கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் தமிழக அரசின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசி, தமிழகம் இதுவரை கண்டிராத சிறப்பான ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்ல ஆட்சியைக் கெடுக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதாகவும் அது ஒருபோதும் நடக்காது என்றும், அவர்கள் எண்ணம் கனவாகவே போகும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்க் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக திமுக மூத்த தலைவர் புகழேந்தியிடம் கேள்வி எழுப்பியிருந்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,
அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில் ஒரு அரசு எப்படிச் செயல்பட வேண்டும்; முதல்வர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு திமுக அரசே மிகச் சிறந்த உதாரணம் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் எதிர்க் கருத்து தெரிவித்திருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு ஆட்சி எப்படிச் செயல்படக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த பதினெட்டு மாத திமுக ஆட்சி என்று கூறியுள்ளார். இதை எப்படிப் புரிந்துகொள்வது, இதற்கு உங்களின் பதில் என்ன?
இன்றைக்குத் தமிழக முதல்வரின் ஆட்சி இந்தியாவில் எங்குமே நடைபெறாத வண்ணம் மிகச் சிறப்பான ஒரு ஆட்சியைத் தமிழகத்தில் அவர் கொடுத்து வருகிறார். இதை இந்தியாவில் உள்ள அனைவரும் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கேட்டால் கூட ஏற்றுக்கொள்வார்கள். எடப்பாடிக்கு ஒரு கவுன்சிலராக இருக்கக்கூடத் தகுதியில்லாதவர். இன்னும் அவர் பஞ்சாயத்துத் தலைவராகக் கூட அவருக்கு எந்த தகுதியும் வந்ததாக நான் நினைக்கவில்லை. யாரோ ஒருவருடைய காலில் விழுந்து பதவியைப் பெற்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்குத் தமிழகத்திலே பெரிய அரசியல் தலைவரைப் போல் பேசி வருகிறார்.
ஆட்சியின் மீது தேவையில்லாத உண்மைக்கு மாறான தகவல்களை அவர் தொடர்ந்து கூறி வருகிறார். ஆட்சி எப்படி நடத்துவது என்று இவர் திமுகவுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். கையை காலை பிடித்து இவர் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்ததை போல் இதுவரை தமிழகம் வேறு யாரையும் கண்டதில்லை. அவங்க தலைவி வழியில் எடப்பாடியும் சிறப்பாகக் கொள்ளையடித்து வந்தார். அவர் ஏற்கனவே சொன்னதுதானே, எங்கள் தலைவி வழியில் ஆட்சி நடத்துவோம் என்று பதவியேற்றதும் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதனால் அவர் ஆட்சியில் இருக்கும்போது அதை நிறைவேற்றி வருகிறார்.
ஒரு முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டிக்கப்பட்டவர் இந்தியாவிலேயே இவருடைய தலைவி ஜெயலலிதா தான். அவர் வழியில் ஆட்சி நடத்தியதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி எங்கள் ஆட்சியைப் பற்றி குற்றம் சுமத்த என்ன இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சியைக் கடந்த நான்கு வருடமாகத் தொடர்ந்து கொடுத்து வந்த அவர், திமுகவைப் பற்றிப் பேசுவதற்கு உரியத் தார்மீக தகுதியையே இழந்துவிட்டார். எங்கள் தலைவர் இவரைப் போல் குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வர் ஆனவர் இல்லை. மக்களைச் சந்தித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று அதன் மூலம் ஆட்சியைப் பிடித்தவர். எனவே எடப்பாடி இதை எல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு நினைத்துப் பார்த்தால் எங்களைப் பற்றிப் பேசவே கூச்சப்படுவார்" என்றார்.