தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வாச்சாத்தி மலைக் கிராமத்தில் உள்ள 18 இளம்பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அந்த வழக்கிற்கு 30 ஆண்டுகள் கழித்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கறிஞர் பவானி பி. மோகன் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
“நேரம் தாமதித்து கிடைக்கும் நீதி மறுக்கப்பட்டது என சொல்வார்கள். ஆனால், இந்த வழக்கில் அது விதி விளக்கு தான். ஏனென்றால், இவ்வளவு வருடங்கள் தாமதமாகியதால் தான் நமக்கு சிறந்த நீதிபதியின் மூலம் தண்டனை கிடைத்தது எனப் பார்க்கிறேன். மேலும், கோகுல் ராஜின் வழக்கில் சில விஷயங்கள் தெளிவில்லாமல் இருக்கையில் மேல்முறையீட்டு மன்றம் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யலாம் என நிரூபித்தவர் நீதிபதிகள் ரமேஷ் மற்றும் ஆனந்த விக்னேஷ். அதன் பின்னர் இந்த வாச்சாத்தி வழக்கிற்காக நீதிபதி வேல்முருகன், வாச்சாத்திக்கும், சித்தேரி மலை பகுதிக்கும் சென்று ஆராய்ந்து தீர்ப்பளித்துள்ளார். எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு தாமதமாக வந்தாலும், கிடைக்க வேண்டிய நியாயம் கிடைத்துள்ளது என நினைக்கிறேன்.
1991ல் ஜெயலலிதா ஆட்சியமைத்த பின்னர் தான் தமிழ்நாட்டில் நிறைய மனித உரிமை மீறல்கள், குறிப்பாக காவல்துறையின் மீறல்கள் அதிகரித்தது. அதிலும், தேவாரம் தலைமையில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள், அடக்குமுறைகள் நடந்தது. பத்மினி என்ற பெண்ணும் காவல்நிலையத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது. இதே போல் ஒரு சம்பவம் தான் வாச்சாத்தியிலும் பழங்குடியின மக்களுக்கு நிகழ்த்தப்பட்டு பாதிக்கப்பட்டனர். இவர்கள் 20-06-1992ல் தாக்கப்பட்டனர்.
ஆனால், அதற்கு முந்தைய நாளே சுமார் ஐநூறு அதிகாரிகள் அந்த மலைப்பகுதியில் சூழ்ந்து, அடுத்த நாள் இதனை நிகழ்த்தியுள்ளனர். நான் ஒன்றும் சந்தனக் கடத்தல் செய்வதை நியாயப்படுத்தவில்லை. மாறாக, இந்த சந்தன மரங்களை வாங்கும் பணக்காரர்களை,உடன் இருக்கும் வனத்துறையினர், காவல்துறையினரை கைப்பற்றுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதில் சில கிராம மக்கள் சந்தன மரங்கள் வெட்டியதை ஒப்புக்கொண்டும் உள்ளனர். அதற்காக, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை என்பது மிகக் கொடூரமானது. அதிலும் அந்த காலத்தில் இந்த வழக்கை செங்கோட்டையன்(அப்போதைய வனத்துறை அமைச்சர்) உள்பட வனத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல் கண்காணிப்பாளர் என சேர்ந்து இதனை மூடி மறைத்துள்ளனர். இன்றைக்கு வேல்முருகன் தீர்ப்பின் 106வது பத்தியில், ‘வழக்கு நடந்த காலத்தில் இருந்த வனத்துறை அதிகாரிகள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தன தீர்ப்பில் தெரிவித்திருந்தார். இவர்கள் தவறை ஒப்புக்கொள்ளாமல் இருந்ததால் மூன்று வருடம் கழித்து உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கு பிறகு தான் வழக்கிற்கு உயிர் வந்தது.
முதலில் இந்த வழக்கில் 269-பேர் குற்றம் சாட்டப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதில், கர்ப்பிணி, சிறுமி என 18 பழங்குடியின பெண்களை ரேஞ்சர் ஆபிசில் வைத்து வன்கொடுமை செய்துள்ளது மனிதத் தன்மை அற்றது. மேலும், இதில் காயம் அடைந்தவர்களை மாட்டு வண்டியில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டெல்லிபாபு, சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை போன்றவர்கள் தங்கள் சார்பில் முன்னெடுப்புகளை எடுத்தனர். ஆனால், இந்த வழக்கை விசாரிக்கவே முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பத்மினி தள்ளுபடி செய்கிறார்.
