Skip to main content

உள்ளே இருக்க வேண்டியவர் எச்.ராஜாதான்... வைகோ அல்ல...: ஆ.வந்தியத்தேவன் பேட்டி

Published on 14/04/2018 | Edited on 14/04/2018
vaiko



பிரதமரை வரவேற்காமல், ‘மோடியே திரும்பி போ' என்று கருப்பு கொடி காட்டி அவமானப்படுத்தியவர்களை தமிழக அரசு உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். வைகோ, நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து நடை பயணம் செல்கிறார். இதை டிவியில் பார்த்த 5 வயது  சிறுமி நியூட்ரின் சாக்லெட் நிறுவனத்தை ஏன் எதிர்க்கிறார்கள் என கிண்டலாக கேட்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ஏன் வான் வழியில் சென்றார். சாலை வழியாக வரவேண்டியது தானே என வைகோ  கேட்கிறார். வைகோவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும். வைகோ சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். அவரை உடனடியாக கைது செய்யாவிட்டால் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தார்.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார் ம.தி.மு.க. வெளியீட்டு அணிச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன்.
 

ஆர்.எஸ்.எஸ். நிகழ்த்திய வன்கொடுமைகளுக்கு அளவே கிடையாது. பாபர் மசூதி இடிப்பில் தொடங்கி கிறிஸ்துவ, இஸ்லாமிய சிறுபான்மை மக்கள், தங்கள் கருத்துக்கு மாறுபட்ட எண்ணம் உடையவர்களை இந்த உலகத்திலேயே உலவவிடக்கூடாது என்பது அவர்களுடைய தீவிரவாத சிந்தனை. இதைத்தான் அவர்கள் கடந்த காலத்தில் இருந்து இதுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
 

அவர்கள் உண்ணக்கூடாது என்று சொன்னால் மாட்டுக்கறியை உண்ணக்கூடாது. தமிழை கேவலப்படுத்தி பேசுவார்கள். இப்படி எல்லா வகையிலும் பிறரை அவமதிப்பதையும், பிற பண்பாட்டை, மொழியை சிதைப்பதையும் குறிக்கோளாக கொண்டவர்களின் பின்னணில் இருக்கக்கூடிய எச். ராஜா, எவ்வளவு தூரம் ஒரு முரட்டுத்தனமான அணுகுமுறை உள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
 

​vandhiyadevan


நியூட்ரினோ திட்டம் எவ்வளவு ஆபத்தானது என்று கேரளாவைச் சேர்ந்த விஞ்ஞானி பத்மநாபன் ஆதாரப்பூர்வமாக பேசியிருக்கிறார். இந்த திட்டம் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து திறந்த விவாதங்கள் நடத்துவது தவறு இல்லை. இதுஒருபுறம் இருக்கட்டும். உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும்கூட காவேரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்து இதுவரை பிரதமர் எந்த கருத்தையும் சொல்லவில்லை. அனைத்துக் கட்சி தலைவர்களுடன் சென்று சந்திக்க நேரம் கொடுக்கவில்லை.
 

மத்திய அரசுக்கு, பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கொடுத்த எதிர்ப்பையும் தாண்டி மக்கள் எதிர்ப்புணர்வாக மாறியிருக்கிறது. சமுதாயத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களும் வீதியில் இறங்கி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கக் கூடிய நிலையில், அதற்கு எந்த பதிலையும் சொல்லாமல் இங்கு பிரதமர் வந்து செல்வது என்ன நியாயம். தமிழக மக்களை இந்திய குடிமக்களாக கருதுவதாக பிரதமர் இருந்தால் அந்த உணர்வை வெளிப்படுத்திருக்க வேண்டுமா இல்லையா.

 

h.raja


 

இதையெல்லாம் விடுத்து வழக்கம்போல அவதூறுகளை அள்ளி வீசி வைகோவை கைது செய்ய வேண்டும் என்று மிரட்டி பார்க்கிறார் எச்.ராஜா. சட்டம், வழக்கு, சிறை, அடக்குமுறை இதுவெல்லாம் வைகோவுக்கு புதிது அல்ல. நியாயமாக பார்த்தால் உள்ளே இருக்க வேண்டியவர் எச்.ராஜாதானே தவிர வைகோ அல்ல. வைகோ செய்த தவறு என்ன என்று எச்.ராஜா நிரூபிக்கட்டும். மக்களுக்கான பணியில் ஈடுபடுவதிலிருந்து, மக்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்பதிலிருந்து பின்வாங்க வேண்டும், அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக எச்.ராஜா விடுகிற மிரட்டல்களுக்கு வைகோ மட்டுமல்ல, தமிழக மக்களும் அடிபணிய மாட்டார்கள்.
 

எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடியை விமர்சிப்பதே நோக்கம். பிரதமருக்கு எதிரான போராட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறாரே?
 

காவிரி மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை நடத்தினார் ஸ்டாலின். அந்த பயணத்தின் வீடியோ பதிவு உள்ளது. அதேபோல் இந்த பயணத்தின் தொடங்கக் கூட்டம், நிறைவு கூட்டம் வீடியோ பதிவும் உள்ளது. இந்த பயணத்தில் எந்தக் கட்சிக்காரர்களும் கட்சிக் கொடியை பிடிக்கவில்லை. அனைவரும் பச்சை துண்டைத்தான் போட்டிருந்தோம். இதை வரவேற்று பொதுமக்களும் எங்களுடன் பயணித்தனர்.
 

பிரதமர் எப்போது வருகிறார். எந்த வழியாக செல்கிறார் என்பது தெரியாது என்பதால், பிரதமருக்கு நேரிடையாக சென்று கருப்பு கொடி காட்ட முடியாவிட்டாலும் தமிழ்நாடு முழுக்க பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடியை கட்டுங்கள், கருப்பு சட்டை அணியுங்கள், கருப்பு சின்னம் அணியுங்கள் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
 

அதன்படி தமிழகம் முழுக்க மக்கள் கருப்புக்கொடிகளை வீடுகளில் கட்டியிருந்தனர். கருப்பு சட்டை அணிந்திருந்தனர், கருப்பு சின்னம் சட்டையில் குத்தியிருந்தனர். கருப்புக்கொடி காட்டியது, கருப்பு பலூன் பறக்க விட்டது உலகம் முழுவதும் பேசப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் ''கோ பேக் மோடி'' (gobackmodi) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இது கட்சிக்கார்கள் மட்டும் செய்ய முடியுமா? ஒட்டுமொத்த தமிழ் உணர்வுள்ளவர்கள் செய்தது. 
 

சார்ந்த செய்திகள்