சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று கடந்த 30 ஆம் தேதி (30.04.2024) சென்றது. அதன் பின்னர் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6:00 மணியளவில் சேலத்தை நோக்கி மீண்டும் வந்து கொண்டிருந்தது. மாலை நேரம் என்பதால் பேருந்தில் அதிகப்படியான பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் ஏற்காடு மலையின் 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்தது. மேல்பகுதியில் இருந்து அடுத்த கொண்டை ஊசி வளைவு உள்ள பகுதி சாலை வரை உருண்டோடியது. இதில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஏற்காடு காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அவ்வாறு மீட்கப்பட்ட அனைவரும் கார் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இதற்கிடையில், இந்தக் கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை ஆறாக அதிகரித்தது.
இந்நிலையில் ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு வரும் வாகனங்களை அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசுகையில், “ரகசிய பயணம் எதுவும் நான் மேற்கொள்ளவில்லை. ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றிருந்தேன். அதிக நேரம் நிற்பதால் குதிகாலில் வலி ஏற்பட்டது. வறட்சியான நேரத்தில் ஓய்வு எடுப்பதற்கு முதலமைச்சர் செல்வதா?” எனவும் கேள்வி எழுப்பினார்.