இதன் பிறகே, அன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக இருந்த நல்லசிவம் உச்சநீதிமன்றத்தில் ஆர்டிக்கள் 32 வழக்காக பதிவு செய்கிறார். பின்னர், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலில் 1995-ம் ஆண்டு இந்த வழக்கின் விசாரணை சிபிஐ-ஆல் தொடங்குகிறது. இதற்கு அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு அமைப்பு, மாதர் சங்கம் முதலியவை துணை நின்று விசாரிக்க உதவியது. வாச்சாத்தி எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு என பதியப்பட்டாலும், இது 1989-ல் அறிவிக்கப்பட்டு 1995-ல் தான் அதற்கான விதிகளும் சேர்க்கப்பட்டது. ஆகவே, இந்த வழக்கை தர்மபுரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குமரகுரு என்ற நீதிபதி விசாரித்தார். அப்பொழுது, அதில் ஈடுபட்ட 265 பேருக்கும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் ஏழு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்ட பதினேழு பெண்களை வைத்து அடையாளம் காணப்பட்டு ஆர்டிக்கள் 376-ம் போடப்பட்டது. இந்த தீர்ப்பு வழங்கும் பொழுது 54-பேர் ஏற்கனவே இறந்து போக, மீதமுள்ளவர்களுக்குத் தண்டனையை 29/11/2011-ல் வழங்கியது. இதனால் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் சிலர் மேல்முறையீடு செய்து பெயிலில் வெளியே வந்தனர்.
மேலும், விசாரிக்கச் சென்ற வனத்துறையினரைப் பணி செய்யவிடாமல் மக்கள் தடுத்தனர் என சிஆர்பிசி 187 சட்டத்தில் தனது தரப்பு வாதத்தை அதிகாரிகள் வைத்தனர். இருந்தும் இதனை பொய் வழக்கு என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. வனத்துறையினரும் தாக்கும் எண்ணத்துடன் சென்றுள்ளதால் அவர்கள் மீது செக்சன் 149 வழக்கு போடப்பட்டது. கும்பலாக வந்து குற்றச்செயலில் ஈடுபடும் பொழுது, அதில் இருந்த அனைவர் மீதும் பாயக்கூடிய வழக்கு தான் இது. பொதுவாகவே பழங்குடியின மக்கள் ஊரைவிட்டு நெடுதூரம் தள்ளி வசிப்பர் எனவே அவர்களை அச்சுறுத்தி வழக்கு தொடர்ந்ததை வெளிக்கொண்டு வர முடியவில்லை. ஆனாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் துணை நின்றனர். எனவே, பின்னாளில் இதற்கான காரணங்கள் வெளிவந்துவிட்டது.
அரசு ஊழியர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டால் அதற்கான, இழப்பீடு தொகையில் பாதியை அவர்களே கட்ட வேண்டும். ஒருவேளை, இறந்துவிட்டால், அவரின் வாரிசுகள் அதனை கடன் போல அடைக்க வேண்டும். தொடர்ந்து, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்புள்ளது. பொதுவாகவே, விசாரணை நீதிமன்றத்திலும், மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரிப்பர். ஆனால், உச்சநீதிமன்ற சட்டப்படி தான் செயல்படும். மேல்முறையீடு செய்தாலும் அதற்கு அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
இந்த எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை சட்டம் என்பது, குற்றம் நடப்பதற்கு முன்னரே, மாவட்ட காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளே ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு, அன்றைக்கு இருந்த வனத்துறை அமைச்சர் செங்கோட்டையனும் பொறுப்பு. அப்போது, இவர் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயலலிதாவை காப்பாற்றும் முயற்சியில் டி.வி.களில் இது குறித்து பேட்டி கொடுத்தார். மேலும், ஜெயலலிதா, " இது போன்ற சம்பவமே நடக்கவில்லை " என சட்டமன்றத்தில் கூறியுள்ளார். இதையெல்லாம் வைத்துத் தான் வழக்கில் ஆதாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பத்மினி வழக்கை தள்ளுபடி செய்தார்.
