Skip to main content

குஜராத்தில் பாஜகவுக்கு தோ்தல் தோல்வி பயம்?

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
குஜராத்தில் பாஜகவுக்கு தோ்தல் தோல்வி பயம்?



இமாச்சலப் பிரதேசத்திலும் குஜராத்திலும் ஒரே நேரத்தில் பதவிக்காலம் முடியும்போது இமாச்சலில் ஒரு தேதியிலும் குஜராத்தில் வேறு ஒரு தேதியிலும் தேர்தல் நடத்த முடிவெடுத்தால், அந்த முடிவு பல சந்தேகங்களுக்கு இடமளிக்கும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ளார்.

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த பல தந்திரங்களை பாஜக தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ராகுல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவருக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து வெளியிடவே பாஜக மேலிடம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அமித் ஷாவின் மகன் வெறும் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஒரே ஆண்டில் 80 கோடி ரூபாய் சம்பாதித்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

அந்த விவகாரத்தையும் பரவாமல் தடுக்க பாஜக படாதபாடு படுகிறது. அமித் ஷாவின் மகன்  ஜெய் ஷா ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு சம்பாதித்த விவகாரத்தை வெளியிட்ட இணையதளம் மீது 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். அதையே காரணம் காட்டி மற்ற ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. இந்த விவகாரத்தை விவாதிக்கவே கூடாது என்று பாஜக மேலிடம் கூறியிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில்தான், இமாச்சலப் பிரதேசத்துக்கும், குஜராத் மாநிலத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் அறிவிக்க வேண்டிய தலைமைத் தேர்தல் ஆணையம் இமாச்சலப் பிரதேசத்துக்கு நவம்பர் 9 ஆம் தேதிக்குள்ளும் குஜராத் மாநிலத்துக்கு டிசம்பர் 18 ஆம் தேதிக்குள்ளும் தேர்தல் நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த வாரம் மோடி குஜராத் செல்கிறார். அப்போது குஜராத் மாநிலத்துக்கு சிறப்புத் திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவருடைய அறிவிப்புக்காக தேர்தல் அட்டவணை வெளியிடுவதை தேர்தல் ஆணையம் தள்ளிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது பல சந்தேகங்களை எழுப்புகிறது.

இமாச்சல பிரதேசத்தில் தேர்தலை நடத்தினால் அங்கு பாஜக வெற்றி நிச்சயம் என்று நினைக்கிறது. அந்த மாநில வெற்றியைக் காட்டி குஜராத்திலும் ஜெயிக்கலாம் என்று பாஜக திட்டமிடுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

மோடி தலைமையிலான மத்திய அரசின் எல்லா முடிவுகளும் இந்தியாவின் வளர்ச்சியை பாதித்துள்ளதாக பாஜகவின் மூத்த தலைவர்களே குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலையில் குஜராத்தில் தோல்வி ஏற்பட்டால் பாஜகவுக்கும் மோடிக்கும் பெரும் பின்னடைவு என்பதால் பாஜக தலைமைத் தேர்தல் ஆணையத்தையே தனது கைப்பாவையாக பயன்படுத்தவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்