சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, அவரின் தண்டனை காலத்தை நிறைவுசெய்த நிலையில், இன்று காலை சென்னை திரும்ப பெங்களூருவிலிருந்து கிளம்பினார். காலை 7.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கிய அவர், 10.30 மணி அளவில் தமிழக எல்லையை வந்தடைந்தார்.
தமிழக எல்லைக்குள் அதிமுக கொடியுடன் வந்தால், சசிகலா நடவடிக்கை எடுப்பது உறுதி எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், தமிழக கர்நாடக எல்லையில் காரில் உள்ள அதிமுக கொடியை அகற்ற அவகாசம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கிருஷ்ணகிரி பகுதியில் சசிகலா, அதிமுக நிர்வாகி ஒருவர் காரில் மாறி அந்த காரில் சென்னை நோக்கிவந்தார். இதனிடையே அமமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி நக்கீரன் இணையத்திற்கு அளித்த பேட்டி.
சசிகலா தமிழகம் வரும்போது அவர் அதிமுகவின் கொடியைப் பயன்படுத்தக்கூடாது எனத் தமிழகக் காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அவருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இதனைச் சட்டப்படி சந்திப்போம். ஒரு கட்சியின் சாதாரண தொண்டன், கட்சியின் கொடியையும் அக்கட்சியின் தலைவர் படத்தையும் வைத்துக்கொள்ளக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் எங்காவது சொல்லியிருக்கிறதா. அதிமுகவின் சட்டப்படி அவர் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதிமுகவில் பொதுச்செயலாளர் என்பதுதான் முறையான பதவி. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதெல்லாம் இவர்களாக ஏற்படுத்திக்கொண்டது. சட்டத்தில் இதுபோன்ற எந்தப் பதவியும் இல்லை. 2016 டிசம்பர் 29ஆம் தேதி ஸ்ரீவாரி மண்டபத்தில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். மற்றும் தற்போது பேசிவரும் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட அனைவரும் கையெழுத்திட்டு சசிகலாவை பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர்.
வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். அதனைச் சட்டப்படி சந்திக்கப் போகிறார்கள். இதுவெல்லாம் இவர்களின் பயத்தின் வெளிப்பாடு, நான் அதிமுகவின் மொத்த நபர்களையும் சொல்லவில்லை. ஒரு சிலரையே குறிப்பிடுகிறேன். கடந்த ஒரு வாரமாகவே, நினைவில்லத்தை மூடுவது, போயஸ் தோடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடுவது, அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸை பாதுகாப்பிற்காகப் போடுவது. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா.. தொண்டர்கள் முடிவு செய்துவிட்டால், இவர்களால் தடுத்துவிட முடியுமா. இவர்களிடம் இன்று அதிகாரம் இருப்பது சரி ஆனால், இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார் என்பதையே மறந்துவிட்டார்களே.
நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்தும் எங்கள் பக்கமே உள்ளது. இதற்கு மேல் அவர்கள் ஐ.நா. சபைக்குத்தான் போகவேண்டும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளாரே..?
சி.வி.சண்முகம், சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்தபோது இரவு 12 மணிக்கு ‘சின்ன அம்மா இல்லை.. என் அம்மா’ எனக் கத்தினாரே அப்போது தெரியவில்லையா ஐநா சபைக்குப் போகவேண்டும் வேண்டாமா என்று ஜெயக்குமார், காலில் விழுந்து நிதி அமைச்சர் பதவி வாங்கும்போது தெரியவில்லையா. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை எனச் சட்ட அமைச்சர் தெரிவிக்கிறார். இவர்களிடம்தான் ஆட்சியே இருக்கிறது.
ஜெயக்குமார், “சட்டத்தை நாங்கள் கையில் எடுக்கக்கூடாது அதனால்தான் போலீஸில் புகார் கொடுத்தோம்” எனத் தெரிவித்துள்ளாரே..?
காவல்துறை ஒரு கொடியைப் பயண்படுத்தக்குடாது என எப்படிச் சொல்வார்கள். சட்ட ஒழுங்கை கையில் வைத்திருக்கும் நீங்கள் டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுக்கிறீர்கள்.
சில இடங்களில் சசிகலாவை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்களை அப்புறப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுகிறார்களா?
அனுமதி வாங்கி வைக்கப்பட்டுள்ளதைக் கிழிக்கிறார்கள். திருச்சி சமயபுரத்தில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டவர்களின் வாகனங்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள். பல இடங்களிலும் எங்களுக்கு அனைத்துவிதமான பிரச்சனைகளையும் காவல்துறை மூலமாக கொடுக்கிறார்கள். மனசாட்சிபடி இது நியாயமா என்பதை அவர்களே யோசிக்கட்டும். நான் அதிமுகவின் அனைவரையும் கேட்கவில்லை. ஒரு சிலரையே கேட்கிறேன். எனக்கு ஒருவேளை சோறு போட்டவர்களை வாழ்க்கை முழுக்க நினைப்பதுதான் மனிதத் தன்மை. பெரிய வாழ்க்கையைக் கொடுத்தவர்களையே இப்படிச் செய்கிறார்கள் என்றால் அவர்களே சிந்தித்துப் பார்க்கட்டும்.