சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வேகமாகப் பரவி வரும் கரோனாவைக் கட்டுப்படுத்த இந்த 4 மாவட்டங்களிலும் 19-ஆம் தேதி (இன்று) முதல் வருகிற 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி இந்த 4 மாவட்டங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. 4 மாவட்டங்களில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
ஊரடங்கு காலத்தில் வரும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில், அதாவது 21 மற்றும் 28-ஆம் தேதிகளில் எந்தத் தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அன்றைய தினங்களில், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கும். மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து நடமாடவே தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கரோனாவைத் தடுக்க அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு சென்னையில் தீவிரமாக அமல்படுத்தப்படும். இது தொடர்பாக முதல்-அமைச்சரும், அரசும் அறிவித்துள்ள வழிமுறைகளைப் பொதுமக்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்கள் பொருட்களை வாங்க வாகனங்களில் செல்லக்கூடாது. அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும். மீறி வாகனங்களில் சென்றால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.
நேற்று நள்ளிரவு ஊரடங்கு தொடங்கியதும் போலீசார் சாலைகளில் தடுப்புகள் அமைத்துக் கண்காணித்து வருகின்றனர். சென்னை அண்ணாநகரில் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரித்து வருகின்றனர்.