சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு நீதிமன்றமும், காவல்துறையும் ஹெல்மெட் அவசியம் குறித்து பல்வேறு முறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் சுமார் 2500 மாணவ மாணவிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை நூதன முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி விளக்கியுள்ளனர்.
சென்னை அருகே உள்ள பள்ளியில் 2500 மாணவ மாணவிகள் திங்கள்கிழமை காலை கூடினர். சுமார் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த பள்ளியின் வளாகத்தில் 2500 மாணவ மாணவிகளும் ஹெல்மெட் அணிந்து தயாராக இருந்தனர்.
பின்னர் அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தப்படி காந்தி உருவத்தை வடிவமைத்தனர். அதற்கு கீழே SAVE LIFE, SAVE NATION (உயிரை காப்பாற்றுங்கள், தேசத்தை காப்பாற்றுங்கள்) என்ற வாசகத்தையும் ஹெல்மெட் அணிந்தபடி உயர் வகுப்பு மாணவிகள் வடிவமைத்திருந்தனர்.
மேலும் மாணவர்கள் நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.
வெல்கம் பேக் காந்தி படத்தில் காந்தியாக நடித்த காந்தி கனகராஜ் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளி மாணவர்கள் காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு நூதன முறையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். எவர்வின் பள்ளிக் குழுமத்தின் சிஇஓ மகேஸ்வரி, மூத்த முதல்வர் புருஷோத்தமன், முதல்வர் கலையரசி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெற்றோர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.