உண்மையைவிட பொய்கள்தான் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடையும். அதனால் விளைந்த பல உயிர்சேதங்களையும், குழப்பங்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். பல வடமாநில இளைஞர்கள் முதல் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்த பாட்டி வரை அனைவரும் உதாரணங்கள்தான். தன் புகைப்படத்தை யாரோ ஒருவர் குழந்தைகளை கடத்த முயலும் இளைஞர் என்று சமூக வலைதளத்தில் பரப்பி விட்டுவிட்டார், நான் அப்படியானவன் இல்லை என்று கெஞ்சிய ஒருவரையும் நாம் பார்த்தோம். அண்மையில் ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக வந்த ஒரு வீடியோவும் இந்தமாதிரியான வதந்திகளுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான். 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி சில வருடங்களாக அதிகமாகவே மக்களை பாதித்திருக்கிறது. இன்றும் சென்னையைத் தவிர குறிப்பாக மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர் போன்ற தென்மாவட்டங்களில் மக்கள் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்பதை தீர்க்கமாக நம்புகின்றனர். இந்த வதந்திகளுக்கு காரணம் என்ன?
கடந்த 2005ம் ஆண்டுதான் முதன்முதலாக பத்து ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பின் 2009ம் ஆண்டு அதன் வடிவமைப்பு மாற்றப்பட்டது. மீண்டும் 2011ல் 10 ரூபாய் நாணயங்களில் வடிவமைப்பு மாற்றப்பட்டது. இப்படியாக தற்போதுவரை 14 வடிவங்களில் இந்த 10 ரூபாய் நாணயங்கள் உள்ளன. இந்த வடிவமைப்பு மாற்றங்கள் பாமர மக்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் ஒரு நபரிடமிருந்து ஒருநாளுக்கு 100 ரூபாய் மதிப்பிலான 10ரூபாய் நாணயங்கள் மட்டுமே பெறப்படும் என அறிவித்தது வங்கி. அதுமட்டுமில்லாமல் வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வரவுவைக்க தனி பதிவுகள் இல்லாததால் வங்கி காசாளர்களும் நாணயங்களை வாங்க தயங்குகின்றனர். வங்கிகள் பத்து ரூபாய் நாணயங்களுக்கு இதுமாதிரியான கட்டுப்பாடுகளை விதித்ததும் குழப்பத்திற்கு காரணமானது.
ரிசர்வ் வங்கி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவ்வப்போது பத்துரூபாய் நாணயங்கள் குறித்த விளக்கங்களை கூறி வருகிறது. ஆனால் வதந்திகள் பரவிய அளவிற்கு தீர்வுகள் பரவாததால் மக்கள் மத்தியில் குழப்பங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. பத்து ரூபாய் நாணயங்கள் குறித்து வதந்திகளை பரப்புபவர்களின்மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் எனவும் சில மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது. பத்து ரூபாய் நாணயங்களை யாரேனும் வாங்க மறுத்தால் ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறையின் 044 25399222 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்தது ரிசர்வ் வங்கி. ஆனால் அந்த எண் செயல்பாட்டில் உள்ளதா என்பதே பெரும் ஐயமாக உள்ளது.
இப்படியான பல ஐயங்களுக்கு நடுவில்தான் பத்து ரூபாய் நாணயம் சுழன்று கொண்டிருக்கிறது. மக்கள் தீர்க்கமாக செல்லாது என நம்புவதற்கும் இவைகளே காரணமாக இருக்கிறது. பத்து ரூபாய் நாணயங்களுக்கான விளக்கங்களை அரசு அளித்தாலும் மக்கள் அதை தீர்க்கமாக நம்பவேண்டும், வதந்திகளை பரப்புவதை விடுத்து உண்மையை பரப்பவேண்டும்.