Skip to main content

"சரத்பவார் முதல் சிந்தியா வரை.." உள்ளடி வேலைகளால் காங்கிரஸை கரைத்த பெரும் தலைகள்!

Published on 10/03/2020 | Edited on 11/03/2020

பெரும் பரபரப்புகளுக்கு இடையே கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் மூன்றில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றது. சிறிய கட்சிகளின் உதவியுடன் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் அரியணையில் ஏறியது. இனி வெற்றி முகம்தான் என்று காங்கிரஸ் தலைவர்கள் மார்தட்டிய நிலையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆட்சியில் இருந்த மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பெரும் மாநிலங்களில் கூட பாஜகவிடம் சரண்டர் ஆனது காங்கிரஸ் கட்சி.

 

gh



இத்தகைய தள்ளாட்டத்தில் காங்கிரஸ் கட்சி இருந்துவரும் நிலையில், கடந்த வருடம் கர்நாடகாவில் அதன் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்களும் அணி மாறியதால் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியிழந்தது. சொல்லிவைத்தார் போல அடுத்த சில தினங்களிலேயே பாஜக ஆட்சியில் அமர்ந்தது. தேர்தல் வெற்றி பெற முடியாமல் காங்கிரஸ் கட்சி தள்ளாடுவது ஒருபுறம் என்றால், பெற்ற வெற்றியை தக்கவைக்க முடியாமல் திணறுவது என்பது நூறாண்டுகள் கடந்த காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்று சோதனை என்றுதான் சொல்ல வேண்டும்.  

அன்று கர்நாடகத்தில் கூட்டணியால் ஏற்பட்ட சோதனை இன்று விஸ்வரூபம் எடுத்து மத்திய பிரதேசத்தில் கட்சியின் முன்னணி தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். தனக்கு ஆதவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை பெங்களூருக்கு கொண்டு சென்று மாநில அரசுக்கு தற்போது நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அதிரடி திருப்பமாக தற்போது பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அவர் பிஜேபியில் இணைவாரா அல்லது அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக சார்பாக முதல்வர் பதவியில் அமர்வாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும். இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இத்தகைய துரோகங்கள் புதிதல்ல. பிரணாப் முகர்ஜி ஏற்றி வைத்த இந்த அரசியல் நெருப்பு இன்று சிந்தியா வரை காங்கிரஸை எரித்தும், கரைத்தும் வருகின்றது. இதனை மிக சரியாக புரிந்துகொள்ள 40 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். 
 

h



1978ம் ஆண்டு மராட்டிய மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி இரண்டு பிரிவுகளாக போட்டியிட்டது. சரத்பவார் 'தேவராஜ் காங்கிரஸ் அர்ஸ்' என்ற பெயரில் தேர்தலி்ல் களம் இறங்கி 62 இடங்களை பிடித்தார். இந்திரா காங்கிரஸ் கட்சி 69 இடங்களை பிடித்தது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சி 99 இடங்களை பிடித்தது. சில மாதங்களுக்கு முன்பு அஜித்பவார் திடீரென பாஜக கூட்டணிக்கு சென்று துணை முதல்வர் பதிவியில் அமர்ந்தது போல, தேவராஜ் காங்கிரஸ் அர்ஸ் கட்சியில் இருந்து 40 எம்எல்ஏக்களை பிரித்து சென்று ஜனதா உடன் கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றார் சரத்பவார். அடுத்த சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரவே, சரத்பவாரின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார் இந்திரா. ஆனால் மராட்டியத்தில் பலமான இருந்த காங்கிரஸ் கட்சி அதனை பிறகு தேய ஆரம்பித்தது. மாறாக சிவசேனா மற்றும் பாஜக அதீத வளர்ச்சி கண்டது. இவ்வாறு காங்கிரஸின் கோஷ்டி பூசலுக்கு முதல் அச்சாரம் போட்டது சரத்பவர் என்றால் மிகையல்ல.

 

jh



இந்த சம்பவம் நடந்த சில வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பமானது 1984ம் ஆண்டு இந்திராவின் மறைவுக்கு பிறகுதான். இந்திரா மறைவுக்கு பிறகு பிரதமர் பதவி தனக்குதான் என்று நினைத்துக் கொண்டிருந்த பிரணாப் முகர்ஜிக்கு, திடீரென ராஜிவ் அரசியல் களத்துக்கு வந்தது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அவரை பிரதமர் பதவியில் அமராத வண்ணம் பல்வேறு அரசியல் உள்ளடி வேலைகளை தன்னுடைய அரசியல் சாணக்கியத்தால் செய்யத் தொடங்கினார் பிரணாப். ஆனால், அம்மாவின் (இந்திரா) அரசியலை அருகில் இருந்து பார்க்காவிட்டாலும், வியூகம் வகுப்பதில் அப்போதே வல்லவரான ராஜிவ், பிரணாப்பின் தந்திரங்களை முடியடித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்.

உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட பிரணாப்பை ஆறு ஆண்டுகள் கட்சியை விட்டு நீக்கம் செய்தார். பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அமைச்சர் பதவி, பிறகு குடியரசுத்தலைவர் பதவி ஏற்றது எல்லாம் வரலாறு. இவ்வாறு காங்கிரஸில் கோஷ்டி பூசல் என்பது எல்லாம் காலங்காலமாக காங்கிரஸில் இருந்து வரும் ஒன்றுதான் என்றாலும் தற்போது பதவிக்காக மாநிலத்தின் ஆட்சியை பலி கொடுக்கும் அளவுக்கு செல்கிறார்கள் என்பதுதான் ஜனநாயகத்துக்கு கொடுக்கப்படும் உச்சபட்ச தண்டனையாக உள்ளது!