முதன்முதலாக வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய ஆகஸ்ட் 28-ந்தேதி சென்னையிலிருந்து புறப்படுகிற மாதிரி அவரது பயணத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்களை தமிழகத்துக்கு அழைத்து வருவதற்காகவே எடப்பாடியின் இந்த பயணம் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான மத்திய அரசின் க்ளியரன்சைப் பெற கடந்த வாரம் டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்பினார் தமிழக அமைச்சர் தங்கமணி.
![eps](http://image.nakkheeran.in/cdn/farfuture/an-WEFhpVwD7qAzgPu-4SQrG0ADFn6hVD5WkMBMc6SE/1565683393/sites/default/files/inline-images/eps%20-%20am.jpg)
இந்தச் சூழலில், துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்து ராஜ்பவனில் தங்கியிருந்த அமீத்ஷாவை கடந்த 10-ந்தேதி இரவு சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த சந்திப்பில் தமிழகத்தில் நிலவும் அரசியலும் எடப்பாடியின் அமெரிக்க பயணமும் குறித்து சீரியஷாக விவதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அதிமுக மேலிட தொடர்பாளர்கள் மற்றும் உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’வேலூரில் ஏ.சி.சண்முகம் தோற்றுப் போனதை குறித்து பல்வேறு கோணங்களில் கேள்வி எழுப்பியிருக்கிறார் அமீத்ஷா. அப்போது, வேலூரில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், வாக்குப்பதிவின் போது, பார்லிமெண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவை நீக்கம் செய்தது தமிழகத்துலுள்ள நடுநிலை முஸ்லீம்களிடம் எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிட்டது என விளக்கமளித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த விளக்கத்தை அமீத்ஷா ஏற்கவில்லை.
இதனையடுத்து அதிமுக-பாஜக கூட்டணி, பாமகவின் செல்வாக்கு குறித்தெல்லாம் விசாரித்திருக்கிறார் அமீத்ஷா. இதற்கெல்லாம் விளக்கமளித்த எடப்பாடி, தனது வெளிநாடு பயணம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது, உங்கள் வசம் உள்ள பொறுப்புகள் அனைத்தையும் துணை முதல்வர் ஓபிஎஸ்சிடம் ஒப்படைத்து விடுங்கள் என அமீத்ஷா அட்வைஸ் செய்ய, அவரிடம் ஒப்படைக்க எனக்கு விருப்பமில்லை. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் கவனித்துக்கொள்வார்கள் என சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
அமீத்ஷா சொல்லியும் எடப்பாடி பிடிவாதம் காட்ட ஒரு காரணம் இருக்கிறது. அதாவது, ஓபிஎஸ் தலைமையில் சில நாட்கள் ஆட்சி அதிகாரம் இருக்கட்டும் என விரும்புகிறது பாஜக தலைமை. அதற்கு உள்ளூரிலேயே எடப்பாடியை வைத்துக்கொண்டு அவருடைய பொறுப்புகளை மாற்றியமைக்க முடியாது. அதனால், எடப்படியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தால் அவர் வகித்த பொறுப்புகள் துணைமுதல்வர் என்கிற முறையில் ஓபிஎஸ்சிடம் மாற்றி அமைக்கலாம் என யோசித்தே எடப்பாடியை வெளிநாட்டுக்கு அனுப்புகிறது டெல்லி. அதனால்தான் தன் வசமுள்ள பொறுப்புகளை தான் விரும்பியபடி மாற்றியமைக்க பிடிவாதம் காட்டுகிறார் ‘’ என சுட்டிக்காட்டுகிறார்கள்.
எடப்பாடியின் அமெரிக்க பயணம் குறித்து மேலும் விசாரித்தபோது, ‘’ உலக முதலீட்டாளர்களை தமிழகத்துக்கு வரவழைக்கவே இந்த வெளிநாட்டு பயணம் என சொல்லப்பட்டாலும், சில தனிப்பட்ட முதலீடுகள் குறித்த விவகாரமும் அதில் அடங்கியிருக்கிறது ‘’ என்கிறது தொழில்துறை வட்டாரம்!