அ.ம.மு.க.வின் புதிய அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் 12.03.2020 வியாழக்கிழமை திறக்கப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெமிலா நக்கீரன் இணையத்தளத்திடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
கட்சிக்காக புதிய அலுவலகம் திறக்கப்பட்டிருக்கிறதே?
தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அடுத்தகட்டமாக அமமுகவின் வளர்ச்சி நல்ல திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்திருக்கிறது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருட காலம்தான் உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதாக கூறுகின்றன. அமமுகவும் தொடங்கிவிட்டதா?
நாங்கள் எப்போதோ தொடங்கிவிட்டோம். அம்மா பிறந்தநாள் நலத்திட்ட விழா என்று தொடங்கி தெருமுனைக்கூட்டங்கள் நடத்தி வருகிறோம். தினமும் தமிழ்நாட்டில் 100 இடங்களில் கூட்டங்கள் நடந்து வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் நிர்வாகிகள், தொண்டர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நான் இப்போதுகூட ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கிறேன். தினந்தோறும் மக்களை சந்தித்து வரும்காலங்கிளில் அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம் என்ற நம்பிக்கையை கொடுத்து வருகிறோம்.
அமமுக தலைமையில் புதிய கூட்டணி அமையுமா?
அதனை கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியின் புதிய அலுவலக திறப்பு நாளில் சொல்லியிருக்கிறார். நிச்சயமாக அமமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். 2021ல் ஒரு நல்ல ஆட்சியை கொடுப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம்.
திமுக, அதிமுகவிடம் பெரும்பலான கட்சிகள் கூட்டணியில் இருக்கிறது. கூட்டணி குறித்து எந்த கட்சிகளிடம் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?
அதை இப்போது சொல்ல முடியாது. தேர்தல் நேரங்களில்தான் அதைப்பற்றி பேச முடியும். சொல்ல முடியும். சிறப்பான கூட்டணி அமையும் என்று பொதுச்செயலாளர் சொல்லியிருக்கிறார். அதன்படி அமையும் எதிர்பாருங்கள்.
ஆர்.கே.நகரிலும், தென்மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். ஏன் இரண்டு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தோல்வி பயமா என்று சிலர் விமர்சிக்கிறார்களே...
கட்சியினர் விரும்புகிறார்கள். தென் மாவட்ட கட்சியினர் அந்த பகுதியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அந்த தொண்டர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அங்கு போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார். ஏற்கனவே ஆர்.கே.நகர் எம்எல்ஏ என்ற முறையில் மீண்டும் அங்கு போட்டியிடவும் கட்சியினர் விரும்புகின்றனர். தோல்வி பயமெல்லாம் இல்லை. ஏற்கனவே நிறைய தலைவர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். அம்மா அவர்களும் இரண்டு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இது தேர்தலுக்கான ஒரு வியூகம் என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதிமுக மாநிலங்களவை பதவிகளில் இரண்டு பதவிகள் கட்சியினருக்கும், ஒரு பதவி கூட்டணிக்கும் கொடுக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?
அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம், அம்மா வழியில் கட்சி நடத்துகிறோம் என்று சொல்கிறார்களேயொழிய அம்மா அவர்கள் வழியில் இவர்கள் நடத்துகொள்ளவில்லை. ஏற்கனவே அம்மா இருந்தபோது மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளில் இரண்டு பதவிகளை பெண்களுக்கு வழங்கினார். அந்த இரண்டு பெண் எம்பிக்களுக்கான பதவிகள் முடிவடைந்திருக்கிறது. அந்த பதவிகளை பெண்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். அதையும் புறக்கணித்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் இளம் வயதினரை அம்மா பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். அதுவும் செய்யவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கூட்டணி வைத்திருப்பதால் அவர்களுக்கு ஏற்றதுபோல் நடந்து கொள்கிறார்கள். இல்லையென்றால் ஆட்சியை தொடர முடியாது, ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று பயந்து கூட்டணிக்கு ஒரு பதவியை ஒதுக்கியிருக்கிறார்கள்.