செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி குறித்தும் பல்வேறு கருத்துகளை ஆளுநர் பேசியது தொடர்பாகவும், பாஜக செயல் திட்டம் மற்றும் அண்ணாமலை பற்றியும் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தியை சந்தித்துப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்களைப் பற்றி மிகவும் அவதூறாக வானதி சீனிவாசன் பேசி வருகிறாரே?
பெண்களுக்கு எதிராக அத்தனை வன்முறைகள் நடந்தது வானதி சீனிவாசன் இருக்கக்கூடிய பாஜகவில் தான். மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்முறை செய்த பாஜக எம்.பி மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால் அந்த எம்.பி மூலமாகப் பல பெண்களை பாஜகவில் பாலியல் வன்முறைகளை செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட கட்சியில் இருந்துகொண்டு வானதி சீனிவாசன் இப்படி பேசலாமா? கர்நாடகாவில் சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கையில், பாஜகவை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் ஆபாசப் படங்களை பார்த்தார்கள். இப்படி அவருடைய கட்சி இருக்கும்போது திமுகவை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. ஆக, இப்படிப்பட்ட பேச்சுகளை பேசிய வானதி சீனிவாசன் மன்னிப்பு கேட்டு வாபஸ் பெற வேண்டும்.
ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் வரம்பு மீறிய வார்த்தைகளை முதல்வர் பயன்படுத்துகிறார் என்று ஆளுநர் கூறுகிறாரே?
ஆளுநரின் செயல்கள் சட்டம் மீறிய செயலாக மட்டுமல்ல, வரம்பு மீறிய செயலாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இல்லாததை எல்லாம் எடுத்து சொல்லும் அளவிற்கு பண்பாடற்ற பேச்சுகளை பேசுகிறார் ஆளுநர். முதல்வர் எழுதிய கடிதத்தில் நடந்ததை எல்லாம் எடுத்துரைக்கிறார். அந்த கடிதத்தை புரிந்துகொள்ளும் அளவிற்கு அறிவு இல்லாத காரணத்தினால் வரம்போடு பேசியது வரம்பு மீறிய வார்த்தையாக தெரிகிறது. அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுவது தான் வரம்பு மீறிய செயலாக இருக்கிறது. அதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். ஆக மக்கள் மத்தியில் முதல்வர் என்றுமே வரம்பு மீறி பேசியதே இல்லை. அதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட சரத் பவார், கட்சி இரண்டாகப் பிரிந்து போகும் அளவிற்கு இருக்கிறது. சரத் பவாருடைய தேசியவாத காங்கிரஸ் கட்சியை போலவே மற்ற எதிர்க்கட்சிகளும் பிரிந்து விடும் என்று கூறுகிறார்களே?
பாஜக பாசிச கட்சி என்பது நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. ஜனநாயகத்தை மீறி கோடிக்கணக்கான பணத்தை வாரி இரைத்து இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றனர். ஆனால், இதுபோன்ற செயல்களைத் தமிழ்நாட்டில் ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற 8 பேர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுத்திருக்கிறார்கள். அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கிறார்கள். பிரிந்த சென்ற 8 பேர் மீதும் கடுமையான குற்றவியல் வழக்குகளும் ஊழல் வழக்குகளும் இருக்கின்றன. ஊழலை எதிர்ப்பது தான் ஒற்றைக் குறிக்கோள் என்று கூறிவிட்டு ஊழல் செய்த உறுப்பினர்களை அமைச்சர்களாகப் பதவிப் பிராமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அதற்குத் தான் சரத் பவார், இப்படிப்பட்ட ஊழல் செய்தவர்கள் பிரிந்து சென்றதற்கு நன்றி என்றும் மாநிலம் முழுவதும் மக்களை சந்திக்கப் போகிறேன் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆக இனிமேல்தான் சரத் பவார் மிகவும் உறுதியாக இருப்பார். அதுமட்டுமல்லாமல், தமிழக முதல்வர், யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக் கூடாது என்பதில் தான் மிகவும் உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார். இதைத் தான் பாட்னாவில் கலந்து கொண்ட அத்தனை தலைவர்களும் கூறினார்கள். பாஜகவை எதிர்ப்பதில் இருந்து யாரும் பின்வாங்கப் போவதில்லை என்று உறுதியாக இருக்கிறார்கள்.