Skip to main content

"மாமா என்னமோ நடந்திருச்சி, இனிமே நடக்காது"... சொத்திற்காக மனைவியைக் கொன்ற கணவன்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

incident


ஒரு காலகட்டத்தில் வேண்டாத மனைவி, மருமகள்களைக் கண்டால் மண்ணெண்ணை அடுப்புகள் படீரென வெடித்துவிடும். பின் அது கணவன் அல்லது அவரது பெற்றோர் கைவரிசை எனத் தெரிய வரும். காலம் மாறிவிட்டது. கணவன்மார்களும் மாறிவிட்டார்கள். மனைவியின் சொத்தைத் தக்கவைப்பதற்காக கொடிய விஷப்பாம்பை விட்டுக் கணவனே கொலைசெய்த சம்பவத்தால் கேரள தேசமே பீதியில் உறைந்திருக்கிறது.
 


கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த விஜயசேனன் ரப்பர் எஸ்டேட் அதிபர். மனைவியோ நல்ல சம்பளம் கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை. ஏக செல்வச் செழிப்புதான். இவர்களுக்கு ஒரு மகன். ஒரு மகள். செல்வங்களை வாரி வழங்கிய கடவுள் அவரது மகள் உத்ராவை 20 சதம் மூளைவளர்ச்சி குன்றியவளாகக் கொடுத்துவிட்டான். இருப்பினும் அந்தக் குறைதெரியாமல் உத்ராவை வளர்த்தார் விஜயசேனன் தனது மகளுக்கு உரிய வயதில் வரன் தேட ஆரம்பித்தார் விஜயசேனன். பத்தனம்திட்டா நகரின் அடூர் பகுதியைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சூரஜ், உத்ராவைப் பற்றிய எல்லா விவரங்கள் தெரிந்தும் திருமணம் செய்ய முன்வந்தபோது விஜயசேனனுக்கு கொள்ளை சந்தோஷம். 2018-ல் சூரஜ்- உத்ரா திருமணம் விமரிசையாக நடந்தது.
 

incident


திருமணச் செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொண்டார். எச்.டி.எப்.சி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் தன் மருமகன் சூரஜுக்கு கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் (115 பவுன்), 5 லட்சம் ரொக்கம், 70 சென்ட் நிலம், கார் என்று திக்குமுக்காடும்படியாக வரதட்சணை கொடுத்திருக்கிறார் விஜயசேனன். சூரஜ் தங்கையின் படிப்புக்கான செலவையும் ஏற்றுக்கொண்டவர், அவனது தந்தை சுரேந்திரனின் பிழைப்பின் பொருட்டு அவருக்கு ஆட்டோ ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் சூரஜ்- உத்ராவின் வாழ்க்கை நன்றாகத்தான் போயிருக்கிறது. ஒரு மகனும் பிறந்து ஒன்றரை வயதான பிறகே தன் கோணங்கிப் புத்தியைக் காட்டியிருக்கிறான் சூரஜ்.

லௌகீகத்தில் அதீத நாட்டம் கொண்ட சூரஜிற்கு தன் மனைவி உத்ராவுடன் தாம்பத்ய வாழ்வில் திருப்தியில்லை. மனநிலை காரணமாக உத்ரா பாலியல் உறவில் அவ்வளவு நாட்டமில்லாமலிருந்திருக்கிறார். நாட்கள் போகப் போக சூரஜ், உத்ராவை வெறும் பணம் காய்ச்சி மரமாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறான். தனது ஆடம்பர வாழ்க்கைக்குத் தேவையான பணத்திற்காக உத்ராவைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியிருக்கிறான். அவனது அடி இம்சை தாளமாட்டாத உத்ரா தன் தந்தையிடம் போனில் சொல்லி அழுதிருக்கிறாள்.

ஒருகட்டத்தில் தன் பெற்றோர்களிடம், தன்னால் இனியும் தாங்கமுடியாது சூரஜ் உங்களிடம் காட்டுவது எல்லாம் நடிப்பு என்று சொல்லிக் கதறியிருக்கிறாள் உத்ரா. தன் மகள் இம்சைப்படு வதைச் சகிக்கமாட்டாத விஜயசேனன், கடந்த பிப்ரவரி மாதம் சூரஜின் வீட்டிற்கு வந்தவர், "என் மகளுக்கு டைவர்ஸ் கொடுத்துவிடுங்கள். நாங்கள் போகிறோம்'' என்று சொன்னதும், அதிர்ந்து போனார் சூரஜ். "மாமா என்னமோ நடந்திருச்சி, இனிமே நடக்காது'' என்று சொல்லி அவரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து போலிக் கண்ணீர் வடித்துச் சமாளித்திருக்கிறான்.
 


