ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பெண் அதிகாரிகளே பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும்போது, சாமானியப் பெண்களின் பாதுகாப்பற்ற நிலையைச் சொல்லவும் வேண்டுமோ? ‘சிலர் மட்டும் ஏன் இப்படி? உயர் பதவியில் இருப்பவர்களும்கூட, தரம் தாழ்ந்து நடந்துகொள்வது ஏன்? ஆணையும் பெண்ணையும் பாடாய்ப்படுத்தி எடுக்கிறதே இந்தப் பாலியல்?’ என கேள்விகள் எழுந்தபோது, சில முகங்களும் சம்பவங்களும் மனக்கண்ணில் விரிந்தன.
இத்தனைக்கும் அவர் அமெரிக்க அதிபர். ஆனாலும், ‘16 பெண்களும் டொனால்ட் ட்ரம்பும்..’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது, பிரேவ் நியூ பிலிம்ஸ் என்ற நிறுவனம். முன்னாள் வட கரோலினா அழகி, ட்ரம்ப் குறித்து பேசியபோது “அப்போது எனக்கு வயது 20. அவர், எங்கள் அனைவரையும் வரிசையாக நிறுத்தினார். என்னை சதைப் பிண்டமாகவே பார்த்தார்’ என்று குற்றம் சாட்டினார். ‘இதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகள். அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என ட்ரம்ப் தரப்பு மறுத்ததெல்லாம், தனிக்கதை.
வெள்ளை மாளிகையின் பெண் ஆலோசகரான கெல்லயன் கான்வே “பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியாக என்னைத் துன்புறுத்தியுள்ளனர்” என்று கூறி, நீதிபதி கவனாக், ஜேக் தப்பர், ஜெப் பிளக் ஆகியோரின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்டார். அங்கு, நீதிபதி பிரெட் கவனாக் மீது பாலியல் புகார்கள் எழுந்து, அதிபரின் உத்தரவுப்படி விசாரணை நடந்தது.
வேல்ஸ் இளவரசர் சார்லஸின் மனைவி என்ற முறையில், இளவரசியாக வாழ்ந்தவர் டயானா. பின்னாளில் இளவசருடன் மனமுறிவு ஏற்பட்டது. அப்போது, டயானாவுக்கு டோடி பையத் என்றொரு ஆண் நண்பர் உண்டு. பாரிஸ் சுரங்கப்பாதையில் இருவரும் காரில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டதில், இறந்தே போனார் டயானா.
பிரான்சிஸ் போப் ஆண்டவருக்கு நிதி ஆலோசகராக இருந்தவர் கர்டினல் ஜார்ஜ் பெல். பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக, வாடிகன் சென்று காவல்துறையினர் அவரை விசாரிக்க வேண்டியதாயிற்று. ஆஸ்திரேலியா, சிலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில், கத்தோலிக்க பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதை அறிந்த போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்ததோடு, பாதிரியார்களின் பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கென்றே ஆணையத்தை நிறுவினார். போப் ஆண்டவரின் ஆணைப்படி, உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மாவட்டங்களில் நடக்கின்ற குற்றங்களை, அந்த ஆணையம் விசாரித்து வருகிறது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் வாழ்க்கை அழகும் சவுந்தர்யமும் நிறைந்தது என்றும், மூன்று பெண்களைச் சுற்றியே அமைந்துள்ளது எனவும் பேசப்படுகிறது. அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால், மூன்றாண்டுகள் சிறைத்தண்டை அனுபவித்தார். சரி, நமது நாட்டு விவகாரங்களுக்கு வருவோம். பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அரசியல் தலைவர் என்.டி.திவாரி, இரண்டு மாநிலங்களின் முதல்வராகவும், ஒரு மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தவர். பாலியல் புகாரின் காரணமாக, பதவியை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.
