Skip to main content

எகிப்து பிரமிடுக்குள் பூனைகளும் வண்டுகளும் மம்மிகளாய்!

Published on 12/11/2018 | Edited on 12/12/2018

எகிப்தில் உள்ள பிரமிடுகளுக்குள் இடம்பெற்றுள்ள கல்லறைகள்  அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்தே அற்புதங்களின் மையமாக இருக்கின்றன.

 

ee

 

 

அலெக்ஸாண்டர் பிரமிடுகளுக்குள் நுழைந்து தங்கத்தையும் வைரத்தையும் கொள்ளையடித்தான். நெப்போலியன் சென்றபோது அவனுக்கு எதுவுமே கிடைக்கவில்லை எனக் கூறப்படுவதுண்டு.


 

ஆனால், தொல்லியல் நிபுணர்களுக்கு அதன்பிறகு மிகப்பழமையான வரலாற்று பொக்கிஷங்கள் கிடைத்தன. இப்போதும் அங்கு தொடரும் ஆய்வுகளில் பல அற்புதமான விஷயங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.


 

கடந்த ஆறுமாதங்களுக்கு முன் நெக்ரோபோலிஸ் என்ற இடத்தில் உள்ள யுஸெர்காஃப் மன்னரின் பிரமிடு வளாகத்தில் உள்ள திறக்கப்படாத ஒரு அறையை திறந்தார்கள். அங்கு நடந்த ஆய்வில், இதுவரை கிடைக்காத சில மம்மிகள் கிடைத்தன.

 

 

ee

 

 

12க்கும் அதிகமான பூனைகளும், எகிப்தியர் புனிதமாக கருதிய ஒருவகை வண்டுகளும் பதப்படுத்தப்பட்டிருந்தன. எகிப்தியர்கள் பூனைகளை கடவுளாக கருதினர். பூனைகளின் கடவுள் பாஸ்டெட் என்று அழைக்கப்படுகிறது. அந்தக் கடவுளுக்கு அர்ப்பணமாகவே இந்த மம்மிகள் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


 

இதுவரை இந்த மம்மிகளை திறக்கவில்லை. எகிப்தை ஆட்சி செய்த ஐந்தாவது பேரரசுக் காலத்தில் அதாவது கி.மு. 2500க்கும் கி.மு.2350க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த இந்த மம்மிகளை சில வாரங்களில் திறந்து பார்க்கப் போவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

இந்த மம்மிகள் இருந்த கல்லறைக்குள் டஜன் கணக்கில் பூனைகளின் மம்மிகளும், வண்ணம் பூசப்பட்ட பூனை சிலைகளும், ஒரு வெண்கலத்தால் செய்யப்பட்ட பூனை சிலையும் இருந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ee

 

 

பூனைகள் மற்றும் வண்டுகளின் மம்மியை திறக்கும் நாளை தொல்லியல் நிபுணர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

 

 

Next Story

எகிப்தில் இஸ்ரேலியர்கள் இருவர் சுட்டுக்கொலை!

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Two Israelis shot passed away Egypt

 

இஸ்ரேல் விவகாரம் சூடுபிடித்திருக்கும் சமயத்தில், எகிப்தில் இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், நேற்று முன்தினம் காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல் -அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போரை அறிவித்து வான்வெளி, தரைவழி என தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இரு தரப்பு மோதல் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் எகிப்து நாட்டில் இஸ்ரேலியர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். எகிப்தின் மத்திய பகுதி அலெக்சாண்டிரியாவில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளதால் அங்கு ஏராளமான வெளிநாட்டினர் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் அந்த  நகரிலுள்ள பாம்பே தூண் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை மக்கள் கூடியிருந்தனர். திடீரென, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு போலீஸ் அதிகாரி, துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார். இதில், மூன்று பேர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். அதில், இருவர் இஸ்ரேல் நாட்டு பயணிகள் எனவும் ஒருவர் எகிப்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. 

 

இதனைத் தொடர்ந்து, வன்முறையை நிகழ்த்திய போலீஸ் அதிகாரியைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் தனது கட்டுப்பாட்டை இழந்து அவ்வாறு நடந்து கொண்டேன் என்று கூறியதாகத் தெரிகிறது. 

 

 

 

Next Story

“தொன்மையான 3 மொழிகளில் தமிழ்மொழி பழம்பெரும் சிறப்பு வாய்ந்தது” - எகிப்தில் அப்பாவு பெருமிதம்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Among the 3 ancient languages, Tamil is the most legendary says appavu in Egypt

 

கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் அக்டோபர் மாதம் 03 ஆம் தேதி முதல் 05 வரை 66வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாகச் சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு கலந்து கொள்கிறார். இவருடன் சட்டமன்றச் செயலாளர் கி. சீனிவாசன் இந்திய வட்டார பிரதிநிதிகளின் செயலாளராகக் கலந்து கொள்கிறார். மேலும் பேரவைத் தலைவரின் சிறப்பு தனிச் செயலாளர் பத்ம குமாரும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

 

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று (26.09.2023) காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து எகிப்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஆய்வுப் பயணம் மேற்கொள்கின்றனர். அதன்பின்னர் பின்பு அக்ரா நகருக்கு 03.10.2023 அன்று சென்றடையவுள்ளனர். இதையொட்டி பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று துபாய் வழியாக எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார். கெய்ரோவில் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு  இன்று (27.9.2023) அந்நாட்டின் செனட் துணை சபாநாயகர் பாஹா எல்டின் ஸுக்கா, தலைமையில் நடைபெற்ற செனட் சபையின் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல் இந்த கூட்டத்தில், அந்நாட்டின் செனட் செகரட்டரி ஜெனரல் முகம்மது இஸ்மாயில் இட்மேன், இந்திய தூதர் அஜித் குப்தா, அசாம் சட்டப் பேரவைத் தலைவர் பிஸ்வாஜித் டைமாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

இந்நிலையில் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு  இந்த கூட்டத்தில் பேசுகையில், “எகிப்தில் முதன் முதலில் தோன்றிய நைல் நதி நாகரீகம் போன்று, இந்தியாவின் வடக்கில் சிந்து சமவெளி நாகரீகமும், தெற்கில் தாமிரபரணி நாகரீகமும் மிகவும் தொன்மையானது. அதேபோல், தொன்மையான மூன்று மொழிகளில் தமிழ்மொழி பழம்பெரும் சிறப்பு வாய்ந்தது. இந்த பழமையான மொழி இன்றும் இளமையுடன் உள்ளது. நாளையும் இது தொடரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, காலநிலை மாற்றத் தாக்கத்தை குறைத்திடவும், வனங்களைப் பாதுகாத்திடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ச்சியாக கண்காணித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார். அதே சமயம் 66வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு 07.10.2023 காலை 08.25 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைகின்றனர்.