’பிகில்’படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், ‘’எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். காரில் செல்லும் போது கலைஞரைப் பற்றி தவறாக கூறியவரை இறக்கி விட்டவர் எம்ஜிஆர். அதேபோல எதிராளியை மதிக்க வேண்டும்’’என்று கூறினார்.
எம்.ஜி.ஆரால் காரில் இருந்து இறக்கிவிடப்பட்ட அந்த நபர் யார்? மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஒரு விழாவில் பேசியபோது, எம்.ஜி.ஆருக்கு பிறகு அரசியல் நாகரிகம் முற்றிலும் மறைந்துபோய்விட்டது என்று குறிப்பிட்டார். ஒருமுறை ஜேப்பியார் எம்.ஜி.ஆருடன் காரில் போய்க்கொண்டிருந்தபோது, ‘கருணாநிதி’ என சொல்லியதால் கோபப்பட்டு அந்த இடத்திலேயே அவரை இறக்கி விட்டு போனார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு நண்பர் மேல் மதிப்பு வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர்.’’என்று குறிப்பிட்டார்.
அரசியலில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தாலும், கலைஞர் மீது நல்ல நட்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். பலரும் சொல்லுவதைப்பார்த்தால் நட்புக்கும், நண்பர்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரக்கூடியவராகவே இருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். நண்பர்களுடன் சண்டை இருந்தாலும், அதற்காக மற்றவர்களிடத்தில் நண்பர்களை விட்டுக்கொடுக்க மாட்டார் என்கிறார்கள்.
பெரும்பாலும் ‘கலைஞர்’ என்றே சொல்லும் எம்.ஜி.ஆர்., சில சமயங்களில் ‘கலைஞர் கருணாநிதி’என்று சொல்வதுண்டு. கோபமான நேரங்களில் மட்டுமே ’கருணாநிதி’ என்று சொல்வதுண்டு.
எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கு மோதல் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் அது. எம்.ஜி.ஆருடன் காரில் போய்க்கொண்டிருந்தார் ஜேப்பியார். அப்போது, ’கலைஞர்’என்று சொல்லாமல், ‘கருணாநிதி’ என்று சொன்னால் எம்.ஜி.ஆர். சந்தோசப்படுவார். நம்மீது நல்ல அபிப்ராயம் ஏற்படும் என்று நினைத்து, ‘கருணாநிதி’ என்று பேசியுள்ளார் ஜேப்பியார். உடனே டென்ஷன் ஆன எம்.ஜி.ஆர்., ‘’எனக்கும் கருணாநிதிக்கும் ஆயிரம் இருக்கும். என் நண்பனை நான் கருணாநிதின்னு சொல்றேன். அதுக்காக நீயும் அப்படி சொல்லுவியா?என்ன தைரியம் இருந்தா என் முன்னாடியே என் நண்பனைப்பற்றி தப்பா பேசுவ? அதுவும் பெயரைச்சொல்லி பேசுவ?’’ என்று கோபப்பட்டதோடு அல்லாமல், ‘’முதல்ல நீ காரை விட்டு இறங்கு’’என்று நடுவழியிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
அப்படித்தான் சட்டசபையில் ஒருமுறை, அப்போது ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், துணை அமைச்சராகவும் இருந்த ஐசரிவேலன் பேசியபோது, கலைஞரை, ’கருணாநிதி’ எனச் சொன்ன போது, கோபம் கொண்ட எம்.ஜி.ஆர்., ஐசரிவேலன் பேச்சை உடனே நிறுத்துமாறு கூறியுள்ளார். கருணாநிதி என்று சொன்னதற்காக அங்கேயே அப்போதே மன்னிப்பு கேட்கும்படியும் செய்துள்ளார் எம்.ஜி.ஆர்.
அஜீத் -விஜய் ரசிகர்களின் மோதல் வலுத்துவரும் நிலையில், எம்.ஜி.ஆர்., கலைஞரை உதாரணம் காட்டி, ’’எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும்’’ என்று விஜய் பேசியிருப்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.