற்கே உரிய கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்ட அந்த அரண்மனை, முகப்புக் குலையாமல் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. ஆனால், உள்ளே சில கட்டடங்கள் மட்டும் சிதிலமடைந்து கிடக்க, அங்கிருக்கும் மிகப்பெரிய தானியக்குதிர் (அந்த காலத்தில் களஞ்சியம் என அழைக்கப்பட்டது) நம்மை வரவேற்கிறது. மக்களிடம் வரியாக வசூலிக்கும் தானியங்களை இதில்தான் சேமித்து வைப்பார்களாம்.

 

முன்னோக்கி நகர்ந்தால் கேட்பாரின்றி கிடக்கும் ஆட்டு உரல், கவனிப்பாரின்றி கிடக்கும் குதிரை லாயம், கிழிந்த நிலையில் காணப்படும் முரசு, மண் மேடாக காணப்படும் தர்பார் மண்டபம் எல்லாம் அரண்மனை என்பதற்கான அடையாளத்தை இன்னமும் தாங்கி நிற்கிறது.

 

Tuticorin district vilathikulam vaipparu river aatrangarai palace story
                                                      வீர பெருமாள்

 

அங்கிருந்த அரண்மனைக் காவலாளி வீர பெருமாளோ, "இங்கே நான் கொஞ்ச காலமாத்தான் வாட்ச்மேன் வேலை பார்க்கிறேன். இப்ப அர்ஜூன் என்பவர் நிர்வாகம் பார்க்கிறார். அதற்கு முன்னர் அவுங்க அப்பா தனஞ்செயன்தான் அரண்மனையைக் கவனித்தார். அவர்கள் எல்லாம் மதுரையில் இருக்கிறார்கள். அவ்வப்போது இங்கு வந்து போவார்கள்” என்றவரிடம் புதையல் இருப்பதாக ஊரெல்லாம் பேசுகிறார்களே? என்கிற கேள்வியை முன் வைத்தால், "அது எல்லாம் எனக்குத் தெரியாதுய்யா” எனக் கூறிவிட்டு வாசலுக்கு வழியைக் காண்பித்தார். அவர் அருகிலிருந்த வேட்டை நாயான சிப்பிப்பாறை நாயும் நம்மை மிரட்டவே நடையைக் கட்ட வேண்டியதாயிற்று.

 

இருப்பினும், கரிசல் மண்ணுக்குத் தனி இயல்பு உண்டு. அங்கு வசிக்கும் மக்களும் எதையும் மனதிற்குள் வைக்க மட்டார்கள். அவர்களின் பேச்சுக்கும் தனி நடை உண்டு என்பதால் ஊரில் சிலரிடம் பேச்சு கொடுக்க, "எங்க தாத்தா இந்த அரண்மனையில் வேலை பார்த்தார். அதாவது ராசா(மன்னர்) குதிரை வண்டியில் வரும்போது அவருக்குப் பின்னாடியே ஓடிச் செல்லனும். ராசா இறங்கும்போது அவருக்கு உதவி செய்யுற வேலை பார்த்தார். ஒவ்வொரு வருஷமும் அரண்மனையில் இருந்து எங்களுக்கு அரிசி, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற தானியங்கள் கொடுப்பார்கள். அரண்மனைக்குன்னு நிறைய நிலம், தென்னந்தோப்பு, பனங்காடுகளும் உண்டு. அதையெல்லாம் குத்தகைக்கு விட்டு வரி வசூல் பண்ணுவார்கள். அதேபோல் அரண்மனைக்கு சொந்தமான ஆடு, மாடுகளை மேய்க்கிறதுக்கும் கூலி ஆட்கள் உண்டு. அவர்களுக்குக் கூலியாக கம்பரிசிதான் கொடுப்பார்கள்.

 

ராசா நகர்வலம் வரும்போது பெண்கள் தங்களது மாராப்பு சேலையைக் கீழே இறக்கி நின்று கும்பிடு போடனும். ஆண்கள் தங்களது மேல் துண்டை கக்கத்தில் கட்டி பவ்யமாக நின்று கும்பிடனும். எனக்கு விவரம் தெரிந்த நாட்கள் வரை இந்த நடைமுறை இருந்தது. ஒவ்வொரு வருஷமும் சித்திரை முதல் நாளில் நாளேறு நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, அரண்மனையில் முரசு சத்தம் ஒலிக்கும். ஊர்சனம் எல்லாம் அங்கு ஒன்று கூடியதும், ராசா கொடியசைச்ச உடன் நாளேறு நடக்கும். அன்றைக்கு சாயந்திரம் ஆற்றின் கரையோரம் இருக்கும் நட்டாத்தி அம்மனுக்கு, கொடை விழா நடத்தப்படும். ராசா குதிரை வண்டியில் வந்திறங்குவார்.

