ஆன்மிக தேடல், தனக்கான ஆன்மிக பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் முதலியவை எல்லாம் நெடுங்காலமாகவே தமிழ் மரபில் இருக்ககூடியது. சிலர் அவர்களின் வழிபாட்டு முறையை அவர்களுக்கு தகுந்த முறைகளில் அமைத்துக்கொள்கிறார்கள். தற்போது உணவு வாயிலாக கடவுளை வரையறுக்கும் நிகழ்வுகளையும் நாம் தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு வருகிறோம். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதுதான் நீங்கள் என்று சொல்கின்ற போக்குகள் இருக்கின்ற காலகட்டத்தில் உணவு வேறு ஆன்மீகம் வேறு என்று புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்தும் ஐயா சிவயோகி அவர்களை நாம் சந்திக்க இருக்கிறோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
சமீபத்தில் தமிழக மாணவர்களுக்கு உணவுடன் முட்டை வழங்கப்படுவது நிறுத்தப்படுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு தனியாரால் வழங்கப்படும் காலை உணவில் பூண்டு, வெங்காயம் பயன்படுத்தாமல் மாணவர்களுக்கு உணவு வழங்க இருப்பதாக சொல்கிறார்கள். பூண்டு, வெங்காயம் சாப்பிட்டால் மாணவர்களுக்கு கவனச் சிதறலும், இச்சை எண்ணங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் அவைகள் தவிர்க்கப்படுவதாகவும் அதற்கான காரணமாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பூண்டு, வெங்காயம் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், கறி, மீன் சாப்பிட்டால் கிடைப்பதை போல இதன் மூலம் உடலுக்கு தேவையான சக்திகள் கிடைக்கும். அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். அதனால் எதெல்லாம் சாப்பிட்டால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்களோ அதை எல்லாம் பிடுங்க நினைக்கிறார்கள். அதன் மூலம் தங்களுக்கு போட்டியாக யாரும் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். போட்டிக்கு வரக்கூடாது என்பதற்காக செய்யப்படும் சதியாகத்தான் இதை பார்க்க வேண்டும். நாம் இருவரும் மேடையில் சண்டை போட வேண்டும். அதில் ஒருவர் நல்ல ஆரோக்கியமான உணவையும், மற்றொருவர் சாதாரண உணவையும் உண்டால் யார் வெற்றிபெறுவார்கள். அதற்காகத்தான் இத்தகைய திட்டம் போடுகிறார்கள்.
அகோரிகள் உள்ளிட்டவர்கள் மனித மாமிசத்தை சாப்பிடும் போது அதனையே எதுவும் சொல்லாத சமூகம் பூண்டு, வெங்காயத்துக்கு எதற்காக பதறுகிறார்கள்?
அவர்கள் இவர்களுடன் போட்டிக்கு வர போவதில்லையே? அவர்கள் தேர்வு எழுதி இவர்களை விட மார்க் அதிகம் பெற வாய்ப்பில்லையே? அவர்களுக்கு சமூகத்தில் எந்த மதிப்பும் யாரும் கொடுக்க போவதில்லை. எனவே இவர்களுடன் அவர்கள் போட்டி போடபோவதில்லை. ஆனால் நம் மாணவர்கள் அவர்களுடன் போட்டியிடுவார்கள், வெற்றி அடைவார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருக்கின்றது. அதன் காரணமாக அவர்கள் நம் குழந்தைகளை எப்படி முடக்கலாம் என்று யோசிக்கின்றார்கள்.
தற்போது குறிப்பாக சிலர், மாட்டுக்கறி என்பது தமிழர் உணவே இல்லை என்றும், மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் தமிழர்களே அல்ல என்றும் தற்போது பேச துவங்கியுள்ளார். இதை பற்றிய உங்களின் கருத்து என்ன?
மிகப்பெரிய அசிங்கம் இது, தவறான தகவல்களை குறிப்பிட்ட சிலர் பரப்புகிறார்கள். நண்டு சாப்பிட்டு இருக்கிறார்கள். ஒளவையார் கள் குடித்துள்ளதாக புறநானூற்றுப் பாடலில் கூறியிருக்கிறார்கள். யானை கறியை விரும்பி சாப்பிட்டு இருக்கிறார்கள். மாட்டுக்கறி பற்றி மயானத்தில் பாடப்படும் பாடலில் கூட சொல்லப்பட்டிருக்கும். மாட்டுக்கறி சாப்பிட்டால் தமிழன் இல்லை என்பதெல்லாம் மிகப்பெரிய அசிங்கம். உணவுக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது. சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் சொல்கிறோம். அவர்கள் வேட்டையாடித்தான் பிழைத்தார்கள். அப்படி என்றால் அவர்கள் மாட்டை சாப்பிடாமல் எப்படி இருந்திருப்பார்கள்.