Skip to main content

விதியை மதியால் வெல்லத் தெரியாதா? இதைவிட நாட்டு மக்களுக்கு நலம் செய்கிற... - கலைஞர்

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

ஆயிரம் நிகழ்ச்சிகளை, தமிழ் முழுதறிந்த தன்மையாளராகத் திகழ்ந்த அந்தத் தனிப்பெரும் தலைவரின் புகழை, எந்த வகையிலும் எடுத்துச் சொல்லலாம். அவர் அறியாத தமிழ் இல்லை, அவர் தெரியாத சங்கப்பாடல் இல்லை, அவர் எழுதாத உரைவிளக்கம் இல்லை. ஒன்றுமட்டும் சொல்கிறேன். கோப்பு என்பதைப் பார்க்கிறபோதுகூட அவருடைய இலக்கியத்திறன் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதற்கு ஒரு சான்று நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஏதோ ஒரு கோப்பில் "விதி இதற்கு இடம்தரவில்லை'’என்று நான் எழுதி அனுப்பியிருந்தேன். 

 

kalaingar



மறுநாள்காலை முதல்வர் எழுதுகிறார், "விதியை மதியால் வெல்லத் தெரியாதா?'’இதைவிட நாட்டு மக்களுக்கு நலம் செய்கிற தொடர் இருக்க முடியுமா? இன்னுமொன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. திண்டுக்கல் அருகே குஜிலிபாளையம்’என்று ஒரு பகுதி இருக்கிறது. "குஜிலிபாளையம் என்ற சொல்லை மாற்றவேண்டும், அது என்ன பொருள் என்று விளங்கவில்லை' என்று அந்தக் கோப்பு வந்தது. நானும் என்னால் முயன்ற வரையிலும் பார்த்து “குஜிலி“ என்று சொன்னால் குஜராத்தியர்கள் குடியேறிக் கடைவைத்திருந்த இடம் என்பதனால் அந்தக் கடைப்பகுதிக்குப் பெயர் குஜிலிபாளையம் என்று பெயர் வந்திருக்கிறது. இதனை மாற்றுவது என்று சொன்னால் திண்டுக்கல் பகுதியைச் சார்ந்தது என்பதற்காக “குறிஞ்சிப்பாளையம்“ என்று மாற்றலாம் என்று முதலமைச்சரிடம் பணிந்து இந்தக் கோப்பு அனுப்பப்படுகிறது என்று அனுப்பிவைத்தேன். 

 

kalaingar



வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றிச் சொல்வார்கள். அவர் தலைமை அமைச்சராக இருந்தது பெரிதில்லை. அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் ஆறு தொகுதிகள்தான் அவருக்கு ஆங்கில இலக்கியத்திலேயே நோபல் பரிசு பெற்றுத்தந்தது. உலகத்தில் சர்ச்சிலுக்கு அடுத்து மாசேதுங்கைச் சொல்வார்கள். அப்படிப்பட்ட இலக்கிய மனம் உடையவர் என்று. இந்த இரண்டு பேரிடத்தும் காணாத ஒருதிறன், நம் கலைஞரிடம் இருந்தது. ஒரு சான்று சொல்வது என்றால்……அவருக்கு அரசியல் தெரியும். இலக்கியம் தெரியும். கலை தெரியும், சிந்தனை தெரியும், எண்ணுகிற எண்ணங்களையெல்லாம் எப்படி என்று எடுத்துக் காட்டவும் தெரியும். அவர் சிந்திய எழுத்தினுடைய துளிதான் என்னைப் போன்றவர்களையெல்லாம் துணை வேந்தராக ஆக்கியது.

 

kalaingar



12 மணிக்கு நண்பர் சண்முகநாதன் தொலைபேசி யில் கேட்டார் "பொருதடக்கை வாள் எங்கே'’’ என்ற தொடர் எங்கே வருகிறது? என்று. எனக்குக் கேட்டால் எதுவும் நினைவுக்கு வராது. நான் அவரிடத்தில் சொன்னேன். "பொருதடக்கை வாள் எங்கே?'“ என்று பொதுவாகப் போட்டுவிட்டால் போகிறது. யார் அதைக் கவனிக்கப் போகிறார்கள் என்றேன். சண்முகநாதன் சொன்னார், "உங்களுக்கு வேண்டுமென்றால் தூக்கம் வரும். கலைஞருக்கு விடியற்காலை வரையில் தூக்கம் வராது'. அந்தத் தொடரைக் கண்டுபிடித்தால்தான் தூங்குவார். அந்தக் குஜிலிபாளையத்தைப் பற்றிச் சொன்னேனே... அதற்கு ஒரு விளக்கம் எழுதியிருந்தார்.

குறிஞ்சிப்பாளையம் என்று மாற்றுவதில் குற்றமில்லை. ஒரு முதலமைச்சர் எழுதுகிற தொடரைப் பாருங்கள். ஆனால் குஜிலி என்ற சொல் வருகிறபோது அதற்கு பங்கஜம் என்பதைப் பங்கயம் என்று மாற்றுவது போல குயிலம்பாளையம் என்று மாற்றவேண்டும். சிலப்பதிகாரச் சிந்தனை அதைத்தான் சொல்கிறது. இன்றுதான் "இந்து' நாளிதழில் ஒரு கட்டுரையைப் படித்தேன். “எ ரைட்டர் ஸ்டேட்ஸ்மென்“ என்று கலைஞரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். “எ ஸ்காலர் ஸ்டேட்மென்“ என்று. அவருக்குத் தெரியாத கருத்துக்களே இல்லை. அவர் எதைச்சொன்னாலும் அதிலே ஒரு துளி இருக்கும். சிந்தனை இருக்கும். ஒளி இருக்கும். ஆற்றல் இருக்கும்.