1957 ஆம் ஆண்டு இறுதியில், பிரதமர் ஜவஹர்லால் நேரு தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில், கிழவர்கள் என்றும் நான்சென்ஸ் என்றும், நாடுகடத்தப்பட வேண்டியவர்கள் என்றும் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது. தமிழ்நாட்டின் மீதும், தமிழர் தலைவர்களின் மீதும் மத்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் மரியாதையற்ற போக்கு தொடருவதையே நேருவின் பேச்சு உறுதி செய்தது. இதையடுத்து நேருவுக்கு பாடம்புகட்ட திமுக முடிவெடுத்தது.
1957 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் 1958ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது. சென்னையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களவை உறுப்பினர்களும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் திமுகவினர் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
“தென்னக மக்களுக்கு பெருந்தொண்டாற்றும் பெரியார் ஈ.வே.ரா.வை மூட்டை முடிச்சுக்களுடன் நாட்டை விட்டு ஓடச்சொல்லும் - பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பேசும் பண்டித நேரு - பஞ்சம் போக்கினாரா? பட்டினி துடைத்தாரா? விலை ஏற்றம் போக்கினாரா? செல்வம் வளரச் செய்தாரா? எதைச் சாதித்து தந்தார் இந்த நாட்டு மக்களுக்கு?” என்று தொடங்கும் அறிக்கையை திமுக வெளியிட்டு, அமைதியான வழியில் கருப்புக்கொடி காட்டி தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தது.
இந்தப் போராட்டத்தை விளக்கி 1958 ஜனவரி 3 ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி கேட்டு திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா, ஈ.வே.கி.சம்பத், இரா.செழியன், ஆசைத்தம்பி ஆகியோர் பேசுவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். அதாவது 1957 டிசம்பர் 31 ஆம் தேதியிலிருந்து 15 நாட்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாக அன்றைய போலீஸ் கமிஷனர் அருள் தெரிவித்தார். போலீஸ் அனுமதி கிடைக்காவிட்டாலும், திட்டமிட்டபடி ஜனவரி 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திருவல்லிக்கேணி கடற்கரையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அதில் தான் கலந்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அறிஞர் அண்ணா தெரிவித்தார். இதுதொடர்பாக அண்ணா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜனவரி 3 பதட்டத்துடன் விடிந்தது. திமுக பொதுக்கூட்டத்தை தடுப்பதற்காக போலீஸ் தீவிரமான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. பொதுக்கூட்டத்திற்காக மேடை ஏற்பாடுகளை செய்வதற்காக சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டனர். திருவல்லிக்கேணி கடற்கரையைச் சுற்றிலும் லாரி லாரியாக போலீஸார் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். கடற்கரைக்கு வரும் பொதுமக்களையும் விரட்டிக்கொண்டிருந்தனர்.
பிற்பகல் 2 மணியிருக்கும். திமுக தலைமை நிலையத்தில் அண்ணாவும் மற்றவர்களும் கூடியிருந்தனர். கடற்கரையில் போலீஸ் அட்டூழியத்தை அறிந்த வண்ணம் இருந்தனர். ஏராளமான வெளியூர் தோழர்களும் குவிந்திருந்தனர். இந்நிலையில் அண்ணா, ஈ.வே.கி.சம்பத், ஆசைத்தம்பி, இரா.செழியன் ஆகியோருடன் கழகக்கொடி பறக்கும் காரில் புறப்பட்டார். அவர்களைத் தொடர்ந்து நெடுஞ்செழியன், நடராசன், கருணாநிதி, மதியழகன், அன்பழகன், சிற்றரசு ஆகியோரும் இன்னொரு காரில் பின் தொடர்ந்தனர்.
