1929 ஆம் ஆண்டுடன் இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு, புதிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இரட்டை ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தும்போதே பிரிட்டிஷ் அரசு அப்படித்தான் உறுதி அளித்திருந்தது. 1927 ஆம் ஆண்டு இந்தியா வந்த சைமன்கமிஷன் அளிக்கும் அறிக்கையின்படி சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி சீர்திருத்தம் கொண்டுவரப்படவில்லை. எனவே 1930 வரை அரசு நீடிக்கப்பட்டது.
இந்த மூன்றாவது ஆட்சிக் காலத்தில்தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வளர்ச்சியடைந்தது. 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு சவுந்தரபாண்டியனார் தலைமை வகித்தார். மாநாடு மாநிலஅளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த மாநாட்டுக்கு பின்னர் சி.கணேசன், சிவஞானம், புலவர் செல்வராஜ், அரங்கநாதம், முத்துப்பிரகாசம் ஆகியோர் சுயமரியாதை இளைஞர் மன்றம் தொடங்கப்பட்டது.
இந்த மன்றத்தில் வாரந்தோறும் நடைபெறும் விவாதங்களில் அறிஞர் அண்ணா பங்கேற்பார். அப்போது அவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.
இதே ஆண்டு பிப்ரவரி மாதம்தான் சென்னை மாகாண சட்டமன்றத்தில் தேவதாசி முறைக்கு எதிரான தீர்மானத்தை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கொண்டு வந்தார். ஆனால், அந்த தீர்மானத்தை கொண்டுவர சத்தியமூர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் நீதிக்கட்சியைச் சேர்ந்த உயர்குடி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீதிக்கட்சி தொடங்கிய காலத்திலேயே இதுபோன்ற முற்போக்கான கருத்துகளை பிரச்சாரம் செய்ய முடிந்தது. பிரிட்டிஷாரிடம் அதுவரை பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருந்த தவறான கருத்துகள் உடைந்து நொறுங்கத் தொடங்கின. நீதிக்கட்சி அரசு அமைந்தபிறகு பல நல்ல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
காங்கிரசுக்குள் இருந்தாலும் பெரியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்ட சில தலைவர்கள் சமூகத்தில் புறையோடிக் கிடக்கும் கேடுகெட்ட வழக்கங்களுக்கு எதிராக போராடி வந்தனர். காங்கிரஸில் அவர்களுடைய குரலுக்கு மதிப்பில்லை என்ற நிலையில் பெரியாரும் மற்றவர்களும் வெளியேறினர்.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கொண்டுவந்த தீர்மானத்தை வெளியில் இருந்து தந்தை பெரியாரும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும் ஆதரித்தனர். தீர்மானத்தை எதிர்த்த சத்தியமூர்த்தி அய்யரை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கடுமையாக சாடிய நிகழ்வு வரலாற்றில் பதிவுபெற்றது.
“எங்களுக்கு இந்த பெருமை வேண்டாம். இனி உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு பொட்டுக்கட்டி கவுரவத்தை கொடுங்கள்” என்று சவுக்கடி கொடுத்தார். சத்தியமூர்த்தி அய்யர் மேற்கொண்டு பேசவி்லலையே தவிர தீர்மானத்தை எதிர்த்து அது தாக்கல் செய்யப்படுவதை தடுத்தார்.
இந்நிலையில்தான், 1930 ஆம்ஆண்டு சென்னை மாகாணத்துக்கு நான்காவது தேர்தல் நடைபெற்றது.
நீதிக்கட்சி வேட்பாளர்கள் 35 பேர் வெற்றி பெற்றனர். தவிர, நீதிக்கட்சி ஆதரித்த பலரும் சுயேச்சையாகவும், போட்டியின்றியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல்வராக இருந்த சுப்பராயனின் தேசியவாத சுயேச்சைகளும், லிபரல் கட்சியினருமாக 10 பேர் வெற்றிபெற்றனர். போட்டியின்றி 35 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பிரிட்டிஷ் கவர்னர் ஜார்ஜ் ஃபெடரிக் ஸ்டான்லி நியமித்த உறுப்பினர்கள் ஆதரவுடன் சித்தூர் திவான் பகதூர் சி.முனுசாமி நாயுடு சென்னை மாகாணத்தின் நான்காவது முதல்வராக பொறுப்பேற்றார். அவருடைய அமைச்சரவையில் சர்.பி.டி.ராஜன், குமாரசாமி ரெட்டியார்ஆகிய இருவரும் அமைச்சர்களாக இருந்தனர்.
இந்தக் காலத்தில்தான் தந்தை பெரியார் பார்ப்பனர் அல்லாதாரின் நலனுக்காக ஒரு திட்டத்தை வகுத்து, அதை ஒப்புக்கொண்ட நீதிக்கட்சியுடன் இணைந்து பணியாற்ற முன்வந்தார். அந்தக் கட்சிக்கு சொந்தமான திராவிடன் தினசரி பத்திரிகையின் பொறுப்பையும் ஏற்று செயல்பட்டார்.