எனவே தான், மாவட்ட ஆட்சியாளர்கள், காவல் துறையினர் மட்டுமில்லாமல் அமைச்சர் செங்கோட்டையனும் இதற்கு பொறுப்பேர்க்க வேண்டும் என சட்டமும் சொல்கிறது. இதேபோல் தான் கோகுல்ராஜ், வேங்கை வயல், திவ்யா, நான்குநேரி, வழக்குகளிலும் மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றுள்ளது. சமீபத்தில் கூட தென்காசியில் பட்டியலின சிறுவனுக்கு கடைக்காரர் மிட்டாய் கொடுக்கவில்லை என பிரச்சனை எழுந்தது.
கோகுல்ராஜ் வழக்கிலாவது அவர் ஒருவர் தான் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால், வாச்சாத்தியில் பழங்குடியின மக்களை 500பேர் கொண்ட கும்பல் சேர்ந்து கொடுமைப்படுத்தியதை எப்படி கடந்து விட முடியும். இதனை நீதிபதி வேல்முருகன் சரியான பார்வையில் பார்த்து தீர்ப்பளித்துள்ளார். இது தாமதிக்கப்பட்ட நீதியாக இருந்தாலும் சரியான நீதி என சொல்லியிருந்தேன். ஏனென்றால், செங்கோட்டையன் உள்பட அரசு அதிகாரிகள் இத்தனை பெரிய பிரச்சனையை மறைக்க முயன்றுள்ளனர். ஆகையால் தற்போது, செங்கோட்டையின் மீதும் வழக்கு தொடர்வது குறித்து சகத் தோழர்களிடம் கலந்துரையாடி வருகிறேன்.
ஒரு பெண்ணின் விருப்பத்தைத் தாண்டி வற்புறுத்தி ஒரு தீங்கு செய்யும் போதுதான் கொலை வழக்கை விட பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏன், அவளது கணவன் கூட இது போன்று செய்தால், அதனை ‘திருமண வன்கொடுமை’ என்கிறார்கள். அதிலும், வாச்சாத்தி வழக்கு பழங்குடியின சமூக மக்கள் மீது நிகழ்ந்தது; தேசத்தின் மீது நிகழ்ந்தது போலத் தான். தற்போது தீர்ப்பு வந்த பிறகு அதில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறேன். ஆனால், அவர்கள் இழந்த 30 வருட வாழ்கையைத் தீர்ப்பின் மூலம் முழுவதுமாக சந்தோசத்தை அளித்திடாது. இது மாதிரியான தீர்ப்புகள் வர கம்யூனிஸ்ட்டுகள் தான் காரணம். இந்த தீர்ப்பிற்கு பின் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தடுப்பதே பிரதானம். தற்போது, வன்கொடுமை சட்டங்களின் பற்கள் கூர் தீட்டப்பட்டதும் நாம் அறிந்ததே. ஏன், இப்போதெல்லாம் வழக்கு பதிந்தது முதல் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு மீண்டும் முறையிட்டால் கூட பாதுகாப்புடன் அவர்களின் குரலை கேட்க வேண்டும் எனவும் இருக்கிறது. இதுவெல்லாம் நடைமுறைக்கு கொண்டு வரணும்.
கோகுல் ராஜ், வாச்சாத்தி வழக்கில். ஏன், வீரப்பன் வழக்கில் கூட 89பேருக்குத் தான் நீதி கிடைத்துள்ளது. எனவே, இதிலும் சதாசிவக் கமிஷன் உருவானதற்கு நக்கீரன் பத்திரிகை தொடங்கி பீப்பில்ஸ் வாட்ச்(peoples watch) என அனைவரும் போராடிய பின்னரே 2004 அந்த பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கியது. ஆனாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் என்று கண்டறியவில்லை. தற்போது, வாச்சாத்தி வழக்கில் கிடைத்த நீதி போன்று வீரப்பனை விசாரிக்க நேர்ந்த போது நடந்த அக்கிரமங்களுக்கும் நீதி கிடைக்க முயற்சிப்போம்.
அதாவது காக்கி சட்டை அணிந்த காரணத்தினாலே சட்டத்தின் பெயரில் எதை வேண்டுமானால் செய்யலாம் என நினைக்கக் கூடாது. மேலும், கோகுல் ராஜ் வழக்கு போன்ற தீர்ப்புகளால் இவர்களுக்கு அச்சம் வந்துள்ளது. இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த சமூகத்திற்கே கிடைத்த தீர்ப்பாக நான் பார்க்கிறேன். அதுபோல், தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு வந்த இந்த இரண்டு தீர்ப்புகளும் நம்பிக்கை அளிக்கின்றது.” என்றார்.