


தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் நெல்லை உட்பட 8 கோட்டங்கள் மூலமாக சுமார் 23 ஆயிரம் அரசுப் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
இதனிடையே அ.போ.வ.கழகத்தின் பழைய பஸ்களுக்குப் பதிலாக புதிய மற்றும் நவீன கட்டமைப்புகளைக் கொண்ட 2 ஆயிரம் பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக சென்னையில் எடப்பாடி பழனிசாமி 540 நவீன பேருந்துகளைத் துவக்கிவைத்தார். கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பஸ்களில் 500 பஸ்கள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படும் என்று போக்கு வரத்துக்கழக அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மற்றும் டிக்கெட்கள் அந்தந்த பஸ் நிலைய அரசு கவுன்டர்களில் உரிய கட்டணம் செலுத்தி டிக்கெட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பயணிகள் ஏறிய பின்பு அவை சார்ந்த டிக்கெட் குறித்த இன்வாய்ஸ்கள் டிரைவர்களிடம் ஒப்படைக்கப்படும். மாறாக நடத்துனர் இருக்கும் பஸ்களில் பயணிகள் கொண்டு வரும் லக்கேஜ்களைச் சரிபார்த்து அவைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என்று பரிசோதித்து லக்கேஜ் மற்றும், அவர்களுக்கான டிக்கெட்களைக் கொடுத்துக் கட்டணம் வசூல் செய்வார். போக்குவரத்துச் சட்டப்படி இவை நடத்துனர்களுக்குத் தரப்பட்ட பணியாகும்.
ஆனால் கண்டக்டர் இல்லாத சிறப்பு பஸ்கள் செல்லும் வழித்தடங்களில் செக்கிங் இன்ஸ்பெக்டர் பஸ்சில் ஏறி பயணிகளிடம் சோதனை செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பரிச்சார்த்த ஒட்டம் நெல்லை – நாகர்கோவில், நாகர்கோவில் – நெல்லை வழித்தடத்தில் நடத்தப்பட்டது. அந்தப் பஸ்கள் நான்கு வழிச்சாலையில் செல்வதால் ஒரளவு சாத்தியப்பட்டது. அதன் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால் நெல்லை - தூத்துக்குடி மற்றும் நெல்லை – தென்காசி வழிச்சாலைகள் நெடுஞ்சாலை என்பதால், முக்கியமான அந்த நகரங்களுக்குச் செல்லும் இது போன்ற கண்டக்டர் இல்லா பஸ்களில் வழியோரத்திலிருக்கும் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பயணிகள் இறங்குவர், பஸ்களில் ஏறவும் செய்வார்கள். இது போன்ற நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றாமல் தவிர்த்தால் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாயும் பாதிக்கும், மேலும் அவர்கள் கொண்டு வரும் சந்தேகத்திற்கிடமான பொருட்களைச் சோதனையிடவும் முடியாது. அவ்வாறு டிரைவர் செயல்பட்டால் கால நேரம் விரையமாகும். எனவே இது நடைமுறைக்குச் சாத்தியப்படாத ஒன்று. தவிர, விதிப்படி பேருந்துகளுக்கான நடத்துனர் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருப்பவர்களின் நிலையும் கேள்விக்குறியாக உள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துக் கழகத்தின் முக்கிய தொழிற்சங்கத்தின் தொழிலாளர்கள் சொல்லுவது,
மேட்டார் வாகனச்சட்டத்தின்படி கண்டக்டர்களுக்கென்று தனிப்பணி உள்ளது. அப் பணிக்கு வருபவர்கள் விபத்து மற்றும் அவசர காலங்களில் பயணிகளுக்கு உதவும் வகையில் முதல் உதவி பயிற்சி பெற்ற பிறகே அவர்களுக்கு கண்டக்டர் உரிமம் தரப்படுகிறது. மேலும் டிரைவர்களுக்கு அவசரகாலத்தில் உதவுவது, பயணிகளுக்கு உரிய முதலுதவி சிகிச்சை தருவதோடு அவர்களைப் பாதுகாப்பது, மேலும் அவர்கள் கொண்டு வருகிற பொருட்களைக் சோதனையிட்டு தடை செய்த பொருட்களைத் தவிர்ப்பது உள்ளிட்டவைகள் கண்டக்டர்களின் பணியாகும். ஆனால் போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கண்டக்டர் இன்றி பஸ்களை இயக்கும் டிரைவர்களுக்கு பணிச்சுமையும், மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணிகளின் பொருட்களை சோதனையிடவும் முடியாத நிலை ஏற்படும். அதனால் தடை செய்யப்பட்ட பொருட்கள், வெடி பொருட்களும் கடத்துவதற்கும் வாய்ப்பாகிவிடும். இந்த சிஸ்டம் சரியில்லை என எச்சரிக்கையோடு குறிப்படுகின்றனர்.
வருவாய் முக்கியமல்ல. பயணப்படும் பயணிகளின் உயிர்களுக்கான பாதுகாப்பும் அடங்கியிருப்பது தான் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட வேண்டிய விஷயம்.