Skip to main content

தனது ஊருக்கு பெருமை சேர்க்க முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி? எதிர்ப்பும் வலுக்கிறது...

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 6-ம் தேதி காலை தொடங்கியது. தனது தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வு கூட்டத்தில், சட்டமன்றத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பதை விவாதித்து முடிவெடுப்பார் சபாநாயகர் தனபால்.

 

edappadi palanisamy



இந்த நிலையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு பிரதான எதிர்க்கட்சியான திமுக சட்டமன்றத்தில் வலியுறுத்த உள்ளது. அடுத்தது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற அபரிதமான வெற்றி மேலும் பல்வேறு பிரச்சனைகள் என பரபரப்பான நிலையில் தமிழக சட்டமன்றம் நடக்க இருக்கிறது.


 

 

இதில் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஆளும் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்க திமுக தயாராகி வருகிறது. இந்த நிலையில் எது நடந்தாலும் அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தனது இருப்பை பதிவு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று ஸ்டார் வேல்யூ இல்லாமல் மிக சாதாரணமாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து முதல்வராக தொடர்ந்து இரண்டு ஆண்டுகளை கடந்துந்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 
 

தனது காலத்தில் தனது ஊருக்கு மிகப்பெரிய பெருமை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக எடப்பாடி மாவட்டம் ஒன்றை அறிவிப்பதாக முடிவு செய்துள்ளார். அதை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க உள்ளதாக அதிமுகவினர் கூறியுள்ளார்கள்.


 

 

புதிய எடப்பாடி மாவட்டத்தில் சங்ககிரி குமாரபாளையம் திருச்செங்கோடு மற்றும் எடப்பாடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் அடங்குகிறது. முதல்வர் பழனிசாமி தனது பெயரில் உள்ளது போல் எடப்பாடியை தனி மாவட்டமாக அவரது பெயரை காலத்திற்கும் தமிழ்நாடு அரசாங்கத்தில் பதிவு செய்து வைக்க இருக்கிறார் என பெருமையோடு கூறுகிறார்கள் அதிமுகவினர். அதே சமயத்தில் எடப்பாடி என்கிற ஊர் ஒரு சிறிய கிராமம். அது மாவட்டத்தின் மையப் பகுதியாக இல்லை. சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்தால் ஒன்று சங்ககிரியாக இருக்கும். இதுதான் மையமான பகுதியாக இருக்கும், ஆனால் எடப்பாடி என்பது ஏதோ ஒரு மூலையில் இருக்கிற ஊர் ஆகத்தான் இருக்கும், ஆகவே எடப்பாடியை தலைநகராகக்கொண்டு மாவட்டம் அமையக்கூடாது என எதிர்ப்பு குரல்களும் வலுத்துள்ளது.