கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட்டில் ப்ரிண்ட் செய்து பிரபலங்கள் அணிந்து வந்தது அந்த வாக்கியத்துக்கு மேலும் வலு சேர்த்தது.
லட்சக்கணக்கான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரை அதிர வைத்தன. சினிமா பிரபலங்கள் ஆரம்பித்து பாமரன் வரையில் டீ சர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், பாஜகவை சேர்ந்த பல்வேறு நபர்கள் இதற்கு திமுக தான் காரணம் என்றும், அவர்கள் தூண்டுதல் இதில் இருக்கிறது போன்ற கருத்துகளை தெரிவித்தனர். இதில் உண்மை இருக்கிறதா, இல்லை இது வழக்கம் போல் எதிர்தரப்பு மீது செய்யப்படும் அரசியலா என்ற பல்வேறு கேள்விகளை திராவிட இயக்க ஆதரவாளர் டான் அசோக் அவர்களிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘இந்தி தெரியாது போடா’ என்று ட்விட்டரில் இளைஞர் ட்ரெண்ட் செய்தனர். பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
உங்கள் வீட்டிற்கு உங்களுக்கு படிக்காதவர்கள் வந்துவிட்டால் முதலில் முகவரி மாறிவந்துவிட்டீர்கள் என்று கூறுவோம், பிறகு நீங்கள் போகலாம் எனக் கூறுவோம், அதன் பிறகு சத்தத்தை கூட்டி அவர்களை வெளியேற்றுவீர்கள். எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அவர்கள் கேட்கவில்லை என்றால் நாம் இந்த மாதிரியான திருப்பி அடிக்கும் வேளைகளை செய்தாக வேண்டிய நெருக்கடி ஏற்படுகின்றது. இதை எந்த மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் செய்ய முற்படுகிறார்கள். காங்கிரஸ் இருந்த போதும் அதனை செய்ய முன்றார்கள். தற்போது பாஜக அதனை தீவிரமாக செயல்படுத்த விரும்புகிறது. அது தமிழகத்தில் செல்லுபடியாகாது என்பது இனி வரும் காலங்களில் அவர்களுக்கு நன்கு புரிய வரும்.
பல மொழிகளை தெரிந்து கொள்ளுதல் என்பது நல்ல விஷயம் தானே, அதில் என்ன தவறு இருக்கிறது என்று அவர்கள் எதிர் கேள்வி கேட்பதை பற்றி?
மொழிகளை கற்றுக்கொள்ளுதல் என்பது எந்த விதத்திலும் தவறு என்று யாரும் சொல்ல போவதில்லை. எனக்கு சின்ன வயதில் இருந்து ஃபிரெஞ்ச் மொழி படிக்க வேண்டும் என்று ஆசை. அதற்காக என் கூட சேர்ந்து 6 கோடி பேரும் அந்த மொழியை படியுங்கள் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தமாக இருக்கும். உனக்கு இந்தி படிக்க வேண்டும் என்று தோன்றினால் இந்தி படி, காந்தி பல இடங்களில் இந்தி பிரச்சார சபாவை தொடங்கி வைத்துள்ளார். அதில் சேர்ந்து படித்துக்கொள்ளுங்கள், யார் உங்களை படிக்க வேண்டாம் என்று தடுத்தது. ஆனால் எங்களை ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள் என்பதுதான் எங்களுடைய கேள்வி. இல்லை வங்கிகளில் தினம் ஒரு இந்தி வார்த்தை எழுதி போடுகிறார்கள். அங்கு போய் படியுங்கள். நீங்கள் ஒருவர் இந்தி படிக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாநிலமே இந்தி படிக்க வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
‘இந்தி தெரியாது போடா’ என்று ட்ரெண்ட் ஆன அடுத்த நாள் ‘திமுக வேணாம் போடா’ என்று பலரால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஆமாம், அப்படிதான் ஆகும். பொதுமக்கள் எல்லாம் கோ பேக் மோடி என்று சொன்னாலும் அவர்கள் திமுகவைத்தான் திட்டுவார்கள். நேற்று நடந்த இந்தி எதிர்ப்பில் திமுக மட்டும் தான் கலந்து கொண்டதா, யுவன் ஷங்கர் ராஜா திமுகவா, வெற்றி மாறனுக்கு ஏன் அவ்வாறு தோன்றியது, இது ஒரு எதிர்ப்புணர்வு, ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பு. எனவே ஒரு கட்சியாக இதனை பார்க்க தேவையில்லை. இந்தி திணிப்பு எதிர்ப்பு, சனாதான எதிர்ப்பு முதலியவற்றை செய்தாலே அதனை திமுகதான் செய்யும் என்ற எண்ணம் இவர்களுக்கு அதிகம் இருக்கிறது. அந்த பயம் தான் இவர்களை இவ்வாறு பேச வைக்கிறது.
நான் இந்தி தெரியாததால் கஷ்டப்பட்டுள்ளேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னார் தெரிவித்துள்ளாரே?
அவருக்கு இந்தி தெரிந்தால் மட்டும் என்ன, சங்கராச்சாரியார் அவருக்கு நாற்காலியா கொடுத்து அமரச்சொல்ல போகிறார், அப்போது இதே நிலை தான் இருந்திருக்கும். அவர் இந்தி படித்திருந்தாலும் கஷ்டம்தான் பட்டிருப்பார். அப்போதும் அவர் தரையில் தான் அமர்ந்திருப்பார்.