Skip to main content

உறுப்பு தானம் என்பது இவர் ரத்தத்துடன் கலந்தது!

Published on 03/08/2017 | Edited on 03/08/2017
உறுப்பு தானம் என்பது இவர் ரத்தத்துடன் கலந்தது!



உயிர் பிழைப்பது கடினம் என்ற சூழலில் உடலுறுப்புகளை தானம் செய்வது எளிது.

இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்து எழுதி வைப்பதும் சுலபம்தான். அப்படி எழுதி வைத்தவரின் உடலையே கொடுக்க மறுக்கும் குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

நல்ல உடல்நிலையோடு இருக்கும்போது சொந்த உறவினர்களுக்கே உறுப்புதானம் செய்வது அபூர்வமான விஷயம்.

அதிலும் ரத்த சம்பந்தமே இல்லாத தனது நண்பனின் மனைவிக்கு லிவரை தானம் செய்திருக்கிறார் என்றால், அதுவும் தனது மனைவியின் சம்மதத்தோடு கொடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்டித்தானே ஆக வேண்டும்.

சென்னையைச் சேர்ந்தவர் கோபிநாத். பிரிட்டனில் இவருடைய குடும்பம் சில காலம் தங்கியிருந்தது. அதேவீட்டில் தங்கி ஒரே கல்லூரியில் படித்த தனது நணபரின் மனைவி மஞ்சள் காமாலை காரணமாக ஈரல் கடுமையாக பாதிக்கப்பட்டு மாற்று ஈரலுக்காக காத்திருப்பதை அறிந்தார்.

உடனே, இவரும் இவருடைய மனைவியும் தங்களுடைய ஈரல் அந்த நண்பரின் மனைவிக்கு பொருந்துமா என்று சோதனைகளில் ஈடுபட்டனர். கோபிநாத்தின் மனைவியுடைய ஈரல் பொருந்தவில்லை. அதேசமயம் கோபிநாத்தின் ஈரல் பொருந்தி வந்தது.

இதையடுத்து தனது நண்பருக்கு தகவல் தெரிவித்தார். அதில் ஒரு சிக்கல் இருந்தது.

ரத்தசம்பந்தம் இல்லாதவர்கள் உறுப்புதானம் செய்வது என்றால் ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ் இருந்தன. ஆனால், கோபிநாத்தும் பிரிட்டன் நண்பரும் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கையில் இருந்தன. எனவே அந்த சிக்கலும் எளிதில் தீர்ந்தது.

அதன்பின்னர், டெல்லியில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கோபிநாத்தின் ஈரலில் ஒருபகுதி எடுக்கப்பட்டு அவருடைய நண்பரின் மனைவிக்கு வெற்றிகரமாக பொருத்தப்ப்டடது.

உறுப்புதானம் என்பது கோபிநாத்தின் ரத்தத்தில் ஊறியது என்பதால்தான் இது சாத்தியமானது என்கிறார் அவருடைய உறவினர். 

ஆம், கோபிநாத்தின் அம்மா அவருடைய சகோதரிக்கு சிறுநீரக தானம் செய்திருக்கிறார்.

நல்ல உடல்நிலையில் இருப்பவர்கள் தனது உடலுறுப்பை தானம் செய்வதற்கு முன்வருவது பெரிய விஷயம் அல்லவா?

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்