ஆனால், அமைச்சரவையில் ஜமீன்தார்களுக்கு இடமளிக்கவில்லை என்று குறைகூறி 1932 ஆம் ஆண்டு அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தஞ்சையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் சிறப்பு மாநாட்டில் முனுசாமி நாயுடு தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு பொப்பிலி அரசர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவரே முதல்வராகவும் பொறுப்பேற்றார்.
பொப்பிலி அரசர் காலத்தில் நீதிக்கட்சியின் போக்கில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஜமீன்தார்களும், சீமான்களும் முக்கியத்துவம் பெற்றனர். இதையடுத்து, பெரியார் கட்சி நடவடிக்கைகளில் அக்கறையில்லாமல், திராவிடன் பத்திரிகை வளர்ச்சியிலும் கவனம் இல்லாமல் இருந்தார்.
இதற்காக பெரியாரை பழிதீர்க்கும் வகையில் அவர் மீது ராவ் பகதூர் ஜெயராம் நாயுடு என்பவர் ஒரு வழக்கைப் போட்டார். திராவிடன் பத்திரிகைக்காக பெற்ற காகிதக் கடனுக்காக நீதிமன்றத்தில் டிகிரி பெற்றார். அதைத்தொடர்ந்து பெரியார் வேலூர் சிறையில் 15 நாட்கள் தண்டனை பெற்றார்.
நீதிக்கட்சி வெற்றி பெற்ற கடைசித் தேர்தல் இதுதான். உட்கட்சி பூசல், மக்களின் அதிருப்தி, காங்கிரசின் வளர்ச்சி, நாட்டில் அதிகரித்த தேசிய உணர்வு ஆகிய காரணங்களால் நீதிக்கட்சி இதற்குப்பின் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற இயலவில்லை. அது ஜமீன்தார்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்ததால் சாதாரண மக்களின் ஆதரவை முற்றிலும் இழந்து விட்டது. பொப்பிலி அரசரின் ஊழல் மலிந்த திறமையற்ற நிர்வாகம் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றது.
1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாவது தேர்தல் நடைபெற்றது. சுயாட்சிக் கட்சி 29 இடங்களில்தான் வெற்றி பெற்றது. நீதிக்கட்சி தோல்வி அடைந்தது. சுயேச்சைகளும், அதிருப்தி வேட்பாளர்களும் நிறைய வெற்றி பெற்றனர். சுயாட்சிக்கட்சி அரசு அமைக்க மறுத்துவிட்டது. எனவே, பொப்பிலி அரசரே சிறுபான்மை அரசு அமைத்தார்.
இரட்டை ஆட்சிமுறையின் கீழ்இதுவே கடைசி அரசாங்கமாக இருந்தது.
தேர்தல் நடைபெற்ற சமயம் உலகம் முழுவதும் பெரிய பொருளாதார நெருக்கடி நிலவியது. சென்னையிலும் அது பாதிப்பை ஏற்படுத்தியது. பார்ப்பனர் அல்லாதோருக்காக தியாகராயரும், டி.எம்.நாயரும் தலைவர்களும் தொடங்கிய நீதிக்கட்சி பின்னர் பதவிப் போட்டியில் சிக்கிச் சிதைந்தது. கட்சியைத் தொடங்கிய தலைவர்கள் இறந்தபிறகு, அடுத்து வந்தவர்கள் பதவி ஒன்றே குறியாக அலையத் தொடங்கினர்.
காலப்போக்கில் தலித்துகள், முஸ்லிம்கள், தொழிலாளர்கள் என பல சமூகத்தவரின் ஆதரவையும் இழந்துவிட்டது. பணக்காரர்கள், ஜமீன்தார்களின் நலனை மட்டும் பாதுகாக்கும் கட்சியாக மாறியிருந்தது.
இந்தக் காலகட்டத்தில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. நீதிக் கட்சியின் பிரிட்டிஷ் ஆதரவுப் போக்கு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு பெருகியது
பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மட்டுமே நீதிக்கட்சியை ஆதரித்தது. அதுவும் நீதிக்கட்சியை விட்டு விலகியிருந்தது. ஆனால் பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் இப்போது விலகியது. கம்யூனிஸ்ட் கட்சி 1934 இல் தடை செய்யப்பட்டதால், சுயமரியாதை இயக்கம் பின்பற்றிய பொதுவுடமைக் கொள்கைகளை பெரியார் கைவிட்டார்.
பெரியாரின் ஆதரவைப் பெறுவதற்காக பொதுவுடமை அம்சங்கள் நிறைந்த அவரது “ஈரோடு திட்ட” த்தை ஏற்றுக் கொள்வதாக நீதிக்கட்சி ஒப்புக்கொண்டது.
1937 ஆம் ஆண்டு இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு மாநில சுயாட்சி முறையை பிரிட்டிஷ் அரசு அமல்படுத்தியது.
(பெரியாரின் பிடிக்குள் வந்த நீதிக்கட்சி குறித்து திங்கள் கிழமை பார்க்கலாம்)
-ஆதனூர் சோழன்
முந்தைய பகுதிகள் :
13. முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் முத்துலெட்சுமி ரெட்டி!
12. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்!