Skip to main content

திருவண்ணாமலையில் கண்டறியப்பட்ட குஜராத்தின் லகுலீசர் சிற்பம்..! 

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

Gujarat's Lakulizer sculpture found in Thiruvannamalai

 

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம், உதயராஜா, சரவணன் ஆகியோர் இணைந்து தெள்ளாறு பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் மாம்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் இருக்கும் ஒரு மாமரத்தின் அடியில் சதுர ஆவுடையுடன் கூடிய சிவலிங்கமும் அதனருகே இரண்டு பலகை சிற்பங்களும் இருப்பது கண்டறியப்பட்டது. அச்சிற்பங்கள் பல்லவர் காலத்தைச் சேர்ந்த ‘லகுலீசர்’ மற்றும் ‘பிள்ளையார்’ சிற்பம் என்பது கண்டறியப்பட்டது.

 

லகுலீசர்:


சைவப் பிரிவுகளில் ஒன்றான பாசுபதத்தைத் தோற்றுவித்தவர் லகுலீசர். இன்றைய குஜராத் மாநிலத்தில் உள்ள காயரோஹனகத்தில் லகுலீசரால் தோற்றுவிக்கப்பட்ட பாசுபதம், அவரது சீடர்கள் மூலம் இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது. கி.பி 3ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ்நாடு நிலப்பரப்பில் இப்பாசுபதம் வளர்ச்சியுற்று பல்லவர்கள் காலத்தில் சிறப்புற்றிருந்தது. இதுவரை சுமார் முப்பதுக்கும் குறைவான லகுலீசர் சிற்பங்களே தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

சுமார் மூன்றடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட கற்பலகையில் புடைப்புச் சிற்பமாக லகுலீசர் வடிக்கப்பட்டுள்ளார். இவரின் தலையை முடிச்சுடன் கூடிய அழகான ஜடாபாரம் அலங்கரிக்க, இரு செவிகளிலும் பத்ர குண்டலமும், பெரிய விழிகளும் தடித்த உதடும் கொண்டு நீள்வட்ட முகம் லேசாகச் சாய்ந்தவாறு அமைந்துள்ளது. இவரின் வலது கையில் தனது ஆயுதமான தடி போன்ற லாங்குலத்தைக் கடக முத்திரையில் தாங்கி நிற்க, இடது கையைக் கடி முத்திரையில் இடையின் மீது வைத்துள்ளார். லாங்குலத்தின் அடிப்பகுதி மெல்லியதாகவும், அதன் மேல்பகுதி பருமனாகவும் காட்சி தருகிறது. வழக்கமாகத் தண்டத்துடனோ தனியாகவோ காட்சிப்படுத்தப்படும் நாகம், இச்சிலையில் காணப்படவில்லை. கழுத்தில் அணிகலனாக சரபளியும், வயிற்றில் உதரபந்தமும் கொண்டு இடை ஆடையுடன் பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். இச்சிற்ப அமைப்பை வைத்து, இது ஏழாம் நூற்றாண்டின் கடைப்பகுதி அல்லது எட்டாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

 

பிள்ளையார்:


மூன்றடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்ட கற்பலகையில் நான்கு கரங்களுடன் பிள்ளையார் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார். தலையைக் கரண்ட மகுடம் அலங்கரிக்க, தனது மேல் வலக்கரத்தில் நெற்பயிரையும், மேல் இடது கரத்தில் அக்கமாலையுடன், கீழ் வலது மற்றும் இடது கரத்தைத் தன் தொடையின் மீது வைத்தவாறு  இரண்டு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார்.

 

யானையின் காது போன்றே பெரிய காது மடல்களுடன் கூடிய பருத்த முகத்திலிருந்து கீழ் நோக்கி இடப் பக்கம் சுருளும் துதிக்கையுடன் இடம்புரி பிள்ளையாராகக் கம்பீரத்துடன் காட்சி தருகிறார். மேலும், தும்பிக்கையின் வலப்பக்கம் கூறிய தந்தமும், இடப்பக்கம் சிறிய தந்தமும், தோளின் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகச் சரியும் பட்டையான முப்புரி நூலும், இருகைகளிலும் தோள்வளையும், இடையில் உதரபந்தமும் அணிந்து அழகுறக் காட்சி தருகிறார்.

 

வளமையின் குறியீடாகச் சொல்லப்படும் நெற்பயிரை ஆயுதமாகக் கொண்டு இதுவரை வெகு சில பிள்ளையார்களே கண்டறியப்பட்டுள்ளன. இதன் சிற்ப அமைப்பைக் கொண்டு இதன் காலமும் மேலே குறிப்பிட்ட லகுலீசரின் காலமே ஆகும். இதுவரை லகுலீசர் கண்டறியப்பட்ட இடங்களில் பெரும்பாலும் இதேபோன்று பிள்ளையாரும் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதகுந்தது.

 

இவ்விரு சிற்பங்களுடன் இரண்டடி சதுர ஆவுடையுடன் இதே காலத்தைச் சேர்ந்த ஒரு சிவலிங்கமும் காணக்கிடைக்கிறது.

 

இம்மூன்று சிற்பங்களையும் வைத்துப் பார்க்கையில் இவ்விடத்தில் 7ஆம் நூற்றாண்டுவாக்கில் பல்லவர் காலத்திய சிவாலயம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. கால ஓட்டத்தில் கோயில் அழிந்து, இம்மூன்று சிற்பங்கள் மட்டும் காலத்தின் சாட்சியாக எஞ்சி நின்று நமக்கு இவ்விடத்தின் தொன்மையை உணர்த்துகிறது.