Skip to main content

"தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தால் அடுத்து துணை முதல்வர் பதவி கேட்பார்கள்.." - ரவீந்தரன் துரைசாமி பேச்சு!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜி.கே வாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் சுதீஷ் மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக முதல்வர், துணை முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் வாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த அதிருப்தியால் கூட்டணியில் ஏதேனும் மாற்றம் வருமா, தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறுமா அல்லது வெளியேற்றப்படுமா போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கின்றார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரிடியான பதில்கள் வருமாறு, 
 

adf



விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தற்போது அறிவித்துள்ளது. மூன்று இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்களையும் தற்போது அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதிமுக-வை சேர்ந்த தம்பிதுரை, கே.பி முனுசாமி மற்றும் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் ஆகியோர் தற்போது வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக நீண்ட நாட்களாக மாநிலங்களைவை சீட் கேட்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில் ஜி.கே வாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு எது காரணமாக இருக்கின்றது?

தேமுதிகவுக்கு வாக்கு இல்லை என்று அதிமுக நினைக்கின்றது. அது உண்மையாகவும் இருக்கின்றது. கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட சில தொகுதிகளில் மிக குறைந்த வாக்குகளை அவர்கள் பெற்றார்கள். திருச்சி, வட சென்னையில் மிக குறைந்த வாக்குகளை அவர்கள் பெற்றதே அதற்கு மிக சிறந்த உதாரணம். ஆனால் ஜி.கே வாசனை பொருத்த வரையில் அரசியலை மிக நேர்மையாக செய்யக்கூடியவர். இரண்டு பக்கமும் கூட்டணி குறித்து பேசுபவர் அல்ல. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிடம் இரண்டு சீட்டை கேட்டார். அவர்கள் ஒன்று கொடுத்தார்கள். அதனை ஏற்றுக்கொண்டு தேர்தலி்ல் போட்டியிட்டார். அந்த வகையில் அவருடைய செயல்பாடு பாராட்டு வகையில் இருந்தது. தேமுதிகவுக்கு வாக்கு இல்லை என்று அதிமுக தரப்பு உறுதியாக நினைக்கின்றது. தற்போது அவர்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுத்தால் அடுத்து துணை முதல்வர் பதவி கேட்பார்கள்.

பாமகவுக்கு இணையாக தங்களை மதிக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய வாக்கினை பல்வேறு தேர்தல்களில் நிரூபித்துள்ளார்கள். அவர்களால் வட மாவட்டங்களில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பெரிய வெற்றி கிடைத்து. அந்த மாதிரியான எந்த நன்மையும் அதிமுகவுக்கு தேமுதிக கட்சியால் கிடைக்கவில்லை. இதனால் அவர்களை விலக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தற்போது அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் பேசியதும் அதனை உறுதி செய்வதாகவே இருக்கின்றது. எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்று அவர் பேசியிருப்பதே அதிகம் பேசும் கூட்டணி கட்சிகளுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

அடுத்து தேமுதிக-வின் நிலைபாடு என்னவாக இருக்கும். கூட்டணியில் மாறுதல் ஏற்பட ஏதேனும் வாய்ப்புக்கள் இருக்கின்றதா?

அடுத்து தேமுதிகவை அதிமுக வேறு ஏதாவது வழியில் சரிகட்டினால் உண்டு, இல்லை என்றால் அதிமுகவுக்கு செல்வாக்கு இல்லை, சரியான தலைமையில்லை என்று விஜய பிரபாகரும், பிரேமலதா விஜயகாந்தும் மேடைகளில் பேசுவதை பார்க்க முடியும்.

ஆனால் தேமுதிமுகவை பாஜக முக்கியத்துவமான கட்சியாகத்தானே பார்க்கின்றது. தமிழகம் வரும் போது பிரதமர் மோடி விஜயகாந்தை சந்தித்து பேசுகின்றாரே? அப்படி இருக்கும்போது கூட்டணியில் இருந்து விலகுவதற்கு போதுமான வாய்ப்புக்கள் இருக்கின்றதா? 

பாஜகவுக்கு அந்த கட்சியை தூக்கி பிடிப்பதன் மூலம் தமிழகத்தில் என்ன லாபம் இருந்துவிட போகின்றது. அவர்கள் வாசனுக்கு கூட பரிந்துரை செய்துள்ளார்கள் என்று நம்பத்தகுந்த தகவல்கள் இதுவரை வரவில்லை. மூன்றாவது சீட்டில் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே இவருக்கு சீட் கொடுத்திருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது. பாஜகவே தங்கள் கட்சியின் மாநில தலைவரை தேர்தெடுத்த முடியாமல் திணறுகிறார்கள்.

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தங்கள் கட்சியின் மாநில தலைவரை தேர்ந்தெடுக்க இத்தனை மாதங்கள் ஆகியும் அவர்களால் முடியவில்லை. அதனால் மற்றவர்களை தூக்கி பிடிப்பதனால் எந்தவித லாபத்தையும் அவர்கள் பெறப்போவதில்லை. தற்போதைய நிலையில் பாஜக சட்டமன்ற தேர்தலில் எந்த இடத்தையும் பெறாது என்று மோடிக்கு நன்றாக தெரியும். ஆந்திரா தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் தமிழ்நாட்டில் ஏற்படும் என்பது மட்டும் உறுதி.