ஆபரண உலோகத்தில், தங்கத்திற்கு அடுத்து முக்கிய பங்காற்றும் வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ வெள்ளி 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது, வெள்ளி வியாபாரிகள், ஏழை, நடுத்தர வர்க்கத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
உடலில் குண்டுமணி தங்கம் கூட அணியாதவர்கள் இருக்க முடியும்; ஆனால் வெள்ளி கொலுசு, அரைஞாண் கொடி அணியாமல் யாரும் இளம் பிராயத்தைக் கடந்து வந்திருக்க முடியாது. இவ்வகை ஆபரணங்களில் வெள்ளி முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளி கொலுசு, வெள்ளை அரைஞாண் கொடி மட்டுமின்றி வெள்ளியால் ஆன குத்துவிளக்கு, செயின்கள், மாட்டல்கள், கம்மல்கள், மோதிரங்கள் என பல்வேறு வகையான ஆபரணங்கள் மட்டுமின்றி, வெள்ளி குவளைகள், வெள்ளி சங்கு, சொம்பு, பாத்திரங்கள் என வீட்டு உபயோக பொருள்கள் தயாரிப்பிலும் வெள்ளிக்கு முக்கிய இடம் உண்டு.
வெள்ளி கொலுசு தயாரிப்பில், உலகளவில் சேலம் மாவட்டம் பிரத்யேக இடம் வகிக்கிறது. ஆபரணச் சந்தையில் ஏழை, நடுத்தர வர்க்கத்தினரிடையே வெள்ளிக்கு எப்போதும் மவுசு இருந்து வரும் நிலையில், அண்மைக்காலமாக தங்கத்தின் விலையைப்போல வெள்ளியின் விலையும் வேகமாக உயர்ந்து வருவது, பல்வேறு தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எப்போது ஆன்லைன் வர்த்தகம் வெள்ளிச்சந்தையில் நுழைந்ததோ அப்போது முதல் இத்தொழில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் சிலரிடம் பேசினோம். ''கடந்த 2007ம் ஆண்டு ஆன்லைன் வர்த்தகத்தின் கீழ் வெள்ளியும் கொண்டு வரப்பட்டது. அப்போது முதல் வெள்ளி விலையில் அடிக்கடி மாற்றம் இருந்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு, அதுவரை வரலாற்றில் இல்லாத வகையில், முதன்முதலாக ஒரு கிலோ வெள்ளி 70 ஆயிரம் ரூபாயைத் தொட்டது. இதுதான் வெள்ளியின் அதிகபட்ச விலையாக இப்போது வரை இருந்து வருகிறது. அதன்பிறகு, வெள்ளி விலை குறைந்தாலும்கூட சீரற்ற போக்கு நீடிக்கிறது.
இந்த நிலையில் கடந்த ஆறு மாதமாக தங்கத்தைப் போலவே, வெள்ளியின் விலையும் தொடர்ச்சியாக ஏறி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் வெள்ளி கிலோ 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதுவே நடப்பு ஆண்டு பிப். 20ம் தேதி நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளி 47750 ரூபாயாக உயர்ந்துள்ளது. அடுத்த இரண்டே நாளில், கிலோவுக்கு 2250 ரூபாய் அதிகரித்து, பிப். 22ம் தேதியன்று ஒரு கிலோ 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
சில்லரை விலையில் ஒரு கிராம் வெள்ளி 53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றால், வெள்ளியை ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நீக்க வேண்டும். இதனால் வெள்ளி பொருள்களை இருப்பு வைத்துள்ள வியாபாரிகளுக்கு நட்டம்தான் ஏற்படுகிறது. இவ்வாறு வெள்ளி வியாபாரிகள் கூறினர்.
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் நிலையில், வெள்ளியும் மேலும் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால், குழந்தைகளின் கால்களில் கொலுசு மாட்டி அழகு பார்க்கும் ஏழை வர்க்கம்தான் பெரும் பாதிப்புக்குள்ளாவர். வெள்ளி கொலுசு, வெள்ளி கட்டிகள் படங்கள் வைத்துக்கொள்ளவும்.