எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லி பாஜக தலைமையை எதிர்க்கத் துணிந்துவிட்டார். அதனால் தான் குஜராத் முதல்வர் பதவியேற்புக்குக் கூட அவர் செல்லவில்லை. ஆனால் பன்னீர்செல்வம் தான் இன்றைக்கும் பயந்துகொண்டு பாஜக சொல்வதைக் கேட்டுக்கொண்டுள்ளார் போன்ற கருத்துக்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இது தொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் காந்தராஜிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
"இரண்டு குழந்தைகள் அழும்போது பார்த்துள்ளீர்களா? அதே போன்ற மனநிலையில்தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எனக்கு ஒரு சாக்லெட் கொடுக்கவில்லை என்றால் நான் உங்கள் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன். உங்களைப் பார்க்கமாட்டேன். என்னை மதித்துப் பேசுங்கள் என்பதுதான் எடப்பாடியின் நிலை. இதை இப்படி அவர் வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் எடப்பாடியின் பேச்சை பாஜக சட்டை செய்யமாட்டேன் என்கிறது. நீ என்ன வேணாலும் கத்திக்கிட்டே போ, அதைக் கேட்க நாங்கள் ஆளில்லை என்பதுபோல் பாஜகவின் செயல்பாடு உள்ளது. முருகனுக்கும் விநாயகருக்கும் நடந்த பிரச்சனைதான் இதுவும். எடப்பாடி மாம்பழத்துக்காக நான் உலகத்தைச் சுத்தி வருகிறேன்; அதன் பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்று கூறி, பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றார். ஆனால் பன்னீர்செல்வம் அய்யனே நீங்கள் துணை என்று மோடியையும் அமித்ஷாவையும் தாங்கினார். நீங்களே வச்சிக்கீங்க என்று பழத்தைப் பன்னீர்செல்வம் வாங்கிக்கொண்டுள்ளார்.
பணிந்து போனால் மதிப்பு, எதிர்க்க நினைத்தால் அவமானம் என்பதுதான் பாஜக சொல்லாமல் சொல்ல வருவது. இதை எடப்பாடி நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது புரிந்துகொள்வார் என்று நினைக்கிறேன். அதிமுகவை வட்டாரக் கட்சியாக எடப்பாடி மாற்றிவிட்டாரா என்று கேட்கிறீர்கள். அதிமுகவை வட்டாரக் கட்சி என்று கூடச் சொல்லும் நிலையில் அது இல்லை. ஜாதி கட்சியாக அதனை எடப்பாடி மாற்றி வைத்துள்ளார். இவரிடம் இருப்பவர்களை எல்லாம் பாருங்கள் செங்கோட்டையன், தம்பிதுரை, பொன்னையன் எனக் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். குட்கா விஜய பாஸ்கரைத் தவிர வேறு சமூகத்தைச் சேர்ந்த யாரும் அவரை ஆதரிக்கவில்லை.
தமிழகம் முழுவதும் நாங்கள் இருக்கிறோம் என்று இவர் கூறுவதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சென்னையில் இவர்களுக்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர் உள்ளார்கள். இல்லை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை எனத் தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் அவர்களுக்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இதற்கு எடப்பாடி பதில் சொல்ல முடியுமா? தமிழகம் முழுவதும் ஆதரவு என்றால் இங்கெல்லாம் என்ன ஆதரவு கொடுத்தார்கள் என்று சொல்லலாம் அல்லவா? எதையாவது பேச வேண்டும் என்று பேசக்கூடாது" என்றார்.