உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் 140-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்களைச் செய்தியாளர்களிடம் தினமும் தெரிவித்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது ஓரங்கட்டப்படுவதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது.இதுதொடர்பாக பத்திரிகையாளர் கோவி.லெனினிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
சில நாட்களாக விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. முதல்வர் விஜயபாஸ்கரை ஓரங்கட்டுவதாகவும், தான் மட்டுமே லைம் லைட்டில் தெரிய வேண்டும் என்று முதல்வர் நினைப்பதாக ஒரு டாக் போய் கொண்டு இருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
வாழும் போதி தர்மர் விஜயபாஸ்கர் என்பதுதான் இந்தப் பிரச்சனைக்கு காரணமாக இருக்கின்றது.உடல்நிலை சார்ந்த விஷயங்களில் நாம் முழு உண்மையும் சொல்வதில்லை. இங்கே இருக்கின்ற அம்மா உணவகத்தில் முதல்வர் சாப்பிட்டு உணவின் தரத்தைச் சோதிக்கிறார்.அதே போன்று தேனியில் துணை முதல்வர் அங்கே இருக்கின்ற அம்மா உணவகத்தில் சாப்பிட்டு அதன் தரத்தைச் சோதிக்கிறார்.ஆனால் அப்போலோவில் அம்மா இட்லி சாப்பிட்டார்களா என்றால் அதுபற்றி யாருக்கும் தெரியவில்லை.பதட்டம் ஏற்பட்டுவிடும் என்று எல்லா விஷயங்களையும் மறைக்கும் போது சிக்கல் உங்கள் பக்கமே வந்துவிடும்.டெங்கு காய்ச்சல் வந்த போதே நிலவேம்பு குடிநீர் முதலியவற்றை எல்லாம் வைத்து முன்னேற்பாடுகளை செய்து வந்தோம்.மேலும் டெங்கு வந்து இறந்தவர்களை மர்ம காய்ச்சல் என்ற பெயரிலேயே அதனைப் பதிவு செய்தார்கள்.அம்மா முயற்சி எடுத்தும் இத்தகைய காய்ச்சல் வரலாமா என்ற கோணத்தில் அதனை மறைக்க முயன்றார்கள்.
நமக்கு வேண்டுமானால் அது மர்ம காய்ச்சலாக இருக்கலாம். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் அது எதனால் வருகின்றது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்,கண்டுபிடித்து விடுவார்கள்.ஆனால் உழைக்கும் மக்களுக்கு எல்லாம் கரோனா வராது என்று சட்டமன்றத்திலேயே கூறினார்கள்.உலக சுகாதார நிறுவனம் கூட இத்தகைய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடிக்கவில்லை.இந்தச் சிகிச்சையில் இருக்கும் மருத்துவர்களுக்குப் போதுமான அளவு மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை கொடுங்கள் என்று கூறினால்,அவை அனைத்தும் தங்களிடம் இருக்கிறது என்று சட்டமன்றத்திலேயே சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கிறார்.
ஆனால், முதல்வர் அதனை ஆர்டர் செய்துள்ளோம்.விரைவில் வரும் என்று தெரிவிக்கிறார். இங்கேயே வேறுபாடு இருக்கிறது.நீங்கள் பதற்றத்தைத் தணியுங்கள்.ஆனால் உண்மையான முறையில் அணுகுங்கள். அந்த வகையில் அமைச்சர் என்ற முறையிலும்,மருத்துவர் என்ற முறையிலும் விஜய பாஸ்கரை பத்திரிகையாளர்கள் எளிதில் அணுகினார்கள்.அது வாழும் போதி தர்மர் என்ற ரீதியில் போனது.அப்படி என்றால் நான் யார்?என்ற எண்ணம் முதல்வருக்கு வந்தததே இந்தச் சம்பவங்களுக்கு எல்லாம் காரணம்.இது வேண்டுமானால் அரசியலில் சகஜமாக இருக்கலாம்.மக்களின் உயிர் என்பது சகஜமானது கிடையாது.