தமிழகத்தின் ட்ரெண்டாகியிருக்கும் நாயகன் ஷின்சான்...
ஓவியா ஆர்மியைவிட இது பெரிய ஆர்மி!

'அமைதியோ அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதி' என்று நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்து, பேஸ்புக்கில் மீம்களாக ட்ரெண்டாகி, கார்ட்டூன் பார்க்காதவர்களையும் பார்க்க வைத்த பெருமை ஷின்சானிற்கே சேரும். யார் இந்த ஷின்சான்? இவருக்கு எப்படி இத்தனை ரசிகர்கள்? 5 வயது தோற்றத்தை கொண்டு 18 வயது இளைஞனை போல பயங்கர கேலியாக பேசும் கார்ட்டூன் கதாபாத்திரமே இது. ஃபேஸ்புக்கில் ஷின்சான் பெயரைக் கொண்டு ஆரம்பித்த பக்கங்களுக்கு லைக்ஸ் மழை பொழிகிறது (ஓவியா ஆர்மியைவிட இது பெரிய ஆர்மியா இருக்கும் போல!). இந்த கார்ட்டூன் முதன் முதலில் ஜப்பானில் மாங்கா சீரிசாக 1990ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. 'யூஷ்டோ உஷீ' என்பவர் தான் இந்த கதாப்பாத்திரத்தை உருவாக்கி கதையை எழுதியவர். 1992 இல் இருந்து டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தற்போது ட்ரெண்டில் போய்க்கொண்டிருக்கும் இந்த கார்ட்டூனின் பின்னணி கதை என்று ஒரு கதை சமூக வலைத்தளங்களில் வளம் வந்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், ஷின் கதாபாத்திரம் நிஜமாகவே ஒரு ஐந்து வயது சிறுவனின் உண்மை கதையென்றும், அவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது தன் தங்கையை காப்பாற்றப் போய் கார் மோதி இருவரும் இறந்ததாகவும், அந்த சோகம் தாங்கமுடியாமல் அவனின் தாய் அந்த குட்டி சிறுவன் செய்த சேட்டைகளை டைரியில் எழுதி வைத்து, பின்னர் தொலைக்காட்சியில் வெளியிட்டதாகவும், அந்தப் பையன் இறப்பது போல வருவதால் தான் கடைசி பாகம் டிவியில் ஒளிபரப்பவில்லை என்று வதந்திகள் இருக்கின்றன. இதனால் ஷினின் திடீர் ரசிகர்களெல்லாம் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

யூஷ்டோ உஷீ
ஷின்னின் வளர்ச்சி பிடிக்காத யாரோ எதிரிகள்தான் இந்த வேலையை பார்த்திருக்கணும்(சோட்டா பீமா இருக்குமோ?). உண்மையில் ஷின் கதாபாத்திரம் எழுத்தாளரின் கற்பனையே... அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகையில் 2009 ஆண்டில் மர்மமாக மரணம் அடைந்தார். அதனால் தான் கார்ட்டூன் முடிவிற்கு வந்தது. பிறகு, அவரது குழு அதை 2010ல் மீண்டும் தொடர்ந்தனர். 45 நாடுகளில் டிவியில் ஒளிபரப்பியும், 30 மொழிகளில் டப்பிங் செய்தும், வெற்றிகரமாக 940 எபிசோடுகளை தொட்டுள்ளது. இதுபோன்ற தவறான வதந்திகளால் பலர் கோபத்தில் உள்ளனர். இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகக்கூடாது ஷின்சான் ரசிகர்களே... அமைதி அமைதி... அமைதியோ அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி...
சந்தோஷ் குமார்