Skip to main content

என்னை ஏன் இப்படி செய்தார்கள்? - 13 வயதுக் குழந்தையின் கேள்வியால் பிறந்த மீ டூ #metoo இயக்கம்

Published on 15/10/2018 | Edited on 15/10/2018

'நம் சமூகத்தில் பாலியல் விழிப்புணர்வும் அதுதொடர்பான சரியான கல்வி முறையும் இல்லை, அதனால்தான் பெண்களுக்கு எதிரான பல வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகமாக நடக்கின்றன' என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. 'வெறும் கல்வி மட்டும்போதாது பெற்றோர்களும் சரியான முறையில் தங்களின் பிள்ளைகளுக்கு பாலியல் தொடர்பான புரிதலை ஏற்படுத்த வேண்டும்' என்பது இன்னும் சிலரின் கருத்தாக இருக்கிறது. இது இரண்டுமே மறுக்கமுடியாதது என்றாலும், இன்றைய சூழலில் சமூகம்தான் குழந்தைகளை வளர்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. நம்மை சுற்றி சமூகத்தில் ஒரு தவறு நிகழ்கிறது என்றால் அதைத் தடுப்பதற்கான வழி, முயற்சி, தண்டனை என்பது அந்தத் தவறுகளை முதலில் வெளியே சொல்வதுதான். ஒரு குற்றத்தை வெளியே சொல்லும்போதே அதற்கான பாதி நீதி கிடைத்துவிடுகிறது. ஒரு காலம் வரையில் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவதை வெளியே சொல்ல வேண்டும் என்றால் காவல் நிலையம், நீதிமன்றம் என்று செல்லவேண்டும். அதனால் மானம் மரியாதையை எல்லாம் போய்விடும் என்றே சில தலைமுறைகள் நமக்கு முன் மடிந்துவிட்டது. ஆனால், இன்றைய நவீன உலகில் சமூக வலைதளம் மூலமாக எந்தத் தவறையும் எளிதாக ஆவணம் படுத்தமுடிகிறது. அப்படி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஆவணம் செய்ய எளிதாக இருக்கும் வழிதான் மீ டு (#me too) எனும் ஹாஷ் டேக். இந்த ஹாஷ் டேக் எப்படி வந்தது, இதை யார் முதலில் ஆரம்பித்தது, உலகளவில் இருந்து இந்தியா தமிழகம் என்று இது எப்படி பயணப்பட்டது என்பதை பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். 

 

mm

 

2006-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க வம்சாவழியான அமெரிக்கப் பெண்ணான 'தரானா புக்' எனும் சமூக செயற்பாட்டாளர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை வைத்து ஒரு ஆவணம் செய்வதற்காக முதன்முதலில் இந்த மீ டு எனும் ஹாஷ் டேக்-ஐ உபயோகம் செய்துள்ளார். ஏன் இந்த சொற்தொடரை உபயோகம் செய்ய வேண்டியதாய் இருந்தது என்பதையும் விளக்கியிருக்கிறார். ஒரு பதிமூன்று வயது குழந்தை ’நான் வன்கொடுமைக்கு ஆளானேன் இதற்கெல்லாம் காரணம் என்ன, ஏன் இப்படி நடக்கிறது’ என்று 'தரானா புக்’கிடம் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளிக்க முடியாமல் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு பிறகு அந்தக் குழந்தைக்கு ’மீ டு’  (எனக்கும் இப்படித்தான்) என்று பதில் அளித்துள்ளார். அதனால் அந்த சொற்தொடர்தான் இதற்கு சரியானது என்று முடிவு செய்துள்ளார். அதன் பின் நியூயார்க் நகரத்தில் மீ டு இயக்கத்தை அவர் துவங்கினார். அதன் பின் இந்த ஹாஷ் டேக் சமூக வலைதளங்களில் 10 அக்டோபர் 2017-ல் இருந்து வைரலானது. முதலில் ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்னஸ்டேய்ன் என்பவர் மீது 80-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் செய்துள்ளனர். அதன் பின் இந்தியாவில் ராயா சர்கார் எனும் சட்டக்கல்லூரி மாணவி கடந்த ஆண்டு அவரின் கல்வி நிறுவனத்தில் பெண்களுக்கு எதிராக நேர்ந்த வன்கொடுமைகளை வெளிக்கொண்டுவந்தார். ஆனால் தற்போது பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, இயக்குனரும் நடிகருமான நானா படேகர் மீது தெரிவித்த பாலியல் வன்கொடுமைக்குப்பின் மீ டு ஹாஷ் டேக் இந்தியா முழுக்க பிரபலமாகியிருக்கிறது. 

 

தமிழகத்தில் பாடகி சின்மயி முதலில் யூட்யூப் விமர்சகர் பிரஷாந்த் மெசேஜ் மூலமாக தொந்தரவு செய்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து பாடலாசிரியர் வைரமுத்து ஸ்விஸர்லாந்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியின்போது பாலியல் தொந்தரவு தந்ததாக புகார் செய்தார். அதன்பின் மீ டு ஹாஷ் டேக் தமிழகத்தில் பிரபலமானது. இது வெறும் சினிமாத்துறை மட்டுமின்றி விளையாட்டுத்துறை பத்திரிகைத்துறை என்று இந்த ஹாஷ் டேக்-ன் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. உதாரணத்திற்கு முன்னாள் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா 2009-ல் தனக்கு நேர்ந்த வன்கொடுமை பற்றி பகிர்ந்து இருக்கிறார். பத்திரிகைத்துறையில் பணிபுரிந்து தற்போது ப.ஜ.க.வின் எம்.பி. ஆக இருக்கும் எம்.ஜெ.அக்பர், அவர் பத்திரிகைத்துறையில் பணியாற்றியபோது வன்கொடுமை செய்ததாக தற்போது புகார் வந்துள்ளது. இதற்கு எதிர்மறையாக எப்போதோ நடந்த வன்கொடுமைகளைப் பற்றி இப்போது பேசுவதற்கு காரணம் என்னவென்று பா.ஜ.கவின் உதித்ராஜ் மற்றும் பலர் கேள்விகளை எழுப்பினர். ‘பாதிக்கப்பட்டபோது வெளியே சொல்வதற்கு ஏற்ற வகையில் ஏதும் இல்லை. ஆனால் இப்போது சமூகவலைதளம் எனும் ஒரு ஆயுதம் இருக்கிறது’ என்று பதில் அளித்துள்ளனர். இந்நிலையில் பெண்களுக்கு ஆதரவாக பிரபல நடிகையான ஐஸ்வர்யாராய் ’பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளை தைரியமாக வெளியே சொல்ல சமூகவலைதளம் பெரும் உதவிகரமாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்களில், இதற்கு ஆதரவாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி ’பெண்கள் தெரிவிக்கும் பாலியல் வன்கொடுமைகளை கவனத்தில்கொண்டு அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். 

 

mm

 

இத்தனை காலமாய் பெண்கள் தங்கள் மனதில் வைத்துப் புழுங்கிய நிலை மாறி வெளியே வந்து சுவாசிக்கின்றனர், பேசுகின்றனர். அதை முற்றிலுமாக கொச்சைப் படுத்தி நிராகரிக்காமல் உண்மையை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிய வாய்ப்பான இந்த 'மீ டூ'வை தவறாகப் பயன்படுத்தி இத்தனை காலமாக இடித்துத் திறக்கப்பட்ட இந்த இரும்புக் கதவை பெண்களே மூடிவிடக்கூடாது.