வேலூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்குமார். முன்னாள் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவாகவுள்ளார். அதிமுகவில் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். அடிப்படையில் விவசாயியான இவர் ஜல்லிக்கட்டு மீது தீராக்காதல் கொண்டவர். இதற்காக ஜல்லிக்கட்டு காளையை வளர்த்துவந்தார். வாயுபுத்திரன் என்கிற பெயருடைய இந்தக் காளை, வாடிவாசல் திறக்கப்பட்டு மைதானத்தில் இறங்குகிறது என்றாலே வீரர்கள் ஒதுங்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு மைதானத்தில் புகுந்துவிளையாடும். இது களமிறங்கிய மைதானத்தில் பெரும்பாலும் வெற்றி பெற்று முதல் பரிசு அல்லது இரண்டாம் பரிசையே பெற்று வரும். இதனால் வேலூர் மாவட்டத்தில் வாயுபுத்திரனுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் இன்று ஜனவரி 22ந்தேதி, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொள்ள வாயுபுத்திரனை நிம்மியம்பட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். நிம்மியம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் போட்டியில் கலந்துக்கொண்டு வழக்கம் போல் முதல் பரிசை பெற்றுள்ளது. இதற்காக ஹீரோஹோண்டா பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பரிசு பெற்றுக்கொண்டபின் அதை ஊருக்கு அழைத்து வரும் முன், தண்ணீர் காட்டுவதற்காக அதை ஒரு கிணற்றடிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மதியம் 3 மணியளவில் எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் தவறிவிழுந்துள்ளது. விழுந்த வேகத்தில் அடிப்பட்டு தண்ணீரில் 1 மணி நேரம் தத்தளித்துள்ளது. அதை காப்பாற்றும் நோக்கில் நூற்றுக்கணக்கானவர்கள் ஈடுப்பட்டும் வாயுபுத்திரனை காப்பாற்ற முடியவில்லை. கிணற்றிலேயே வாயு புத்திரன் இறந்த தகவலை கேள்விப்பட்டு அதன் ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இது அப்பகுதி பொதுமக்களையும் வருத்தப்படவைத்துள்ளது.