


விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை முழுவதும் 2500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி தற்போது விநாயகர் சிலை வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.


சென்னையில் கடந்த 29 வருடமாக விநாயகர் சிலையை வைத்து வரும் குட்டி கணேசனை சந்தித்தோம். அப்போது அவர் நம்மிடம், ''29வது வருடமாக இந்த வருடம் விநாயகர் சிலையை தயார் செய்து வைக்கிறோம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு உணவுப் பொருளைக்கொண்டு செய்வோம். முழுக்க முழுக்க இயற்கை விநாயகர். எந்தவித ரசாயனங்களும் பயன்படுத்தாமல் இந்த சிலையை செய்கிறோம். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்தவுடன் இதனை அப்படியே மக்களுக்கு கொடுத்துவிடுவோம். கடலில் கரைத்தாலும் எந்த பாதிப்பும் வராது. கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாக பயன்படும்.



சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வரும் நான், சென்னை நகரத்தில் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க தொடங்கியவர்களில் ஒருவன். 1984ல் தொடங்கி இன்று வரை விநாயகர் சிலையை வைத்து வருகிறேன். 1990 வரை மேற்கு மாம்பலத்தில் வைத்து வந்தோம். 91ல் இருந்து தி.நகர் வெங்கட்நாராயணசாலையில் வைத்து வருகிறோம். 91ல் இருந்து நான்கு வருடங்களுக்கு சென்னையிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை வைத்தோம். அதன் உயரம் 40 அடி. அதன் பிறகு பாலங்கள் கட்டப்பட்டது. பாலங்கள் கட்டிய பிறகு அந்த அளவு உயரங்கள் கொண்ட விநாயகர் சிலையை வைக்க முடியவில்லை. அப்போது பழைய மாடல். சிலையாகவே இருக்கும். இப்போதெல்லாம் செல்போனிலேயே போட்டோ எடுக்கிறார்கள். அப்போதெல்லாம் போட்டோ எடுப்பது பெரிய விசயம். ஆகையால் அந்த பழைய மாடல் பிள்ளையார்களை நான் போட்டோ எடுத்து வைக்கவில்லை. ஏதோ என்னிடம் இருக்கும் சில விநாயகர் சிலை போட்டோக்களை தருகிறேன்.


1995ல் இருந்து ஏதாவது ஒரு உணவுப்பொருளை வைத்து விநாயகர் சிலையை தயார் செய்து வைக்கிறோம். 5008 தேங்காய் பயன்படுத்தி தேங்காய் விநாயகர் சிலை செய்தோம். கல்கண்டு விநாயகர், கொழுக்கட்டை விநாயகர், பேரிச்சம்பழங்களை கொண்டு ஒரு வருடம் சிலை செய்தோம். முழுக்க முழுக்க கடலை மிட்டாய்களை பயன்படுத்தி சிலை செய்தோம். இதேபோல் ஒருவருடம் ஆரஞ்சி மிட்டாய் பயன்படுத்தி சிலை செய்தோம். 700 கிலோ வெல்லம் பயன்படுத்தி சிலை செய்தோம். லட்டு பிள்ளையார் செய்தோம். 25வது வருடத்திற்கு 800 கிலோ மைசூர் பாக்கை தயார் செய்து விநாயகர் சிலை செய்தோம். அங்கேயே மைசூர் பாக்கு சுடசுட போட்டு அந்த சிலையை செய்ய ஆறு நாட்கள் ஆனது. முறுக்கு, தட்டை, அதிர்சம் ஆகியவைகளை பயன்படுத்தி கடந்த வருடம் விநாயகர் செய்தோம். இந்த வருடம் அத்தி விநாயகர் தயார் செய்து வருகிறோம். இதற்காக அத்தி பழம், முந்திரி பருப்பு, ட்ரை அன்னாசி, கிவி, திராட்சை ஆகியவை பயன்படுத்துகிறோம்'' என்றார்.