முதல் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை "பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு" உருவாக்கிட தமிழக அரசால் 1.1.2019 முதல் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் தடை நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்தும், தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி, அன்பழகன், கருப்பணன், உதயகுமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. சமீபகாலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பதை ஓ.பன்னீர்செல்வம் தவிர்த்து வருகிறார் என்றும், எடப்பாடி பழனிசாமிதான், ஓ.பன்னீர்செல்வத்தை பொருட்படுத்தாமல் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனைகளில் ஈடுபடுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விசாரித்தபோது, இயற்கை முறையில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக கோவை சென்றுள்ளார். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மருத்துவமனையிலேயே தங்கி இருந்து அவர் சிகிச்சை பெற உள்ளார் என்பதால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.