Skip to main content

திமுக கூட்டணி உடைகிறதா

Published on 27/12/2017 | Edited on 28/12/2017
திமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து! 

ஜெ.வுக்கு பிறகு தினகரனை அதிமுக தொண்ர்கள்     ஏற்றுக்கொண்டார்கள் என்பதை இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது. வெற்றி பெற்ற தினகரனுக்கு வாழ்த்துக்கள்.          ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது குறித்து அக்கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டும். கூட்டணி கட்சிகளும் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

அதுபோலவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், ஜெ.வுக்கு பிறகு தினகரனை    அதிமுக தொண்டர்கள்  ஏற்றுக்கொண்டார்கள் என்பதை இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது என்றார். இதையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் தினகரனை நோக்கித் திரும்புவதாக செய்திகள் பரபரக்கின்றன. இந்த செய்திகளின் பின்னணியை அறிய இரு கட்சிகளின் பிரமுகர்களை நக்கீரன் இணையதளம் தொடர்புகொண்டது...



காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதாரணி கூறியது:-

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்வது அரசியல் நாகரீகம். அந்த வகையில் தினகரனுக்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து கூறியிருக்கிறார். சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியிருப்பதும் சரிதான். எதனால் தோல்வியை சந்தித்தோம் என்று சுயபரிசோதனை செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளுக்கு நல்லதுதான்.

காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சுயபரிசோதனை செய்துகொண்டுள்ளது. அப்போதுதான் நாம் செய்த தவறுகள் புலப்படும். தோல்விக்கு பின்னால் சுயபரிசோதனை செய்யாவிட்டால், அடுத்த தேர்தலை சந்திக்கும்போது தயக்கம் ஏற்படும். ஆகையால் சுயபரிசோதனை என்று மாநிலத் தலைவர் கூறியதில் எந்த தவறும் இல்லை. காங்கிரஸ் மட்டுமல்லாமல் திமுகவும், கூட்டணியில் உள்ள கட்சிகளும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.



அதேநேரம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பொருத்தவரை சின்னம் என்பது இரண்டாம் பட்சமாக மாறிவிட்டது. இந்த ஒரு தொகுதிக்கான தேர்தலை வைத்து கூட்டணி கட்சிகள் எந்த முடிவுக்கும் வரமுடியாது. கூட்டணி தொடர்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணி தொடர்ந்தாலும் ஒவ்வொரு தேர்தல் நேரத்தின்போதும் டெல்லி மேலிடம்தான் கூட்டணியை தீர்மானிக்கும்.

2007 உத்திரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், முலாயம் சிங் கட்சியான சமாஜ்வாடியும் தனித்தனியே போட்டியிட்டன. இரு கட்சிகளும் தனித் தனியாக மாயாவதிக்கு எதிரான பிரச்சாரத்தை முன் வைத்தன. ஆனால் சமாஜ்வாடிதான் பயனடைந்தது. ஆர்.கே.நகரையும் அதேபோலத்தான் ஒப்பீடு செய்ய முடியும். தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு எதிராக அதிமுகவின் இரட்டை இலைதான் போட்டியாக இருந்தது. திமுகவும், தினகரன் அணியும் ஒரே குற்றச்சாட்டைத்தான் ஆளும் கட்சியான அதிமுக மீது வைத்தார்கள். ஆனால் தேர்தல் வெற்றியின் பயனை தனி நபரான தினகரன் பெற்றுவிட்டார் என்றார்.



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னியரசு கூறியது:-

கூட்டணி உடையுமா என்பது பற்றி இப்போது பேசுவது ஆரோக்கியமானது அல்ல. ஆர்.கே.நகரை பொருத்தவரை அதிமுகவுக்குள் யார் என்பதைத்தான் பார்க்கிறார்கள். தினகரனின் வெற்றிக்கு முக்கிய காரணம், இந்த இடைத்தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுகவினர் பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக இரண்டாக உடைந்ததால் திமுக வெற்றி பெற்றுவிடும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்துவிட்டனர்.

ஸ்டாலின் சரியான தந்திரத்தை கடைப்பிடிக்கவில்லை. களத்தில் எதிரி என்ன ஆயுதம் வைத்திருக்கிறாரோ, அதைக்காட்டிலும் வலுவான ஆயுதத்தை நாம் ஏந்தியிருக்க வேண்டும்.  வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை என்று திமுக சொல்வது களத்தை நன்கு ஆய்வு செய்யவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு இயக்கத்தை வழிநடத்துபவர் களத்தில் வெற்றிப்பெறுவதற்கு அனைத்துவித யுக்திகளையும் கையாள வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பொருத்தவரை வேட்பாளர் தேர்விலும் பின்னடைவு உள்ளது. அதை சரி செய்யவில்லை என்றால் அடுத்தடுத்த தேர்தல்களில் இதே பிரச்சனைகள்தான் வரும்.



பென்னாகரம் இடைத்தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றது. இதை உதாரணமாக சொல்லி இடைத்தேர்தல் வெற்றி  பொதுத்தேர்தலுக்கு பொருந்தாது என்று ஆறுதலுக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

பாஜகவின் இந்துத்துவா ஆதிக்கத்தை வீழ்த்தக்கூடிய இடத்தில் திமுக உள்ளது. திமுக தலைமைக்கு அந்த ஆற்றல் இருக்கிறதா என கேள்வி எழுகிறது. ஸ்டாலின் தயங்குகிறாரோ என்ற அச்சம் உள்ளது. அதிமுக உடைந்திருக்கிறது, அதிமுக ஆட்சி மீது அதிருப்தி இருக்கிறது.  இதையெல்லாம் வைத்து திமுக வெற்றிப்பெற்றிருக்க வேண்டும். ஆனால் டெபாசிட் இழந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

எதிரணியினர் பணம் கொடுக்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தால் மக்களுக்கு கோபம்தான் வரும். அதை திமுகவினர் உணரவில்லை.பணம் கொடுப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை என்று சொல்கிறார். நானும் திமுக பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. பணம் கொடுக்காதபடி திமுக தொண்டர் படைகளை இறக்கியிருக்க வேண்டும். அதற்கு என்ன வழி இருக்கு என்பதை கண்டுபிடித்து அந்த வேலையை     செய்திருக்க  வேண்டும்      என்றார்.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்