இன்றைய அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய எண்ணங்களை நம்மோடு அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பகிர்ந்துகொள்கிறார்.
திராவிட இயக்கங்கள் திராவிட சித்தாந்தத்தை உள்வாங்கியவை. பாஜக என்பது சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கட்சி. எனவே திராவிட கட்சிகளோடு கூட்டணி வைக்கக்கூடாது என்று அண்ணாமலை எடுத்திருக்கும் முடிவு சரியானதுதான். திராவிட இயக்கங்களுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமே இல்லை. இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் அரசியல் சரிவராது. சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று அண்ணாமலை நினைப்பது சரி. கட்சி வளர வேண்டும் என்றால் தனித்து இயங்க வேண்டும்.
ஆனால் தேசியக் கட்சிகளுக்கு மாநிலத் தலைவர்கள் அட்வைஸ் செய்ய முடியாது. அண்ணாமலையின் அரசியல் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது. ஈரோடு கிழக்கு தேர்தலில் கூட்டணிக் கட்சியான அதிமுகவே அண்ணாமலையை ஒதுக்கியது. தன்னை வெளியே அனுப்பப் போகிறார்கள் என்று தெரிந்துதான் தானே ராஜினாமா செய்வதாகக் கூறி நடிக்கிறார் அண்ணாமலை. அண்ணாமலைக்கு நிகராக எதை வேண்டுமானாலும் பேசக்கூடிய ஒரு நபர் சீமான் தான். எனவே அவரை பாஜக தலைவராக்கவும் வாய்ப்புண்டு என்று நான் நினைக்கிறேன்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவாகப் பேசினால் எடுபடாது என்பதால் அவர்களுக்கு எதிராக இருப்பது போல் சீமான் நடிக்கிறார். அண்ணாமலை இதுவரை பாஜகவுக்கு எழுச்சி தரும் வகையில் எதையும் செய்யவில்லை. தனக்குப் பணம் வேண்டும் என்பதைத்தான் கடன்காரனாக இருக்கிறேன் என்று கூறுவதன் மூலம் மறைமுகமாக உணர்த்துகிறார் அண்ணாமலை. வசூல் செய்ய நினைக்கிறார். அண்ணாமலை குறித்து காயத்ரி ரகுராம் சொல்லும் புகார்களில் உண்மை இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் அவர் அந்தக் கட்சியில் இருந்து நேரில் பார்த்தவர்.
கொள்கையை விட்டுவிட்டுத் தான் திராவிட கட்சியோடு பயணிக்கிறது பாஜக. என்னால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்று சொல்கிறார் சீமான். ஆனால் அவர் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவில்லை. பொய்களை மட்டுமே பேசி வாழ்பவர் சீமான். அதை வைத்துத் தனக்கு ஒரு வளமான வாழ்வை உருவாக்கிக் கொண்டார். தேர்தலில் அவர் நிற்பதற்குக் காரணமே வருமானம் தான். அண்ணாமலை தற்போது ஒரு எதிர்மறையான நபராக மாறிவிட்டார். அவரைப் போல் தான் சீமானும்.
பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு அடுத்த மாநிலத் தலைவராவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அண்ணாமலை எங்கு சென்றாலும் நன்றாக இருக்கட்டும் என்பதுதான் நம்முடைய வாழ்த்து.