இந்தியாவிலும் தலைமை நீதிபதி மீது, பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியதும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் ஊடகவியலாளர்கள் 10 பேர் பாலியல் புகார் அளித்ததும் நடந்திருக்கிறது. கேரளாவில், பாதிரியார் தாமஸ் கோட்டூரும் கன்னியாஸ்திரி செபியும் ஒன்றாக இருந்ததைப் பார்த்த கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட, அந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை கிடைத்தது. ஹோட்டல் தொழிலில் கொடிகட்டிப் பறந்த ‘சரவண பவன்’ ராஜகோபால், ஜீவஜோதியை 3-வது திருமணம் செய்யும் முயற்சியில் இறங்கி, அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை ஆட்களை ஏவி கொலை செய்து, வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை அனுபவித்த நிலையில் மரணமடைந்ததும்கூட, வயதுக்கு மீறிய பாலியல் இச்சையினால்தான்.
டெல்லி மாநிலத்தின் சமூக நலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த சந்தீப்குமார், பெண்கள் இருவரோடு உல்லாசத்துடன் இருந்த வீடியோ லீக் ஆகி, ஆம் ஆத்மி அமைச்சரவையிலிருந்து முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலால் நீக்கப்பட்டு, பாலியல் வழக்கில் கைதானார். இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த தலைவர் அசுதோஷ் ‘தேசத் தலைவர்களுக்கும் பிற பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது’ என வலைதளத்தில் பதிவிட்டது சர்ச்சையானது. ‘வெட்டுப்பட்ட புண்; விம்மி நிற்கும் கட்டி’ என பெண்ணின் உறுப்புகளை அலட்சியமாக விமர்சித்த ஞானி ஒருபுறம் இருந்தாலும், வால்மீகி ராமாயணத்தில், தேவகன்னிகையான மேனகையின் நடனமே, விஸ்வாமித்திரரின் தவத்தைக் கலைத்தது என்றும், இல்லறத்தில் அத்துறவி ஈடுபட்டு சகுந்தலை என்ற மகள் பிறந்தாள் எனவும் விவரிக்கப்பட்டுள்ளது. விவிலியத்தில் ஏவாளிடம் கடவுள் ‘உன்னை நான் உன் துணைக்கு (ஆதாம்) இணையாகப் படைத்தும், நீ அவனைத் தவறான திசைக்குத் திருப்பியதால், அவனே இனிமேல் உன்னை ஆள்வான்..’ என்று கட்டளையிட்டு, தவறான திசை என்று குறிப்பிட்டது, பாலியல் இச்சையைத்தான்.
தத்துவவியலில் முதுகலைப் பட்டம் பெற்று, அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற ரஜ்னீஷ் சந்திரமோகனே, பின்னாளில் ‘ஓஷோ’ ஆனார். ‘மிகவும் வலுவான சக்திமிக்க பாலுணர்வை அடக்கி யாரும் வென்றதாகச் சரித்திரம் இல்லை..’ என்று உறுதிபடக் கூறும் இவர், ‘மிகச் சிறந்த அறிவாளிகள், அதிகமான பாலுணர்வு கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, மிகச்சிறந்த கலைஞர்கள், புதுமையைப் படைப்பவர்கள், மிகத் தைரியசாலிகளெல்லாம், பாலுணர்வு மிக்கவர்களே! சரியாகச் சொல்வதென்றால், உயிரினத்தையே ஆட்டிப்படைக்கிறது, இந்தத் தெய்வீகப் பாலுணர்வு. இதற்கு முக்கியக் காரணம், பாலியல் என்பது உணர்வுமயமானது. உணர்வு மேலோங்கும்போது அறிவு வேலை செய்யாது. அதனால்தான், அறிவை மழுங்க வைக்கும் இந்த உணர்வு, சமூகத்துக்கு ஆபத்தானது என்று எல்லா மதங்களும் ஒரு சேர கண்டிக்கின்றன. இயற்கையோ, இதற்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறது’ என்கிறார். மேலும் ஓஷோ ‘காமத்தின் இயல்பே.. அது ஒருபோதும் மனிதனைத் திருப்தியடைய விடுவதில்லை என்பதுதான்.. அதிருப்தி என்னும் எரியும் நெருப்புதான்.. காமத்தின் உண்மையான சொரூபம்..’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
பாலியல் ஈர்ப்பு என்பது இயல்பானது; இயற்கையானதே! ஒழுக்கநெறியுடன் அதை வெளிப்படுத்தினால், ஒரு தவறுமில்லை. பெண்களைப் பாதுகாப்பதற்கு நடைமுறையில் எண்ணற்ற சட்டங்கள் உள்ளன. ஆனாலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்வது கொடுமைதான்!