உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூத்த பத்தரிகையாளர் கோவி. லெனினிடம் இதுதொடர்பான பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், மராட்டியம், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் மாநில அரசே ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்த வரையில் மத்திய அரசே ஊரடங்கு குறித்த முடிவினை அறிவிக்கும் என்று முதலில் கூறினார்கள். பிறகு மாற்றியுள்ளார்கள். இதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?
தமிழகத்தை மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே தான் இந்த 21 நாள் ஊரடங்கு என்பது இருக்கின்றது. தமிழநாட்டில் முதலிலேயே அந்த முடிவு எடுக்கப்பட்டது. ஏப்ரல் 1-ம் தேதி வரை ஊரடங்கு இருக்கும் என்று சட்டப்பேரவை நடந்துகொண்டிருக்கும் போதே அறிவித்தார்கள். ஒருநாள் டைம் கொடுத்தார்கள். மாலை ஆறு மணிவரைக்கு நேரம் இருந்ததால், மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கினார்கள். டாஸ்மார்க் கடை திறந்திருந்ததால் குடிமகன்களும் தங்களுக்குத் தேவையானதை முன் கூட்டியே வாங்கி வைத்தனர். ஆனால் இந்த 21 நாள் ஊரடங்கைத் தாக்குபிடிக்கும் அளவிற்கு அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்கள் பொருளாதார நிலை இல்லை.
வட மாநிலங்களில் இருந்து நடந்தே தங்கள் மாநிலங்களுக்குத் தொழிலாளர்கள் சென்ற அந்த நிலைமையையும் நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். இந்தியாவின் மற்றுமொரு முகத்தை அன்று பார்த்தோம். மேலும் கரோனாவை விரட்ட வேண்டி விளக்கேற்ற சொன்னார்கள். ஆனால், நாம் பட்டாசு வெடித்தோம், ராக்கெட் விட்டோம். அன்றைக்கு தான் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100-ஐ தொட்டது. தற்போது எண்ணிக்கை உயர்ந்து 300-ஐ தொட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கரோனா தீவிரமாக இருந்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை மாநில அரசு தினந்தோறும் தெரிவித்து வருகிறது. முதலில் சுகாதாரத்துறை அமைச்சர் அந்தத் தகவல்களைத் தெரிவித்து வந்தார். அடுத்து சுகாதாரத்துறை செயலாளர் கூறிவந்தார். தற்போது தலைமைச்செயலாளர் வாலண்டரியாக வண்டியில் ஏறி உள்ளார்.
கரோனா கண்காணிப்புக்களை நாம் தீவிரப்படுத்த வேண்டும். அதுதொடர்பாக நாம் சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். விரைவு சோதனை கருவிகளை (RAPID KIT) கொள்முதல் செய்ய வேண்டும். அந்தக் கருவிகள் எப்போது வரும் என்று தெரியவில்லை. விரைவுப்பரிசோதனை கருவிகள் என்று பெயர் இருந்தாலும் அவைகள் தமிழகத்திற்கு வருவதில் தாமதம் ஏற்படுகின்றது. எப்போது வரும் என்று தெரியவில்லை. இந்நிலையில்தான் பிரதமர் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்து இந்த முறை அவர்களாகவே ஊரடங்கை அமல்படுத்தலாம் என்ற தொனியில் கருத்துகளைப் பகிந்திருந்தார். சில மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலகங்களில் அவர்களாகவே ஊரடங்கை நீட்டித்துள்ளார்கள். அதன்படி, மராட்டியம், பஞ்சாப், தெலுங்கானா முதலிய மாநிலங்களின் முதல்வர்கள் தாங்களாகவே ஊரடங்கை நீடித்தார்கள். தமிழ்நாட்டிலும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அமைச்சரவையைக் கூட்டி விவாதித்தார்கள். அமைச்சரவைக்குப் பிறகு முதல்வர் செய்தியாளரைச் சந்திப்பார் என்று பார்த்தால் தலைமைச் செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பரவாயில்லை, அவர்தான் அனைத்து துறைகளின் உயர் அதிகாரி என்று பார்த்தால், ஊரடங்கு விஷயத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கின்றதோ அதை மாநில அரசு செயல்படுத்தும் என்று கூறுகிறார். இதுதான் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. கரோனா நேரமாக இருக்கிற நிலையில் தமிழ்நாட்டுக்கு என்ன தேவை என்பதை மத்திய அரசு அறிவிக்கும் என்று சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. அமைச்சரவை கூட்டம் என்பதே முக்கிய முடிவுகள் எடுக்க கூட்டப்படும் நிலையில், ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கும் என்று சொன்னது, தமிழக மக்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. எஜமான் நீங்க சொல்லுங்க!என்கிற மாதிரி தமிழக அரசின் முடிவு இருப்பதாகவே அனைவரும் நினைக்க வேண்டியுள்ளது, எனக் கூறினார்.