Skip to main content

இந்தி தெரியாது போடா என்பதை கூட ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியம் இருக்கிறதே? - சுப.வீ பதில்

Published on 11/09/2020 | Edited on 11/09/2020
ரர

 

 

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு ஹேஷ்டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட் வடிவில் பிரபலங்கள் அணிந்து வந்து அந்த வாக்கியத்துக்கு மேலும் வலு சேர்த்தனர். 

 

சினிமா பிரபலங்கள் ஆரம்பித்து பாமரன் வரையில் டீ சர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் இது சரியான முறைதானா, இந்த எதிர்ப்பு மத்திய அரசின் காதுகளில் விழுமா போன்ற பல்வேறு கேள்விகளை நாம் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களிடம் முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு 'இந்தி தெரியாது போடா' என்று ட்விட்டரில் இளைஞர் ட்ரெண்ட் செய்தனர். பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கு பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் எதிர்வினை ஆற்றியிருந்தார். டீ சர்ட் போட்டா தமிழுணர்வை வெளிப்பாடுத்துவார் என்று கேட்டிருந்தார்கள். இதை பற்றிய தங்களின் கருத்து என்ன? 

இதெல்லாம் ரொம்ப பழைய கருத்து. யாரும் தற்போது வேட்டி கட்டுவதில்லை. நான் பேண்ட் அணிந்துள்ளேன். சேர, சோழ மன்னர்கள் எல்லாம் வேட்டி கட்டியதாக தெரியவில்லை. உடை என்பது நாகரீகம் சார்ந்தது, மொழி என்பது பண்பாடு சார்ந்தது. இரண்டிற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. நாகரீகம் மாறிக்கொண்டே இருக்கும். பண்பாடு மாறவே மாறாது என்று நான் சொல்லவில்லை. பண்பாடு மிக நிலையாக காலுன்றி நிற்கும். பண்பாட்டில் வருகின்ற மாற்றம் மெதுவானதாக இருக்கும். நாகரீகம் மிக விரைவாக மாற்றமடையும். உடை என்பது இந்த பருவ நிலைக்கும் நாம் செய்கின்ற வேலைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். நாற்று நடுபவர்கள் என்னை போல் உடை அணிந்து கொள்ள முடியாது. நான் வயலில் வேலை செய்பவர்களை போல் உடை அணிந்து கொள்ள முடியாது. உடை என்பது அவரவர் வேலை சார்ந்தது, உடல்வாகு சார்ந்தது. அப்படி என்றால் வேட்டி கட்டியவர்கள் சொன்னார்கள் என்றால் இவர்கள் எல்லாம் ஒத்துக்கொள்வார்களா? இளைஞர்களிடம் இயல்பாக உடை மாறியிருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். 

 

இந்த உடையை வைத்து வியாபாரம் நடத்தப்படலாம் என்பது கூட இதில் இருக்கின்றதே? 

எங்களை போன்றவர்கள் இதை தொடங்கினால் கூட அப்படி சொல்லாம். இதை அவர்கள் தானே தொடங்குகிறார்கள். எந்த தலைமுறையில் இருந்து அது புறப்படுகிறது என்றுதான் நாம் பார்க்க வேண்டும். இது செல்வாக்கான விற்பனை ஆகும் பொருள் என்றால் அதை தேர்தல் நேரத்தில் எல்லோரும் கையில் எடுத்திருப்பார்களே? நேற்றைக்கு இந்த சட்டையை போட்டுக் கொண்டவர்கள் இன்று காலையில் கோடீஸ்வரனாக மாறிவிட்டார்களா என்ன? எனவே இது வெற்றுக் குற்றச்சாட்டு என்பதே என்னுடைய பதில். 

 

இந்தி தெரியாது போடா என்பதை கூட ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியம் இருக்கிறதே? 

அதில் அவர்கள் ஐம் ஏ தமிழ் பேசும் இந்தியன் என்று எழுதி இருக்கிறார்கள். இதில் இருந்து அவர்கள் நாங்கள் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவானர்கள் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். இதை எல்லாம் அவர்கள் கருதி செய்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. நம்முடைய வீட்டுமொழி தமிழ்தான். உலகளாவிய தொடர்புக்கு ஆங்கிலம் தேவைப்படுகின்றது. எனவே எனக்கு ஆங்கிலமே தேவையில்லை, தமிழ் மட்டும் போதும் என்ற நிலைக்கு நாம் வந்துவிடவில்லை. தமிழ் வேண்டும். உலகத்துக்கே ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் போது இந்தியாவுக்கும் அது போதும் என்பதே எங்களுடைய கருத்தாக இருக்கிறது.