Skip to main content

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு..? -ரஜினி அரசியல் குறித்து மருத்துவர் ஷாலினி!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020
v

 

விரைவில் அரசியலுக்கு வருவேன் என்ற நடிகர் ரஜினியின் அறிவிப்பு என்பது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. அவரின் வருகையை ஆதரித்து சிலரும், அதனை எதிர்த்து பலரும் தங்களின் கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். "நான் என் உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை செய்ய நிச்சயம் அரசியல் கட்சி துவங்குவேன், அதில் என் உயிரே போனாலும் கூட பரவாயில்லை" என்று சில தின தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக நம்முடைய கேள்விகளை மருத்துவர் ஷாலினியிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் அரசியல் வருகை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய கட்சியை வரும் ஜனவரி மாதம் துவங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சிக்கு பொறுப்பாளர்களையும் தற்போது நியமித்துள்ளார். அதையும் தாண்டி இப்போது இல்லை என்றால் எப்போதும் அரசியல் மாற்றம் நிகழாது, அதனை நிகழ்த்திக்காட்ட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். தன்னை மருத்துவர்கள் இந்த கரோனா காலகட்டத்தில் வெளியே செல்லக்கூடாது என்று கூறியிருந்தாலும் பரவாயில்லை, தமிழக மக்களுக்காக என்னுடைய உயிரையும் இழக்க துணிந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

 

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களையும் போல அவருக்கும் அரசியல் செய்வதற்கும், கட்சி ஆரம்பிக்கவும் எல்லா உரிமையும் இருக்கிறது. அந்த தார்மீக அடிப்படை உரிமைகளை நாம் கேள்வி கேட்கவில்லை. ஆனால் ஒருவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றால் ஒரு குறிபிட்ட தோராயமாக நாற்பது அல்லது ஐம்பது வயதில் கட்சி ஆரம்பித்தால் மீதி இருக்கின்ற முப்பது ஆண்டுகளில் நாம் நினைப்பதை மக்கள் முன் வைக்கலாம், செய்ய முயற்சிக்கலாம். ஆனால் அவர் நேரடியாக அரசியல் களத்திற்குள் இறங்குவேன் என்கிறார். அவரே உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருகிறார். இந்த கரோனா காலகட்டத்தில் அவர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இருந்தும் அவர் மாஸ்க் கூட மூக்குக்கு கீழே அணிந்து கொண்டு பேசுகிறார். அவரே பாதுகாப்பாக இருந்துதான் தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் அவர் நம்மை காப்பாற்ற வருகிறேன் என்கிறார். இருக்கிற கொஞ்ச காலத்தில் அவர் நமக்கு சேவை செய்ய போகிறார் என்ற நம்பிக்கையை எல்லாம் எனக்கு கிடையாது. 

 

ரஜினி கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று நான் குழந்தையாக இருப்பது முதல் கூறிவருகிறார். நான் எப்படி வருவேன், எங்கே வருவேன் என்று தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவேன் என்று தொடர்ந்து கூறி வருகிறார். அதை நாம் பல வருடமாக தொடர்ந்து கேட்டு வருகிறோம். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் உள்ளிட்ட பல டயலாக்குகளை எல்லாம் தொடர்ந்து நாம் கேட்டு வருகிறோம். அவர் மனசுக்குள் இன்னும் நிறைய தயக்கங்கள் இருக்கிறது. மற்ற தலைவர்கள் முதுமையில் அரசியல் செய்யவில்லையா என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவர்கள் எல்லோருக்கும் கடைசி கட்ட ஆட்சியில் உடல்நிலை சரியில்லாமல் போனது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கூட சிலருக்கு செய்யப்பட்டது. எம்ஜிஆர் அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு எத்தனை ஆண்டுகள் இருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியுமே? இவர்கள் யாரும் பதவிக்கு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அரசியலுக்கு வரவில்லையே? 30 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டார்களே? பல முறை ஆட்சி செய்த பிறகு தானே அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

 

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல உடம்பில் பாதிப்பு வந்து இந்த கரோனா காலக்கட்டத்தில் வெளியே வரக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் இவர் ஏன் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுகிறார். அப்படி வருவதாக இருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்பே அவர் வந்திருக்கலாமே? அப்படி வந்திருந்தால் எங்களுக்கு நிறைய செய்திருக்கலாமே? அப்போது ஏன் வரவில்லை. இப்போது வர வேண்டிய அவசியம் என்ன வந்தது. அவருக்கு கட்சி ஆரம்பிக்க வேண்டும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை. இந்த இரண்டு வருடங்களில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நன்றாக தெரியும். அடிக்கடி மாற்றி மாற்றி பேசி வருகிறார். அவருக்கே ஒரு கிளியர் மைண்ட் செட் இல்லை. தொடர்ச்சியாக கருத்துகளை மாற்றி பேசுகிறார். இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வந்து என்ன செய்துவிட முடியும்" என்றார்.