இந்நிலையில்தான் சூரஜின் உள்மனம் கபடமாகத் திட்டமிட்டது. நகைகள், பணம், நிலம், கார் என்று வரதட்சணையாக வந்துள்ளது. அடுத்து அவர்கள் குடும்பத்தில் மூன்றரை ஏக்கர் நிலம் மற்றும் அடுத்த மாதம் உத்ராவின் தாயார் பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார். அதன்மூலம் அவருக்கான நலத்தொகை 40 லட்சம் வர உள்ளது. இவற்றில் உத்ராவின் பங்கிற்கான பாதி நிலம். 40 லட்சத்தில் பாதி 20 லட்சம், உத்ராவிற்கு வந்து சேர்ந்துவிடும். நாம் டைவர்ஸ் கொடுத்துவிட்டால் வரதட்சணை மற்றும் வரவேண்டிய பங்குகள் மொத்தமாகப் போய் விடும். பதிலாக உத்ராவைக் கொன்றுவிட்டால். வாரிசு இருப்பதால் வரதட்சணையும் மிஞ்சும், வரவேண்டிய பங்கும் மகனுக்கு வந்து சேர்ந்துவிடும். பிறகு நாம் நினைத்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறான் சூரஜ் யூடியூப்பில் பாம்புகளின் நடவடிக்கைகளை அடிக்கடி பார்ப்பவன் சூரஜ். பாம்பைக் கடிக்க விட்டு உத்ராவைக் கொன்றுவிடும் திட்டத்திற்கு வந்தவன், கடந்த பிப். 26 அன்று அருகிலுள்ள கல்லுவாதுக்கல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற பாம்பு பிடிப்பவனிடம், யூ ட்யுப்பில் பாம்பு பற்றி வீடியோ போடவேண்டுமென்று சொல்லி விஷமுள்ள வைப்பர் பாம்பை 5 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்திருக்கிறான் சூரஜ்.

மார்ச் 2-ஆம் தேதியன்று இரவு உத்ரா தூங்கும்போது, தான் கொண்டு வந்த பாம்பை விட்டுக் கடிக்கவைத்திருக்கிறான். அந்தப் பாம்பு உத்ராவின் இடது கையில் கொத்த, வலியால் அவள் அலறித்துடித்த நேரத்தில் சூரஜ் குடும்பத்தினர் உத்ராவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சையில் உடல்நலம் தேறிய உத்ரா நேராக தனது பெற்றோர் வீட்டிற்குப் போய்விட்டார். பாம்பு கடித்த இடது கையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதால் அங்குச் சென்ற பிறகும் 20 நாட்களாகச் சிகிச்சையிலிருந்திருக்கிறார்.

ஆனால் பாம்பு எப்படி வந்தது என்ற விபரம் உத்ராவின் பெற்றோருக்குத் தெரியாமலேயே போய்விட்டது. தன்னுடைய முதல் திட்டம் தோல்வியடைந்த நேரத்தில், உத்ராவைக் கடித்த பாம்பை அந்த அறையிலேயே பிடித்த சூரஜ் அதை யாருக்கும் தெரியாமல் வெளியே கொண்டு சென்றுவிட்டவன், தன் மீது சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டான்.

உத்ரா தன் தாய் வீட்டிற்குப் போய்விட்டதால் அங்கேயே வைத்து பாம்பைக் கடிக்கவிட்டுக் கொன்றுவிடலாம் என்ற திட்டத்தில் அதற்கான காரியத்தில் இறங்கியிக்கிறான். தன்மீது சந்தேகம் வராதபடியிருக்க, இரண்டு மூன்று தடவை உத்ராவின் வீட்டிற்குப் போய் பாசமாக நடந்து கொண்டிருக்கிறான். அவனது திட்டத்தை அறியாத உத்ராவின் பெற்றோர், சூரஜ் வந்துசென்றதை யதார்த்தமாகவே எடுத்துக்கொண்டனர்.

