Skip to main content

ரஜினிக்கும் தலைவர்களுக்கும் நட்பு எப்படி ?

Published on 02/01/2018 | Edited on 03/01/2018
ரஜினிக்கும் தலைவர்களுக்கும் நட்பு எப்படி ?

ஒரு ஃப்ரெண்ட்ஷிப் டைரி  


ரஜினி என்ற மூன்று எழுத்து சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் ஆளுமை கொண்டதுதான். அவர் பல காலம் சினிமாவில் ஆட்சி செலுத்தினார். அரசியலில் நேரடியாக வருவதற்கு முன்பே சிலகாலம் ஆட்சி செய்துள்ளார். அவர் முன்பிருந்தே அரசியல் தலைவர்களுடன் நட்புடனேயே இருந்தார். 

அத்வானி



பொதுவாகவே பா.ஜ.க தலைவர்களுக்கும் ரஜினிக்குமான உறவு பிரபலமானதே. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்து அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்தார் ரஜினி. அதற்கு அடுத்த தேர்தலான 2009 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் சென்னை வந்த பொழுது  ரஜினியை சந்தித்தார் அத்வானி. இப்படி,  பா.ஜ.க. வின் மூத்த தலைவரான அத்வானிக்கும், ரஜினிக்கும் நீண்டகால நட்பு உள்ளது. அத்வானியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.  

நரேந்திர மோடி


மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதிருந்து இருவருக்குமான நட்பு உள்ளது. 2014 தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது தமிழ்நாட்டிற்கு வந்து அவர் சந்தித்தது ரஜினியைத்தான். மோடி எனக்கு நலன் விரும்பி, நான் அவருக்கு நலன் விரும்பி என்று  கூறினார் ரஜினி. ரஜினி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டபோது மோடி நலன் விசாரித்ததும் குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் ரஜினி உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் இருந்தபோது மோடி சென்று நலம் விசாரித்தார்.

பால் தாக்கரே



'சிவ சேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே எனக்கு கடவுளுக்கு நிகரானவர்' என கூறும் அளவிற்கு ரஜினிக்கும், பால் தாக்கரேவிற்கும் இடையே உறவு இருந்தது.  எந்திரன் படம் வெளியான சமயத்தில் மும்பை சென்று அவரை சந்தித்தார் ரஜினி. பால் தாக்கரே இறந்தபோது அவருக்கான இரங்கல் குறிப்பில், 'பால் தாக்கரே நல்ல தலைவர், தந்தை போன்றவர் எனக்கும் அப்படித்தான்' என்று  குறிப்பிட்டிருந்தார்.

கலைஞர் 


இருவரும் ஆரம்பத்திலிருந்தே சுமூகமான நட்பை கொண்டிருந்தனர். 1996ல் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெல்ல ரஜினி முக்கிய  காரணமாக விளங்கினார். கலைஞர் தொடர்பான  மற்றும் தி.மு.க. விழாக்களில் ரஜினி பங்கேற்பதும், ரஜினி குறித்த விழாக்களில் அவர்கள் பங்கேற்பதும் இன்றும் நடந்துகொண்டிருப்பவையே.

ஜெயலலிதா


 
ஆரம்பத்தில் இவர்களுக்கிடையே  நட்பு  குறிப்பிடும்படியாக இல்லை. 1996ல் இருவருக்கும் இடையேயான வெறுப்பு நேரடியாக மேடைகளில் காட்டிக்கொள்ளும் அளவில் இருந்தது. வீரப்பன் கொல்லப்பட்ட  பிறகு ஜெயலலிதாவுக்கு  நடந்த பாராட்டு விழாவில், "வீரலட்சுமி, தைரிய லட்சுமி..." என்று ரஜினி பாராட்ட    இருவருக்கும் மீண்டும் நட்பு பூத்தது. ஜெயலலிதா இறக்கும்வரை இருவரும் நட்புடனேயே இருந்தனர்.

தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து தலைவர்களுடனுமே நட்போடு இருந்தவர் தான் ரஜினி. ஆனால், 'பாபா' படம் வெளியான சமயத்தில் படப்பெட்டிகளைக் கைப்பற்றியும் திரையரங்குகளை முற்றுக்கையிட்டும் பல பிரச்சனைகளைத் தந்தது பா.ம.க. ஆனால், அன்புமணி ராமதாஸின் மகள் திருமணத்திற்கு அழைத்து, அதில் லதா ரஜினிகாந்தும் கலந்து கொண்டார்.  ரஜினி தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், அரசியல் ஆலோசனை, சந்திப்பு என அடிக்கடி நிகழ்வதை காணலாம். அப்படி அவர் அரசியல் ஆலோசனை கேட்டவர்களில் முக்கியமானவர் தமிழருவி மணியன். இதுதவிர மற்ற சில அரசியல் கட்சி தலைவர்களும் ரஜினியுடன் நட்புடனே இருந்தனர். ரஜினிக்கு அரசியல் புதிதல்ல, ரஜினிக்கு ஆதரவு கரங்கள் அதிகம் இருந்தாலும் ஆட்சி நாற்காலியில் அமர்வாரா  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கமல்குமார் 

சார்ந்த செய்திகள்