Skip to main content

ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து பலியாகும் குடும்பங்கள்; முதல்வருக்கு உருக்கமான கடிதம்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Families continue to be victimized by online rummy; A warm letter to the Chief Minister

 

சென்னையில் ஆன்லைன் ரம்மி மூலம் 17 லட்சம் பணத்தை இழந்த சுரேஷ் என்கிற திருமணமான இளைஞர் ஒருவர் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு கடலில் குதித்து சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் ரம்மி எனும் கொடூரமான அரக்கன் மூலம் ஏற்பட்டுள்ள இந்தத் தற்கொலை குறித்து அவருடைய குடும்பத்தாரிடம் பேசினோம்...

 

கொரோனா காலத்திற்குப் பிறகு புதிதாகத் தொழில் தொடங்கிய சுரேஷ், தொழிலுக்காகத் தான் வாங்கிய கடன் தொகையை ஆன்லைன் ரம்மியில் முதலீடு செய்து, எப்போதும் அதிலேயே மூழ்கி இருந்துள்ளார். 17 லட்சத்தையும் தொலைத்த பிறகு ஒரு நாள் வீட்டிலிருந்து மாயமாகித் தற்கொலை முடிவை எடுத்துள்ளார் சுரேஷ். 

 

"என் மகன்தான் எங்களுக்கு எல்லாமே. இன்று அவனை இழந்துவிட்டு நிற்கிறேன். குடும்பத்தை அவன் தான் நிர்வகித்து வந்தான். இந்த ஆன்லைன் ரம்மியில் எப்படி அவன் சென்று மாட்டினான் என்பது தெரியவில்லை. இந்த வயதில் எங்கு சென்று வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று தெரியவில்லை. தயவுசெய்து இந்த சூதாட்டத்தைத் தடை செய்யுங்கள் என்று முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு இந்தத் தற்கொலைகள் முடிய வேண்டும்" என்று கண் கலங்குகிறார் சுரேஷின் தந்தை.  

 

நம்மிடம் பேசிய சுரேஷின் மனைவி, "எளிமையான குடும்பம் எங்களுடையது. வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கொரோனா காலத்தில் மிகவும் சிரமப்பட்டோம். என்னுடைய நகைகளை அடகு வைத்து தான் புதிய தொழில் தொடங்குவதற்கான பணத்தை ஏற்பாடு செய்தோம். தொழில் நல்ல முறையில் தான் வளர்ந்து கொண்டிருந்தது. அவர் அடிக்கடி வீட்டில் சோகமாக அமர்ந்திருப்பார். ஏன் என்று விசாரித்தால் சரியான காரணம் சொல்ல மாட்டார். 

 

என் அக்காவிடம் தொழிலுக்காக 5 லட்சம் கடன் வாங்கினோம். இந்த விளையாட்டில் ஈடுபட்டு அவர் மீண்டும் மீண்டும் பலரிடம் கடன் வாங்கினார். கடனை வசூலிக்க அவர்கள் கால் செய்ய ஆரம்பித்தனர். ஒரு நாள் மாலை ஆறரை மணிக்கு நகைகள் அனைத்தையும் மறைத்து வைத்துவிட்டு வெளியே சென்றார். வண்டியையும் போனையும் வீட்டிலேயே விட்டுச் சென்றிருந்தார். கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றிருந்தார். அதன் பிறகு போலீசாரின் முயற்சியால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டதை அறிந்தோம். இதுபோன்ற சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு மக்களின் உயிர்மேல் அக்கறையே இல்லையா? தயவுசெய்து இந்த விளையாட்டைத் தடை செய்ய வேண்டும்" என்றார்.

 

"என்னுடைய தம்பிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். எங்களது குடும்பம் தற்போது நடுத்தெருவில் நிற்கிறது. இதுபோன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது. எங்களுடைய வாழ்வாதாரத்துக்கு இனி நாங்கள் என்ன செய்வோம்? முதலமைச்சர் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்" என்கிறார் சுரேஷின் அக்கா.

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டத்தை இன்று வரை நிலுவையில் வைத்திருக்கிறார் ஆளுநர். வாழ்க்கையை இழந்த இவர்களுடைய வலி அவருடைய நிலைப்பாட்டை மாற்றுமா?