ஆபரேஷன் ராஜஸ்தானை தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது பாஜக தலைமை. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்துவதற்கு சச்சின் பைலட்டை பாஜக களம் இறக்கியது. சச்சின் பைலட்டிடம் 32 எம்.எல்.ஏ.க்களை கொண்டு வா என உத்தரவிட்டது. அவரால் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் இழுக்க முடியவில்லை. ஆனாலும் சச்சின் பைலட் ஒரு முதலமைச்சர் வேட்பாளர் என்ற அடிப்படையில் பாஜக அவரை இயக்குகிறது. அசோக் கெலாட் ஒரு பலவீனமான தலைவர் என்கிற இமேஜை பாஜக நிறுவியிருக்கிறது. கர்நாடகாவில் இதுபோன்ற ஒரு ஆபரேஷன் ஆறு மாதத்திற்கு பிறகு பலன் அளித்தது. அதுபோல பாஜக ராஜஸ்தானில் ஒரு விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கிறது. அதே ஆட்டம் தமிழகத்திலும் தொடங்கியுள்ளது என்கிறார்கள் டெல்லி பாஜக தலைவர்கள்.
பாஜகவின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டா தன்னை ஒரு பலம் மிக்க தலைவராக முன்னிறுத்தி, அமித்ஷாவிற்கு அடுத்தபடியாக கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார். அவருக்கு தமிழகத்தின்மீது எப்போதும் ஒரு கண் உண்டு. அவர் முதலில் வீழ்த்தியது சசிகலா புஷ்பா என்கிற அ.தி.மு.க. உறுப்பினரைதான். அவரை தமிழக பாஜக தலைவர்கள் மதிக்கவில்லை என்றாலும் ஜே.பி.நட்டாவின் ஆதரவில் அவருக்கு வேண்டப்பட்ட காரியங்கள் டெல்லியில் நடந்தேறி வருகின்றன.
முருகனை பாஜக தலைவராக்கியதும் ஜே.பி. நட்டாதான். அந்த முருகனிடம்தான் தமிழகத்திற்கான ராஜஸ்தான் ஆபரேஷனை ஒப்படைத்திருக்கிறார் என்கிற பாஜக தலைவர்கள். இந்த ராஜஸ்தான் ஆபரேஷனின் பலம் மற்றும் பலவீனங்களை பற்றி ஜே.பி.நட்டா, முருகனுக்கு கொடுத்த கட்டளைகளையும் விவரிக்கிறார்கள்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட்டை பலவீனப்படுத்தியதைப்போல தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை பலவீனப்படுத்த வேண்டும். மு.க.ஸ்டாலின் அவரது மகன் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால், அடுத்த பத்து வருடத்தில் ஸ்டாலினுக்கு போட்டியாக முதல்வர் வேட்பாளராக வரத் தகுதியுள்ள கனிமொழி அதிருப்தியில் இருக்கிறார்.
கனிமொழியின் அதிருப்தியை பயன்படுத்தி திமுகவை பலவீனப்படுத்த வேண்டும். ராஜஸ்தானைப் போலவே ஒரு வெயிட் அண்டு கேம் விளையாடி திமுக அதிகாரத்தில் வருவதை தடுக்க வேண்டும். அதற்காக திமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களை பாஜகவிற்கு கொண்டுவர வேண்டும். அந்த வகையில்தான் வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்கள் பாஜகவிற்கு அழைத்து வரப்பட்டார்கள். மேலும் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா போன்றவர்களை வளைக்க காய் நகர்த்தப்படுகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பத்துக்கும் மேற்பட்ட சதவீத வாக்குகளை வாங்கி காங்கிரஸ் கட்சி திமுக, அதிமுக ஆகியவற்றிற்கு அடுத்தப்படியாக மூன்றாவது பெரிய கட்சி என்கிற இமேஜை பெற்றது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அந்த இடத்தை பெற பாஜக முயற்சிக்கிறது. அதற்காக அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை எதிர்பார்க்கிறது. அந்த பேரத்தில் அதிமுக கவிழ்த்துவிடும் என்கிற சிந்தனையும் இந்த ஆபரேஷன் ராஜஸ்தானில் இருக்கிறது. அதற்காக திமுக பிரமுகர்களைப் போலவே, அதிமுக விஜபிக்களை வளைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
பாஜகவின் இந்த வலையில் அதிமுக அமைச்சர் ஒருவர் வீழ்ந்துவிட்டார், அவர் ராஜேந்திரபாலாஜி. அவருக்கு அடுத்தடுத்த நகர்வுகளில் ராஜ்ய சபா எம்.பி., மத்திய அமைச்சர் என ஆசை வார்த்தை காட்டப்படுகிறது. விரைவில் அவர் பாஜகவில் சங்கமமாவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜேந்திர பாலாஜியோடு ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து பாஜகவுக்கு வந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ரஜினியோடு தொடர்பு வைத்துள்ள அதிமுக அமைச்சர்கள் என ஒரு படையையே அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு கொண்டுவர திட்டமிட்டு காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார் ஜே.பி.நட்டா.
இவையெல்லாம் இன்னமும் ஆரம்பகட்ட நிலையிலேயேதான் இருக்கிறது. பாஜகவின் இந்த ஆபரேஷன் ராஜஸ்தான் வெற்றி பெறுவதற்காக ஒரு பெரிய வலையை வீசி அதில் சிக்கப்போகும் திமுக, அதிமுக விஜபிக்களை எதிர்நோக்கி பாஜக காத்திருக்கிறது என்கிறார்கள் டெல்லி பாஜக தலைவர்கள்.