கடந்த மே 5 அன்று மீண்டும் பாம்பு பார்ட்டி சுரேஷை நாடியவன், இம்முறை வேறு கதைக்காக கொடிய விஷமுள்ள கோப்ரா ரக, ராஜ நாகப் பாம்பை பத்தாயிரம் கொடுத்து வாங்கியிருக்கிறான் சூரஜ். அந்தப் பாம்பை சுரேஷ், ஒரு கண்ணாடி ஜாரில் அடைத்துக்கொடுக்க அதை கறுப்பு பேக் ஒன்றில் மறைத்துக்கொண்டு தன் மாமனார் வீடு வந்திருக்கிறான் சூரஜ். எப்போதும் வெறும் கையுடன் வரும் சூரஜ், இம்முறை கறுப்புப் பேக்குடன் வந்ததை உத்ராவின் பெற்றோர்கள் கவனிக்கவில்லை. மறுநாள் வீட்டின் தரைத் தளத்தில் இரவு ஒரு கட்டிலில் உத்ரா படுத்திருக்க அடுத்த கட்டிலில் சூரஜ் படுத்திருக்கிறான். அவள் உறங்கிய பிறகு கொண்டுவந்த ஜாரில் அடைத்துவைத்திருந்த ராஜநாகத்தை எடுத்து அவள் படுத்திருந்த கட்டிலின்மேல் விட்டிருக்கிறான். பாம்பு கொத்தி உத்ராவின் உடல் அடங்கியதை உறுதிசெய்த பின், காலை எழுந்து எதுவுமறியாதவன் போல வெளியே வந்திருக்கிறான். வழக்கமாக காலை அவளுக்குக் காபி கொண்டு வந்த உத்ராவின் தாய் ரேணுகா, அவள் சலனமற்றுக் கிடப்பதைப் பார்த்து அலற, பதைபதைத்துப் போன உத்ராவின் தந்தையும் சிலரும் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உத்ரா இறந்துபோக, உத்ராவின் தம்பிக்கு சூரஜின் மேல் சந்தேகம் வந்திருக்கிறது. பூட்டிய ஏ.சி.ரூமிற்குள் பாம்பு நுழைய சான்ஸ் இல்லை. அன்றைய இரவு மருமகன் சூரஜ் மட்டுமே உடனிருந்தான். எனவே என் மகள் மரணத்தில் சந்தேகமிருக்கிறது என்று கொல்லம் மாவட்டத்தின் எஸ்.பி.யான ஹரிசங்கரிடம் புகார் கொடுத்திருக்கிறார் விஜயசேனன். பாம்பை விட்டுக் கடிக்க வைத்திருக்கலாமோ என்ற சந்தேகத்தில் புகாரை கொல்லம் ரூரல் க்ரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி. அசோகனை விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் எஸ்.பி. ஆரம்ப விசாரணையின் போது மழுப்பிய சூரஜ், கேரள போலீசின் ஸ்பெஷல் கவனிப்பில் உண்மையைக் கக்கியிருக்கிறான்.
 

http://onelink.to/nknapp


"சூரஜ் பாம்பைக் கடிக்கவிட்டதற்கு கண்கண்ட சாட்சியில்லை. இருப்பினும் தடயவியல் துறை மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை, அசைக்கமுடியாத பிற விஷயங்கள் மூலம் மெட்டீரியல் எவிடன்ஸ்களை சேகரித்துள்ளோம். கோப்ராவை சூரஜ்ஜிற்கு விற்பனை செய்த சுரேஷ், அதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டுக்கொடுத்திருக்கிறான். அதிலுள்ள இரண்டு பேரின் கைரேகைகள், தவிர, ஜாரில் ஒட்டிக்கொண்டிருந்த பாம்பின் டிஸ்யூக்கள், போஸ்ட்மார்ட்டம் செய்த பாம்பின் டிஸ்யூக்கள் இரண்டையும் தடயவியல் துறை ஒத்துப்பார்த்ததில் அவை ஒத்துப்போயிருக்கின்றன. இந்த வழக்கில் சூரஜுக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுப்போம்'' என அழுத்தமாகச் சொல்கிறார் எஸ்.பி.

படங்கள் : ப.இராம்குமார்