போலீஸ் அதிகாரிகள் அண்ணாவையும் மற்றவர்களையும் காரில் பின்தொடர்ந்தனர். கடற்கரையை நெருங்கும் சமயத்தில் அண்ணா உள்ளிட்ட நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர். அதைத்தொடர்ந்து, கலைஞர் மு.கருணாநிதி தனது காரை செலுத்தினார். உடனே அவரையும் அவருடன் சென்ற மற்ற தலைவர்களையும் கைது செய்தனர். இதையடுத்து திமுகவின் முன்னணி தலைவர்களை கைது செய்யும் போலீஸ் நடவடிக்கை தொடர்ந்தது.
அதேசமயம் கடற்கரையிலும், அதைச் சுற்றிய வீதிகளிலும் அண்ணாவையும் தலைவர்களையும் எதிர்பார்த்து லட்சக்கணக் கான மக்கள் காத்திருந்தனர். அண்ணா கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்ததும் அவர்கள் அண்ணா வாழ்க, காங்கிரஸ் ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்டனர். கட்டுக்கடங்காத இந்த கூட்டத்தை போலீஸார் தடியால் தாக்கியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், குதிரைப்படையை ஏவியும் கலைக்க முயன்றனர். காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். 3 மணிநேரம் போலீஸ் அடக்குமுறை பிரயோகித்த பின்னரே கடற்கரையில் அமைதி திரும்பியது.
தமிழகம் முழுவதும் தடை மீறப்பட்டது. திமுக தலைமை நிலையத்தில் நேரு வரும் 6 ஆம் தேதி வரை போலீஸ் திடீரென புகுவதும், அங்கிருக்கும் தலைவர்களை கைது செய்வதும் தொடர்ந்தது. எம்ஜியார், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். காமராஜ் அரசாங்கம், தமிழக காவல்துறை ஆகியவற்றின் எல்லா தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி கருப்புக் கொடிகளை மறைத்து எடுத்துச் சென்று, நேருவுக்கு வரவேற்பு கொடுப்பவர்களைப் போல குவிந்த திமுகவினர் யாரும் எதிர்பாராத வகையில் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
ஜவஹர்லால் நேரு விமான நிலையத்தை விட்டு வெளியேறியதும் அங்கு கூடியிருந்த கூட்டம் தன்னைக் காணவே வந்திருப்பதாக நினைத்து கையசைத்தபடி வந்தார். அப்போது, கூட்டத்தினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கருப்புத் துணியை எடுத்து வீசியதை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்தார். பிறகு, திறந்த காரில் ஊர்வலமாக செல்லத் தயாரானபோது காமராஜ் நேருவின் சட்டையை பிடித்து இழுத்து காருக்குள் அமரும்படி கூறினார். வழக்கமாக மக்கள் கூட்டத்தைப் பார்த்து நேரு கையசைத்தபடியே செல்வார். அன்றைய பயணம் வேறுவிதமாக முடிந்தது.
இதில் ஏற்பட்ட விரக்தியால்தான் காவல்துறையை ஏவி பழிதீர்த்தார் காமராஜர். ஆனால், இது திமுகவின் மிகப்பெரிய வெற்றியாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பேசப்பட்டது. திமுகவின் கருப்புக் கொடி போராட்டத்தை சமாளிப்பதில் தோல்வி அடைந்த காமராஜ் அரசாங்கம், போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் வசித்த பகுதிகளில் எல்லாம் கொடூரமான போலீஸ் தாக்குதலை நடத்தியது.போலீஸ் தாக்குதலில் காயமடைந்த இருவர் உயிரிழந்தனர். சென்னை நகரம் முழுவதும் காமராஜ் அரசாங்கத்தின் கொலைவெறி தாக்குதல்கள் குறித்தே மக்கள் பேசினர்.
எனினும் இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிவில் கைதான திமுகவினருக்கு 25 ரூபாய் அபராதமும் கட்டத் தவறினால் 10 நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்து சிறைக்குச் சென்றவர்களை இரண்டு நாட்களில் விடுதலை செய்தனர். பின்னர், அபராதத் தொகையை வசூலிப்பதாகக் கூறி அவர்களின் வீடுகளில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து அவமானப்படுத்தினர்.