பாஜகவைத் துரத்துகிறது குஜராத்?
"பாஜகவை தோற்கடிப்பீங்களா?"
ஒரு 24 வயது இளைஞன் தனது பேச்சை இப்படித்தான் தொடங்குகிறான். கூடியிருக்கும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டம், "ஆமா, ஆமா" என்று குரல் எழுப்புகிறது.
குஜராத்தில் பாஜகவின் ஆட்டம் முடியப் போவதாக எல்லாத் தரப்பிலும் கருத்து பரவும் நிலையில், மோடி கடைசி நேரத்தில் கண்ணில் பட்டதையும், கற்பனைக்கு எட்டியதையும் ஆயுதங்களாக பயன்படுத்தத் தொடங்குகிறார்.

ஆனால், அந்த ஆயுதங்கள் அவருடைய தரத்தை மேலும் தாழ்த்துகின்றன. ஒரு பிரதமர் தனது சுயநலத்துக்காக யார் மீதும் எத்தகைய பழியையும் போட தயாராக இருப்பாரா என்று நடுநிலையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளார் மோடி.
மன்மோகன் சிங் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சருடன் சேர்ந்து குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக சதிசெய்கிறார் என்று மோடி குற்றம் சாட்டினார். அமைதிக்கு பெயர்போன மன்மோகன் சீறிவிட்டார். மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்று ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.
பாஜக இன்னமும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாகிஸ்தானையே ஆயுதமாக பயன்படுத்த நினைக்கிறது. இது மக்கள் மத்தியில் எரிச்சலைத்தான் ஏற்படுத்தும் என்பது மோடிக்கு புரியவில்லையா என்று கேட்கிறார்கள்.
குஜராத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பு என்பது 22 ஆண்டுகால பாஜகவின் அடக்குமுறை, சர்வாதிகார ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பு என்பதை பாஜகவும் மோடியும் உணரவில்லை.
இத்தனை ஆண்டுகள் அந்த மக்களை ஏமாற்றியோ அச்சுறுத்தியோ அடக்கி வைத்திருந்த பாஜகவும் மோடியும், பொங்கி வரும் எதிர்ப்பு அலையைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் மோடியும், ராகுலும் சாலை வழிப் பிரச்சாரம் செய்ய போலீஸ் அனுமதிக்கவில்லை. ஆனால், ஹர்திக் பிரச்சாரம் செய்ய வரும்போது போலிஸ் தடுக்கவே இல்லை. தடுத்தால் மேலும் விளைவு மோசமாகும் என்ற பயம் போலிசுக்கு இருக்கிறது.
அதேசமயம், மோடியும் பாஜகவும் தங்களுடைய கீழ்த்தரமான பிர்ச்சார உத்திகளை மாற்றவே
இல்லை. காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிடும் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, எஸ்டிபிஐ அமைப்பிடமிருந்து 50 ஆயிரம் நன்கொடை பெற்றதாகவும், அந்த அமைப்பு தீவிரவாத அமைப்பு என்றும் பிரச்சாரம் செய்கிறது.

ஆனால், அந்த அமைப்பு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது என்றால், இத்தனை ஆண்டுகள் அமித் ஷாவும், மோடியும், ராஜ்நாத் சிங்கும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று ஜிக்னேஷ் கேள்வி எழுப்பி மடக்குகிறார்.
அதுமட்டுமில்லை, "நான் வெறும் 50 ஆயிரம் ரூபாய்தானே நன்கொடை வாங்கினேன். அமித் ஷாவின் மகனைப் போல, 50 ஆயிரம் ரூபாயை வைத்து ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதிக்கவில்லையே" என்றும் பதிலடி கொடுக்கிறார்.
இப்படி எந்த பந்தைப் போட்டாலும் மடக்கி மடக்கி அடித்தால் மோடியும் பாஜகவும் பாவம் என்னதான் செய்ய முடியும்?
- ஆதனூர் சோழன்