 

Tuticorin district vilathikulam vaipparu river aatrangarai palace story
                                                     நாகம்மாள்

 

அவருக்குப் பரிவட்டம் கட்டி, அழைத்துச் செல்வார்கள். கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் தேவராட்ட இசைக்கு ஏற்ப நடனமாடி முன்னே செல்ல, ராசா பின்னாடி வருகிற காட்சியைப் பார்க்கவே பரவசமாக இருக்கும். இப்பவும், சித்திரை முதல் நாள் திருவிழா நடத்தப்படுகிறது. ஆனால், அந்தப் பழைய பாரம்பரியம் இல்லை. ஆனால், ராசா வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு இப்போதும் கோவிலில் முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. அதேபோல் ஆற்றங்கரை ஜமீனுக்கு பாத்தியப்பட்டதுதான் குருவார்பட்டி. அங்குள்ள பெருமாள் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரண்மனை சார்பில் பூஜை நடத்தப்படும். அப்போது அருள் வந்து ஆடும் பூசாரி கருங்கிடாயின் கழுத்தைக் கடித்து ரத்தத்தைக் குடித்து அருள்வாக்கு சொல்லுவார். இப்போதும் இந்தப் பூஜை நிகழ்ச்சி தொடர்கிறது” என மண்மனம் மாறாமல் வெள்ளியந்தியாய் அள்ளித் தெளித்த நாகம்மாளிடம் அரண்மனைக் காவலாளியிடம் வைத்த அதே கேள்வியை முன்வைத்தோம். 

 

"நாங்க சின்னபுள்ளைகளாக இருக்கும்போது அங்கே புதையல் இருக்கு, அதை பூதம் காத்திருக்கு. அதனால், அரண்மனைப் பக்கம் போகாதீங்கன்னு சொல்லக் கேட்டிருக்கேன். சுப்பிரமணிய பெத்தனல் பூபதி அரசாட்சி செய்யும்போது, அவரது கனவில் நட்டாத்தி அம்மன் வந்து, ஆற்றில் 7 அண்டாவில் பணமும், தங்கமும் இருக்கு எடுத்துக்கோ என்று சொன்னதாம். அவரும் போய் ஆற்றில் இருந்து தங்கத்தையும், பணத்தையும் எடுத்து வந்து அரண்மனையில் வைத்து பூட்டிவிட்டார். ஆனால், பலி ஏதும் கொடுக்காமல் பூட்டி வைத்ததால், கடைசி வரை அந்த அறையைத் திறக்கவே முடியவில்லையாம். அதற்குப் பிறகு எவ்வளவோ முயன்றும் பூதத்திடம் இருந்து புதையலை மீட்க முடியவில்லையாம்” என்றார் அவர்.

 

Tuticorin district vilathikulam vaipparu river aatrangarai palace story
                                         முத்து சுந்தர பெத்தன அப்பணசாமி

 

ஆற்றங்கரை ஜமீனில் பணியாற்றிய முத்து சுந்தர பெத்தன அப்பணசாமியோ, “30 வருஷத்திற்கு மேலாக நான் அங்கேதான் வேலை பார்த்தேன். இப்ப நான் வேலை பார்க்கலை. அங்கு புதையல் இருக்கா? இல்லையா எனத் தெரியவில்லை. எங்க அப்பா காலத்தில் இருந்து இன்னும் நம்பப்படுகிறது. பூதத்திற்குப் பரிகாரம் செய்தால் புதையலை எடுக்கலாம். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல” என்கிறார் அவர்.

 

புதையலும், பூதமும் ஒன்றுதான்! இருக்கிறங்கவங்களுக்கு இருக்கு, இல்லைங்கிறவங்களுக்கு இல்லை! இதுதான் யதார்த்தம். 

 

படங்கள் : விவேக்